ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்திவரும் ‘சாணக்யா’ யூடியூப் சேனல், கடந்த நவ.16 அன்று திடீரென முடக்கப்பட்டது. இதையடுத்து தன்னுடைய சேனல் ஹேக் செய்யப்பட்டதாக அவர் அறிவித்தார் . 48 மணி நேரத்துக்குள் அந்தச் சேனல் மீட்கப்பட்டு, மீண்டும் முடக்கப்பட்டு மறுபடியும் மீட்கப்பட்டிருக்கிறது. ‘சாணக்யா’ சேனலுக்கு என்னதான் ஆனது என்று ரங்கராஜ் பாண்டேவிடம் பேசினோம்.
‘சாணக்யா’ சேனல் ஹேக் ஆனதன் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்?
நான் எதையும் நினைக்கவில்லை. நினைத்தால் சொல்லியிருப்பேன். எந்தவிதமான ஊகங்களுக்கும் போவது ஒரு பத்திரிகையாளனுக்கு அழகல்ல. உண்மையை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். என்னால் ஊகிக்க முடியவில்லை. அதனால்தான் இது தொடர்பாகக் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் கொடுத்திருக்கிறேன்.
உங்கள் சேனல், யூடியூபின் வழிகாட்டுதல்களை மீறியதால்தான் முடக்கப்பட்டது என்று சில ‘ஃபேக்ட் செக்கிங்’ நிறுவனங்கள் கூறுகின்றனவே?
எது ‘ஃபேக்ட்’ என்று தெரிந்தால்தானே, அதை ‘செக்’ பண்ண முடியும்? யூடியூபின் வழிகாட்டுதல்களை மீறினால், எப்படி 24 மணி நேரத்தில் சேனலைத் திரும்ப அனுமதிப்பார்கள்?
யூடியூபில் முறையிட்டிருந்தால் மீண்டும் உங்கள் சேனல் கிடைத்திருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்களே?
முறையிட்டிருந்தால்... கிடைத்திருக்கக்கூடும் என்பதெல்லாம் ஊகங்கள், உண்மைகள் அல்ல!
சில ஆண்டுகளுக்கு முன்னர், ஊடகவியலாளர்கள் சிலர் திமுகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும், ஊடகவியலாளர்கள் கட்சி சார்பற்று இருக்க வேண்டும் என்றும் சர்ச்சை கிளம்பியது. தற்போது நீங்கள் பாஜக பிரமுகர்களோடு மேடை விழாக்களில் கலந்துகொள்கிறீர்கள். ஆக, உங்களுக்கும் அந்த விமர்சனம் பொருந்துமல்லவா?
சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், பத்திரிகையாளர்கள் என்று சொல்பவர்கள் திமுக மேடையில் கலந்துகொண்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரச்சாரம் செய்தது எல்லாம் நடந்தது. இதுவரை நான் பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. என் மேடையில்தான் பாஜகவினர் கலந்துகொண்டனர். மேலும், சாணக்யாவின் முதலாம் ஆண்டு விழாவில் நாங்கள் விருது கொடுத்தது நல்லகண்ணுவுக்கும், குமரி அனந்தனுக்கும். 2-வது ஆண்டு விழாவில் விருது கொடுத்தது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு. அவர்களெல்லாம் எந்தக் கட்சி? பாஜகவின் நிகழ்ச்சிகளில் இதுவரை கலந்துகொள்ளாத நான், திருமாவளவனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விடிய விடியக் கலந்துகொண்டேன். அப்போது நான் விடுதலைச் சிறுத்தை கட்சிக்காரரா?
“நான் ஆளும்கட்சியை ஆதரிக்கவில்லை, ஆளும் அரசாங்கத்தை ஆதரிக்கிறேன். ஏனென்றால், அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது” என்று கூறியிருந்தீர்கள். அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டுவது பத்திரிகையாளர்கள் பணியல்லவா?
விமர்சிக்க வேண்டிய விஷயங்களை விமர்சிக்க வேண்டும், ஆதரிக்க வேண்டிய விஷயங்களை ஆதரிக்க வேண்டும் என்பதே என் கருத்து. எல்லாவற்றையும் ஆதரிப்பது மூடத்தனம். எல்லாவற்றையும் எதிர்ப்பதும் மூடத்தனம்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் பற்றி நீங்கள் விமர்சிப்பதே இல்லையே?
எனக்கு எது சரியென்று நினைக்கிறேனோ, எது எனக்குப் புரிகிறதோ, எது எனக்குப் பிடிக்கிறதோ, எது எனக்கு முக்கியம் என்று தோன்றுகிறதோ அதைத்தான் நான் பேசிவருகிறேன். சொன்ன கருத்து சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமே தவிர, இதை ஏன் பேசவில்லை அதை ஏன் பேசவில்லை என்று கேட்கக் கூடாது. எட்டே முக்கால் கோடி இலவச கேஸ் சிலிண்டர்களை மத்திய அரசு கொடுத்திருக்கிறதே, அதை யார் கொடுப்பார்கள்? ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்குப் பணமாகக் கொடுக்கிறார்களே... அதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வரும்?
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளைக் கொடுப்பதைத் தவிர்த்து இதற்குச் செலவிடலாமே?
தமிழக அரசு ஆண்டுதோறும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துகிறது. பல சலுகைகளை அள்ளி வழங்குகிறது. இது தொழில் முதலீட்டுக்காக அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்கும் வழிமுறைதான். இதை எப்படி குறிப்பிட்ட சிலருக்குச் செய்யும் சலுகை என்று சொல்ல முடியும்? கார்ப்பரேட் என்றால் திருடர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு செலவு இருந்தால் அதற்கு ஒரு வருமானமும் வேண்டும் என்பதே என் கருத்து.