சிறப்பு எஸ்.ஐ குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்


சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்

திருச்சியில் ஆடு திருடர்களை விரட்டிப் பிடிக்க முயன்றபோது வெட்டிக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், பூமிநாதனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருச்சியின் கிராமப்புறப் பகுதிகளில் கறி விற்பனைக்காக ஆடுகள் திருடப்படுவது அதிகரித்திருக்கும் நிலையில், அதைத் தடுக்க போலீஸார் தீவிரம் காட்டிவருகின்றனர். சிறப்பு ரோந்துப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

இன்று அதிகாலை (நவ.21) ஒரு கும்பல் ஆட்டோவில் ஆடுகளைத் திருடிச் செல்வதாக வந்த தகவலையடுத்து, நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், தனது இருசக்கர வாகனத்தில் சென்று அவர்களைப் பிடிக்க முயன்றார். புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள களமாவூர் அருகே பள்ளத்துப்பட்டியில், மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே அவர்களை மடக்கிப் பிடித்தபோது, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச்சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பூமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர், ரோந்துப் பணியிலிருக்கும்போது மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன். இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதனின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

x