கோவை குளங்களின் வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்கும் பணி தீவிரம்


கோவை கவுண்டம்பாளையம் அருகே, சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர்.

கோவை: தென்மேற்கு பருவமழைக்காலம் நெருங்குவதால், கோவையில் குளங்களின் வாய்க்கால்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாநகரில் நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி, பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர், குறிச்சி ஆகிய 9 குளங்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இக்குளங்களின் கரைப் பகுதிகள் பலப்படுத்தப்பட்டு, பொழுது போக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பருவமழைக் காலங்களில் இக்குளங்கள் நிரம்பினால், அதன் உபரி நீர், ஒரு குளத்திலிருந்து அருகேயுள்ள மற்றொரு குளத்துக்கு செல்லும் வகையில் வாய்க்கால்கள் உள்ளன.

இந்த வாய்க்கால்கள் பல்வேறு இடங்களில் செடி, கொடி, புதர்களால் அடைபட்டு கிடப்பதால், அவற்றை தூர் வாரி சீரமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணாம்பதி குளத்துக்கு நாகராஜபுரம், வீர கேரளம் வழியாக 3.50 கிலோ மீட்டர் தூரம், நவாவூர் பிரிவிலிருந்து கருப்பராயன் கோயில் வழியாக 4.60 கிலோ மீட்டர் தூரம், எம்.ஜி.ஆர் காலனியிலிருந்து தெக்கலூர் வழியாக 5.25 கிலோ மீட்டர் தூரம் என 3 வாய்க்கால்கள் உள்ளன. ரூ.15 லட்சம் மதிப்பில் இந்த வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. செல்வ சிந்தாமணி மற்றும் குமாரசாமி குளத்துக்கு இடையே உள்ள 3.75 கிலோ மீட்டர் தூர வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் - செல்வ சிந்தாமணி களத்துக்கு இடையே 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வாய்க்கால் உள்ளது. இவை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. சேத்துமா வாய்க்கால் வழியாக வரும் 4.30 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மற்றொரு வாய்க்காலில் 2.70 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரப் பட்டுள்ளது. மீதமுள்ள இடம் தூர்வாரப்பட்டு வருகிறது. ரூ.22.50 லட்சம் மதிப்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவிநாசி சாலை மேம்பாலம், கூட் செட் சாலையிலிருந்து மழைநீர் வாலாங்குளத்துக்கு வரும் வகையில் ரூ.4.35 கோடி மதிப்பில் வடிகால் ஏற்படுத்தப்பட்டு, தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. வாலாங்குளத்தின் உபரி நீர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று சங்கனூர் ஓடை வழியாக நொய்யலாற்றை அடைய ரூ.9 கோடி மதிப்பில் வடிகால் கட்டப்பட்டுள்ளது. குறிச்சி அணைக்கட்டு வழியாக 3.40 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ராஜவாய்க்கால் வழியாக குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வருகிறது.

ரூ.8.50 லட்சம் மதிப்பில் இந்த வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செங்குளத்துக்கு தண்ணீர் வரும் சென்னனூர்- செங்குளம் கால்வாய், அய்யாசாமி மலையிலிருந்து ராமசெட்டிபாளையம் வழியாக செங்குளம் வரும் வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூர்வாரும் பணிகள் விரைவாக முடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x