மருத்துவர்களும் எதிர்ப்பு... கட்சியினரும் கடுப்பு!


மருத்துவர்கள் போராட்டம்

கரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய, அரசுத் துறைகளில் முக்கியமானது மருத்துவத் துறை. பெருந்தொற்று அபாயத்துக்கு நடுவே கரோனா நோயாளிகளைத் தொட்டு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்கள் செவிலியர்கள். கொஞ்சம் விலகிநின்று சிகிச்சை அளித்தாலும், அந்த ஆபத்தான வார்டுகளுக்குள்தான் மருத்துவர்களும் பணியாற்றினார்கள். கரோனா தொற்றுக்குள்ளாகி ஏராளமான இளம் மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். இப்படி மருத்துவப் பணியாளர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம்.

தொடரும் நெருக்கடிகள்

இதுவும் கடந்துபோகும் என்று நம்மைப் போலத்தான் மருத்துவப் பணியாளர்களும் நினைத்தார்கள். ஆனால், இன்றுவரை அதே நெருக்கடியில்தான் அவர்கள் இருக்கிறார்கள். கூடுதல் நெருக்கடிகளும் தரப்படுவதாகப் பலர் குமுறுகிறார்கள்.

"கரோனா தடுப்பூசி விஷயத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இலக்கு நிர்ணயிக்கிறார், கடுமையான நெருக்கடியும் கொடுக்கிறார். அவர் 8 அடி பாய்ந்தால், அதிகாரிகள் 16 அடி பாய்கிறார்கள். இதனால் மருத்துவர்களும், செவிலியர்களும் தடுப்பூசி விஷயத்தில் கடும் பணிச்சுமைக்குள்ளாகிறார்கள்.

வாரந்தோறும் நடந்த தடுப்பூசி முகாம்களை இப்போது வாரத்திற்கு 2 நாட்கள் என்று மாற்றிவிட்டார்கள். உண்மையில் ஆர்வம் இருந்த அத்தனை பேருமே தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். இப்போது இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமில்லாதவர்கள். தடுப்பூசி போடுவது கட்டாயமல்ல என்று தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் சிலர் கேட்ட கேள்விக்கு அரசு பதில் சொல்லியிருக்கிறது. இன்னொருபுறம் அதே அரசு, 100 சதவீதம் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கிறது.

அமைச்சரின் நெருக்கடி காரணமாக வீடு வீடாகப் போய் ஊசி போடுகிறோம். விடுமுறை நாளில் காலையில் போனால், ‘இன்னும் சாப்பிடவில்லை மதியம் வாங்க’ என்கிறார்கள் மக்கள். மதியம் போனால், தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து சிக்னலில் எல்லாம் நின்றுகொண்டு ஊசி போட வேண்டியிருக்கிறது. பெண் பணியாளர்கள், கழிப்பறை செல்லக்கூட அடுத்தவர் வீட்டிற்குள் போக வேண்டியதிருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டாலும்கூட, ‘ஏன் இந்த வார இலக்கைப் பூர்த்திசெய்யவில்லை?’ என்று வசவுதான் கிடைக்கிறது" என்று புலம்புகிறார்கள் மருத்துவப் பணியாளர்கள்.

"இந்தக் கொடுமை போதாது என்று ‘வருமுன் காப்போம்’ திட்டத்தின்கீழ் வீடு வீடாகச் சிகிச்சை அளிக்கப் போகிறோம். வீட்டிற்குப் போய் என்ன சிகிச்சை அளிக்க முடியும்? மருந்து மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குத்தானே அழைக்க முடியும்? ஏற்கெனவே, அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லை. அப்படியிருக்கும்போது இப்படி வேலைப் பளுவைக் கூட்டிக்கொண்டே போனால் என்ன அர்த்தம்?" என்கிறார் மருத்துவர் சங்க நிர்வாகி ஒருவர்.

“அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரையில், கூடுதல் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவக் கருவிகள் தான் அதிகம் தேவை. ஆனால், கட்டிடம் கட்டுவதில்தான் கடந்த அதிமுக அரசு ஆர்வம் காட்டியது. தொடர் செலவினங்களைத் தவிர்த்துவிட்டு, ஒரேயடியாகப் பணத்தைப்போட்டு கட்டிடம் கட்டுவது, அதில் குறிப்பிட்ட சதவீதத்தைக் கமிஷனாகப் பெறுவது என்பதே அவர்களது பிரதான நோக்கம். அப்படிக் கட்டி முடிக்கப்பட்ட கட்டிங்களுக்கான மருத்துவ வசதியைச் செய்வதில், இன்றைய அரசு ஆர்வம் காட்டவில்லை” என்றும் பலர் ஆதங்கத்துடன் சொல்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.செந்தில்

மருத்துவர்களின் ஊதியம்

மருத்துவர்களின் ஊதிய உயர்வு தொடர்பாகவும் அரசின் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.செந்தில், “எங்கள் கோரிக்கையை ஏற்று மருத்துவர்களின் ஊதியம் மற்றும் பதவி உயர்வுக்காக, கடந்த ஜூன் மாதம் முதல்வர் அரசாணை (293) பிறப்பித்தார். இந்த அரசாணையால் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிலர் பயன்பெற முடியாமல் இருந்ததால், அதையும் சரிசெய்யக் கோரினோம். மருத்துவர்களில் இன்னொரு பிரிவினர், இந்தச் சம்பள உயர்வு போதுமானதல்ல என்று கூறியதால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசினார். அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, முதல்வரின் ஆணையையே நடைமுறைப்படுத்தாமல் நிறுத்திவைத்துவிட்டார்கள். இன்னும் பலருக்குக் கரோனா கால ஊக்கத்தொகைகூட கிடைக்கவில்லை" என்கிறார்.

இன்னொருபுறம் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் பிரச்சினைகளும் ஏராளம். “மத்திய அரசின் மருத்துவர்களுடன் ஒப்பிடுகையில், தமிழக அரசு மருத்துவர்களுக்குச் சம்பளம் குறைவு என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஊதிய வேறுபாடு 20 முதல் 30 சதவீதம்தான். ஆனால், செவிலியர்கள் உள்ளிட்ட இதரப் பணியாளர்களைத் தமிழகஅரசு கொத்தடிமை போல்தான் நடத்துகிறது. உதாரணமாக, எய்ம்ஸ் போன்ற மத்திய அரசு மருத்துவமனைகளில் புதிதாகத் தேர்வு செய்யப்படும் செவிலியர்களின் ஆரம்பகட்டச் சம்பளம் 75 ஆயிரம் ரூபாய். ஆனால், தமிழக அரசு தேர்வு செய்யும் செவிலியர்களுக்கு வெறும் 14 ஆயிரம்தான் சம்பளம் கொடுக்கிறார்கள். அதுவும் குறிப்பிட்ட ஆண்டுகள் வரையில் பணி வரன்முறை செய்யாமல், ஒப்பந்தப் பணியாளர்களாகவே நடத்துகிறார்கள். அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மருத்துவர்களையே அமைச்சர்களாகப் போட்டார்கள். அந்த அமைச்சர்கள் மருத்துவர்களின் கோரிக்கைக்கு மட்டுமே செவிமடுத்தார்கள். மா.சுப்பிரமணியன், மருத்துவரல்லாத பொதுவான மனிதர். அவராவது எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்" என்கிறார் செவிலியர் சங்க நிர்வாகி ஒருவர்.

திமுகவினரின் கடுப்பு

“சி.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது, மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் பணம் காய்க்கும் மரமாக மட்டுமே பார்த்தார். பணி நியமனத்துக்கு இத்தனை லட்சம், இடமாற்றத்துக்கு இத்தனை லட்சம், உயர் பதவிகளுக்குக் கோடி என்று விலை நிர்ணயம் செய்து, பணத்தை மூட்டை கட்டினார்கள் அப்போது. தமிழக வரலாற்றிலேயே அதிகமான மருத்துவப் பணியாளர்களை பணிநியமனம் செய்த, பணிமாற்றம் செய்த அமைச்சர் என்று வரலாற்றில் இடம்பிடித்தவர் விஜயபாஸ்கர். மா.சுப்பிரமணியன் அமைச்சரான பிறகு அது அப்படியே தடைபட்டுப்போனது” என்று திமுகவினர் மத்தியில் பெருமிதத்துடன் பேசப்பட்டுவந்தது. ஆனால், இப்போது கட்சிக்குள்ளேயே மா.சு-வுக்கு எதிராகக் கடும் புகைச்சல் நிலவுகிறது.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு அடுத்தபடியாக அதிகமான பெண்கள் அரசுப் பணியில் இருக்கிறார்கள் என்றால் அது மருத்துவத் துறைதான். அவர்களுக்கான நியாயமான இடமாறுதலுக்குக்கூட அமைச்சரை அணுக முடியவில்லை என்று புலம்புகிறார்கள் திமுகவினர். மூத்த திமுக அமைச்சர் ஒருவர், "கேவலம் என் குடும்பத்துப் பொண்ணுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்க முடியல... எதுக்கு இந்த ஆட்சி, அதிகாரம்?!" என்று கடுப்பில் கோட்டையிலேயே சத்தம்போட்டதாகச் சொல்கிறார்கள். அவருக்கே அந்த கதி என்றால், சென்னை மாவட்ட திமுகவினரின் கடுப்புக்குக் காரணம் கேட்கவும் வேண்டுமா?

நம்மிடம் பேசிய சென்னை திமுக நிர்வாகி ஒருவர், "வீட்டு வாசலிலேயே, 'பணி நியமனம், இடமாற்றம் தொடர்பாக யாரும் என்னை அணுக வேண்டாம்'னு போர்டு வெச்சிருக்கார் அமைச்சர். நியாயமா கவுன்சிலிங் நடத்தி இடமாற்றம் கொடுக்கணும்னு அவர் நினைக்கிறார். அது சரிதான். ஆனா, ஏற்கெனவே வாங்கிப் பழக்கப்பட்ட அதிகாரிங்க வழக்கம்போல லஞ்சம் வாங்கிட்டுத்தான் எல்லாம் செய்றாங்க. நம்ம கட்சிக்காரங்க நம்மகிட்ட வந்தா, எங்க அமைச்சர் நேர்மையானவர், நியாயமானவர்னு சொல்றோம். அதே ஆட்கள் அந்த அதிகாரிகளைப் பார்த்து டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுவந்து, 'போடா துப்புக்கெட்டவனே...' என்பதுபோல ஒரு பார்வை பார்க்கிறார்கள். இதற்காகவா மா.சு வெற்றிக்காக உழைத்தோம்?" என்றார் கொந்தளிப்புடன்.

ஹோமியோபதி மருத்துவர் முனியராஜா

டாக்டர்களின் அரசியல்

இதெல்லாம் போதாது என்று, மருத்துவப் பிரிவுகளுக்குள்ளும் ஏகப்பட்ட மனக்கசப்புகள் நிலவுகின்றன. அதிலும் மா.சு-வே மையமாக இருக்கிறார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் கே.முனியராஜா, “மருத்துவத் துறையின் கட்டுப்பாட்டில்தான் ஆயுர்வேத, யுனானி, சித்த, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவர்களும் வருகிறார்கள் என்றாலும், அலோபதி மருத்துவர்களே அந்தத் துறையின் அமைச்சர், இயக்குநர் என்று இருந்ததால், இதுவரையில் அது அலோபதி துறையாகத்தான் இயங்கியது. இன்னும் சொல்லப்போனால் மருத்துவத் துறை நோயாளிகளுக்கான துறையாக அல்லாமல் மருத்துவர்களுக்கான துறையாகவே திகழ்ந்தது.

அரசுப் பள்ளியில் படித்து திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவரான மா.சுப்பிரமணியன் அந்தத் துறையின் அமைச்சரானதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் யோகா போன்ற விஷயங்களில் வேறு அவருக்கு நாட்டமிருப்பதால், அவரை ஹீலர் பாஸ்கர் ரேஞ்சுக்குக் கேலி செய்கிறார்கள் அலோபதி மருத்துவர்கள். சமீபத்தில், ’அரசு மருத்துவர்களும் சரி, தனியார் மருத்துவர்களும் சரி... ஏன் இப்படி சிசேரியனை ஊக்குவிக்கிறீர்கள்? முடிந்தளவு சுகப்பிரசவத்துக்கு முயற்சியுங்கள்’ என்று மா.சு பேசியதை கேலி செய்தார்கள். ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து, அமைச்சரையே கடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அலோபதி மருத்துவர்கள்.

திமுக அரசு கல்வித் துறையில் இருந்து பள்ளிக் கல்வித் துறையையும், பொதுப்பணித் துறையில் இருந்து நீர்வளத் துறையையும் பிரித்ததுபோல மருத்துவத் துறையில் இருந்து மரபு மருத்துவத் துறையையும் தனியாகப் பிரிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களது லாபியால் இதர மருத்துவர்கள், அதை நம்பும் மக்கள் மட்டுமின்றி அரசாங்கமே பாதிக்கப்படும்” என்றார்.

மக்கள்தான் இறுதி எஜமானர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் அமைச்சரே!

x