தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டப்பட்டது. அதனை கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தில் மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வுக்கான நூல்கள் ஏராளமாக உள்ளன. யுபிஎஸ்சி, கேட், ஐஐடி, ஐஐஎம், நீட், செட், நெட், ஜெஆர்எப், சிஎஸ்ஐஆர் போன்ற நுழைவுத் தேர்வுக்கான நூல்களும், போட்டித் தேர்வுக்கான நூல்களும் உள்ளன. அதேபோல் தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான நூல்களும் உள்ளன. வெளி நாடுகளில் படிக்க டொபெல் (டெஸ்ட் ஆப் இங்கிலீஸ் பாரின் லேங்வேஜ்) நுழைவுத் தேர்வுக்கான நூல்களும், ராணுவத்தில் சேர்வதற்கான தேர்வு நூல்களும் உள்ளன.
இந்த அறிவுசார் மையத்துக்கு சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், ராயகிரி, திருவேங்கடம், குருக்கள்பட்டி, வன்னிக்கோனேந்தல், பாட்டத்தூர், சுப்புலாபுரம், மலையடிப்பட்டி, குவளைக்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் வந்து படிக்கின்றனர். இங்கு பொதுப் பிரிவு வாசிப்பு பகுதி, மகளிர் வாசிப்பு பகுதி, கணிணி, புரஜெக்டர் போன்ற வசதிகள் உள்ளன.
எழுத்து மேசையுடன் கூடிய இருக்கை வசதி, சேர்கள், சுத்திகரிகக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் மதிய உணவு கொண்டு வந்து மாலை வரை படித்துச் செல்கின்றனர். அறிவுசார் மையம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படு கிறது. வாரந்தோறும் வெள்ளிக் கிழமை விடுமுறை ஆகும். பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள ஆர்வத்துடன் இளைஞர்கள், இளம் பெண்கள் அறிவுசார் மையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.