கோவையில் 12 நாட்கள் நடந்த அரசு பொருட்காட்சியை 71,871 பேர் பார்வையிட்டனர்


கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியை காண வருகை தந்த மக்கள். படம்: ஜெ.மனோகரன்.

கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் ஜூன் 9-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற்ற அரசு பொருட்காட்சியை 71,871 பேர் பார்வையிட்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பொருட்காட்சி கோவை, வ.உ.சி மைதானத்தில் கடந்த மே 25-ம் தேதி தொடங்கியது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 27 அரசுத்துறை அரங்களும், 7 அரசு சார்பு நிறுவனங்கள் என மொத்தம் 34 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுது போக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பொருட்காட்சியை காண பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 வீதம் மே 29-ம் தேதி முதல் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஜூன் 9-ம் தேதி வரை மொத்தம் 71,871 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.10,05,915 அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மே 25-ல் தொடங்கிய கண்காட்சி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x