தருமபுரி அருகே ஒற்றை யானை அட்டகாசம்: விவசாயிகள் வேதனை


தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விளைநிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை மாமரங்களை முறித்து சேதப்படுத்தியது.

பாலக்கோடு அருகிலுள்ள வாழைத்தோட்டம் (BALETHOTTAM) கிராமத்தில் இன்று விளைநிலங்களில் புகுந்த ஒற்றை யானை வயல்களில் இருந்த மாமரங்கள், தென்னை மற்றும் வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது.

இது பற்றி அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, “கடும் வறட்சியின் போது தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி மரங்களை பாதுகாத்து வந்தோம். மாங்காய் அறுவடை நிலையை எட்டிக் கொண்டிருந்த சூழலில் ஒற்றை யானை, மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது. வாழை, தென்னை மரங்களையும் அந்த யானை விட்டுவைக்கவில்லை. இதற்கெல்லாம் உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒற்றை யானையின் நடமாட்டம் சுற்றுவட்டார மக்களை பீதியடைய வைத்துள்ளது. எனவே, அந்த யானையை வனப்பகுதிக்குள் கொண்டுவிட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல பிற யானைகள் ஏதும் வனத்தில் இருந்து வெளியேறாத வகையில் உரிய
ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்றனர்.