கரூர் பள்ளி மாணவி தற்கொலையிலும் பாலியல் தொல்லை?


சித்தரிக்கப்பட்டது

கரூரில், தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று(நவ.19) மாலை பள்ளியிலிருந்து திரும்பியவர், வீட்டில் பெற்றோர் இல்லாதபோது இந்த துயர முடிவை எடுத்திருக்கிறார்.

அவரது சடலத்தை கைப்பற்றிய போலீஸார், தற்கொலைக்கு முன்பாக அந்த மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர். மாணவியின் அந்தக் கடிதத்தில், “பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் இருக்கவேண்டும்” என்று இறைஞ்சலுடன் குறிப்பிட்டுள்ளாராம். பாலியல் தொல்லை தொடர்பான தற்கொலை என்பதை உறுதிபடுத்தும் ஆதாரங்கள் குறித்தும், போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கோவை தனியார் பள்ளி மாணவி, ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் பாலியல் புகார்கள் வெடித்த வண்ணம் உள்ளன. அவை தொடர்பான உரையாடல்கள் என்ற பெயரில் ஒலிப்பதிவுகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

பாலியல் தொந்தரவு தொடர்பான விழிப்புணர்வும், எதிரான புகார்களும் சமூக மாற்றத்துக்கானவை. அதேவேளை, கரூர் மாணவி கடிதத்தில் உள்ளதாகக் கூறப்படுவது போல, பாலியல் தொல்லையால் இன்னொரு விபரீதம் நடைபெறாதிருப்பது அவசியம். அதற்கு வீடுதோறும் தங்கள் குழந்தைகளின் குரல்களுக்கு செவிகொடுப்போராக பெற்றோர்-பெரியோர் மாற வேண்டும். அன்றாடம் சற்றுநேரமாவது குழந்தைகளுக்காக நேரம் செலவழிப்பவராகவும், அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராவதும் முக்கியம்.

கரூர் துயர சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் திமுக எம்பி கனிமொழி, ”குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை எதிர்க்கவும், எந்த ஒரு அச்ச உணர்வுமின்றி அதுகுறித்த புகாரை வெளியே சொல்வதற்குமான பாதுகாப்பான சூழலை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த அவல நிலையை மாற்ற, இனியும் இம்மாதிரியான கொடும் சம்பவம் நிகழாமல் தடுக்க நாம் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

x