14-வது ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்ட அமைச்சர் ரகுபதி, கலாநிதி வீராசாமி எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணி உரிமையாளரும், இண்டியா சிமென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான சீனிவாசன், கேப்டன் எம்.எஸ்.தோனி, அணியின் முதன்மை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோரும் பங்கேற்றார்கள்.
இந்த மழை வெள்ளக்காலத்தில் முதலமைச்சருக்கு நிறைய வேலைகள் இருக்கும்போது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சையாகியிருக்கிறது. விழா நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பானபோது, கமென்ட் பகுதியில் தமிழக மக்கள் பலர் அதை விமர்சித்து எழுதியிருந்தார்கள். "முதல்வர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது தேவையற்றது, தவிர்த்திருக்கலாம்" என்று ஏராளமானோர் கருத்திட்டிருந்தனர்.
அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் சிலர், "தமிழ்நாடு அணி வென்றால் தமிழக முதல்வர் பாராட்டக்கூடாதா?" என்று எழுதினார்கள். "இது தமிழ்நாடு அணி அல்ல. அந்த அணியில் தமிழர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?" என்று பதிலடி கொடுத்தார்கள் எதிர்ப்பாளர்கள்.
திமுகவினரிடம் கேட்டபோது, முதல்வரின் தந்தையும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு இண்டியா சிமென்ட் சீனிவாசன் நெருங்கிய நண்பர். எனவே, அவரது அழைப்பை முதல்வரால் தவிர்க்க முடியவில்லை என்றும், கலைஞரே தோனியின் ரசிகர் என்பதாலும், பிராமணர் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட்டில் பிராமணரல்லாத டோனியின் சாதனைகளை திமுகவே பாராட்டாவிட்டால் எப்படி என்பதாலும்தான் முதல்வர் பங்கேற்றார் என்றும் கூறுகிறார்கள்.
அண்டை மாநிலங்களில் எல்லாம் சிமென்ட் விலை குறைவாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் சிமென்ட் விலை ரூ.500-ஐ ஒட்டியிருப்பதற்குக் காரணம், சிமென்ட் ஆலை அதிபர்களின் சிண்டிகேட்தான் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. கூடவே, திமுக ஆட்சி வரும்போதெல்லாம் சிமென்ட் விலை உயர்கிறதே என்கிற சந்தேகம் மக்களுக்கு இருக்கிற நேரத்தில், இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருக்கத் தேவையில்லை என்ற கருத்தை திமுகவினரே சொல்வதையும் காணமுடிந்தது.
முதல்வர் பேசும்போது, “மழை வெள்ளத்தால் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் என் மனம் அதில்தான் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. அதில் கொஞ்சம் இளைப்பாறுதலாக சிறிது நேரம் இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். உடனே, அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்துக்கு செல்லவேண்டிய நிலையில் உள்ளேன்” என்றார். மேலும், ”தோனி தமிழகத்தின் செல்லப்பிள்ளை. அவர் ஒரு மஞ்சள் தமிழன்” என்றும் புகழ்ந்துரைத்தார்.
நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான (இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளருமான) அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுடன் முதல்வர் கை குலுக்கியதை, கூட்டணிக் கட்சியினர் கவலையுடன் பார்த்ததையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.