வெள்ள அபாயத்தில் மதுரை; வைகையில் கைவைக்குமா அரசு?


கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

பாலாற்றில் 118 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. அது செத்துப்போன ஆறு என்று நினைத்து, ஆக்கிரமித்துக் கட்டிடங்களைக் கட்டியவர்கள் எல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக் கிறார்கள். சென்னை கூவம், அடையாற்றங்கரைகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதுதான் நடந்தது. நாளை வைகை ஆற்றிலும் முன்புபோல் வெள்ளம் வரலாம், யார் கண்டது?

இந்த மாதத் தொடக்கத்தில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடந்த நீர்நிலைகள் குறித்த நிகழ்வொன்றில் பங்கேற்றுப் பேசிய ‘இந்தியாவின் தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங், ஒரு கருத்தைச் சொன்னார். “தமிழகத்தில் உள்ள எல்லா நதிகளும் அவசரச் சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருக்கின்றன. உடனடியாக நாம் நதிகளைக் கவனிக்காவிட்டால், நம் வாழ்வை நாம் நிம்மதியாகத் தொடர முடியாது. ஒவ்வொரு நதிக்கும் 3 வகையான உரிமைகள் இருக்கின்றன. நில உரிமை, நீரோட்டவுரிமை மற்றும் தூய்மையுரிமை.

ஒவ்வொரு நதிக்கும் அதனுடைய நில உரிமையில் 3 வகைகள் இருக்கின்றன. வழக்கமாக நதி பாயும் பகுதி, வெள்ளம் ஏற்பட்டால் நதி விரியும் பகுதி, கடும் வெள்ளம் ஏற்பட்டால் நதி பரவும் பகுதி. தமிழ்நாட்டின் நதிகள் அனைத்துமே 3 வகையான நிலவுரிமையையும் பறிகொடுத்திருக்கின்றன; இதுபோலவே நீரோட்டவுரிமையையும், தூய்மைவுரிமையையும் பறிகொடுத்திருக்கின்றன.

ஆற்றின் மொத்தத் தண்ணீரில் 20 சதவீதத்தையாவது ஆற்றின் வழியே ஓடிக்கொண்டிருக்க அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், ஆறு ஆக்கிரமிக்கப்படுவதுடன், கழிவுநீர் குட்டையாக மாறி அதன் சுற்றுச்சூழலே கெட்டுவிடும்” என்றார் அவர்.

இந்தக் கருத்தை கடந்த வாரம் மதுரை வண்டியூர் பூங்காவில் நடந்த நிகழ்விலும், மீனாட்சி அரசு கல்லூரியில் நடந்த நிகழ்விலும் மீண்டும் மீண்டும் சொன்னார் அவர். அது அரசிடமோ, அதிகாரிகளிடமோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அவர் கடைசியாக பேசிய மீனாட்சி அரசு கல்லூரியே, ஆற்றுநீர் விரியும் பகுதியில்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால், பக்கத்திலேயே ஒரு பிரம்மாண்ட ஜவுளிக்கடை ஆற்றுக்குள்ளேயே கட்டப்பட்டிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். அதிகாரிகளுக்கும் தெரியும். தேர்தல் நிதி வாங்கிய கட்சிக்காரர்களுக்கும் தெரியும்.

இருகரை தொட்டு ஓடும் வைகை

தமிழகத்தில் மிக மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நதிகள் பட்டியலை எடுத்தால், அதில் வைகை ஆறும் வரும். குறிப்பாக, மதுரை மாநகருக்குள் வைகை ஆறு கடும் நெருக்குதலுக்குள்ளாகியிருக்கிறது. இரு கரையிலும் குறைந்தது அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆறு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. முதலில் சாதாரண மக்கள், அடுத்து பெரிய பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு கட்டுமானங்கள் என்று மதுரை நகருக்குள் மட்டும் குறைந்தது 10 ஆயிரம் கட்டிடங்கள் ஆற்றுக்குள் இருக்கின்றன. அதை எல்லாம் சட்டபூர்வமாக அங்கீகரித்ததைப்போல, அந்த குடியிருப்புகளுக்கும் ஆற்றுக்கும் நடுவே புதிய கரையை உருவாக்கி, அதன் மீது பளபளக்கும் சாலை அமைத்து எல்லாவற்றையும் மூடிமறைத்துவிட்டது மாநகராட்சியும், மாநில நெடுஞ்சாலைத் துறையும். எழில்மிகு நகர் திட்டத்துக்கான (ஸ்மார்ட் சிட்டி) நிதியும் இந்த ஊரைக்கெடுக்கும் வேலைக்கு கணிசமாகச் செலவிடப்பட்டிருக்கிறது.

மூலவைகையிலிருந்து வரும் நீர்வரத்து பெரிய அளவில் இல்லை என்றாலும், பெரியாறு தண்ணீர் காரணமாக வைகை அணை இந்த ஆண்டு வேகமாக நிரம்பியது. முழுக்கொள்ளளவான 71 அடியை எட்டினால், திடீரென்று அதிகப்படியாக வரும் வெள்ளத்தைச் சமாளிக்க முடியாமல் போகும் என்று கூறி, 69 அடியாக இருக்கும்போதே வரத்துத் தண்ணீர் எல்லாம் உபரிநீராக ஆற்றில் திறக்கப்பட்டன. கூடவே, வைகை கால்வாய், பெரியாறு கால்வாய், உசிலம்பட்டி பகுதிக்கான 58 கிராம கால்வாய் போன்றவற்றுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக, இன்னமும் வைகை நீர்மட்டம் 70 அடிக்குள்ளாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது. (அதற்குமேல் தேக்கினால் அணைக்குள் இருக்கிற ஆக்கிரமிப்புகள் மூழ்கிவிடும் என்ற அச்சமும் ஓர் காரணம்!) சென்னையிலோ, குமரியிலோ பெய்ததைப் போன்ற மழை வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்தால், வைகையிலும் பெருமளவு வெள்ளம்வர வாய்ப்புண்டு. அப்படி ஏதாவது நடந்தால், பெரிய அழிவு மதுரையில்தான் நடக்கும்.

மாநகராட்சி, வருவாய்த் துறை, நீதித் துறை என்று யாராலும் மீட்டுத்தர முடியாத வைகை நதிக்கரை ஆக்கிரமிப்புகளை, அந்த வைகை ஆறே கண்டுபிடித்து மீட்டுக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் வார்த்தைகளில் சொன்னால், யானையைப் போலவே ஆற்றுக்கும் நினைவாற்றல் அதிகம். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அதன் பாதை அதற்குத் தெரியும்.

அப்படி எந்த அழிவும் ஏற்படாது, ஏற்படக்கூடாது என்பதே நமது நம்பிக்கை. அதேநேரத்தில், வைகை ஆற்றில் தண்ணீரை ஓடவிடுங்கள் என்று சொல்லியே ஆக வேண்டும். இப்போது ஓடுகிற உபரிநீரைச் சொல்லவில்லை. கோடையிலும் காவிரி, தாமிரபரணி போல வைகையிலும் கொஞ்சம் தண்ணீரை ஓட அனுமதித்தால்தான் அந்த ஆறு ஆறாக இருக்கும்.

ஒவ்வொரு ஆற்றிலும் அதன் கடைமடை மக்களுக்குத்தான் உரிமை அதிகம் என்கிறது சர்வதேச நதிநீர்ச் சட்டம். இதைச் சொல்லித்தான் காவிரி பிரச்சினையிலும் நமது மாநில அரசு வாதாடுகிறது. ஆனால், வைகை விஷயத்தில் மட்டும் நம்முடைய அரசே அதைக் கடைபிடிப்பதில்லை. வைகை ஆற்றில் ஓட வேண்டிய தண்ணீரை எல்லாம் வைகை அணை, பெரியாறு அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணைகளில் தேக்கிவைத்துக்கொண்டு அவற்றை எல்லாம் தேனி, மதுரை மாவட்டங்களுக்கே அதிகப்படியாக தருகிறது அரசு. உரிமையைக் கேட்கும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளை ஏமாற்றுவதற்காக இதற்கொரு பொய்க்கணக்கையும் சொல்லிவிடுகிறார்கள் நம் அதிகாரிகள்.

அதாகப்பட்டது, வைகை அணையில் இருக்கும் தண்ணீரை கற்பனையாக வைகைத் தண்ணீர், பெரியாறு தண்ணீர் என்று பெயர் வைக்கிறார்கள். அணையில் பெரியாறு கிரெடிட் இவ்வளவும், வைகை கிரெடிட் இவ்வளவும் இருக்கிறது. இதன்படி உங்களுக்கு இவ்வளவுதான் தர முடியும் என்று புளுகுகிறார்கள். எப்படி கர்நாடகா நமக்குத் தண்ணீர் தேவைப்படும்போது தராமல், வெள்ளம் வரும்போது காவிரியில் தண்ணீரை மொத்தமாகத் திறந்துவிடுகிறதோ அதேபோல, இவர்களும் வைகையில் வெள்ளம் வரும்போது திறந்துவிடுகிற தண்ணீரை இதுதான் உங்களுக்கு நாங்கள் தர வேண்டிய தண்ணீர் என்று சொல்லி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றுகிறார்கள்.

பாவம் அம்மக்களுக்கு இது குடிநீருக்கே போதுமானதாக இல்லை. இதன்காரணமாகத்தான், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி, திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து தண்ணீரை குழாய் வழியாக இந்த 2 மாவட்டங்களுக்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறது அரசு. அதாவது, வைகைத்தாயின் பிள்ளைகள் காவிரியிடம் புட்டிப்பால் குடிக்கிறார்கள்.

சுற்றுச்சூழல், காட்டின் பரப்பு அதிகரிப்பு, இயற்கை வள மீட்பு போன்ற கோஷங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு, இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். நாம் கண்டுகொள்ளாமல் விட்டால், வெள்ளத்தைச் செலுத்தி தன் மீது கவனத்தை ஈர்ப்பது வைகைக்கு ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. ஏற்கெனவே, 1990-களில் அப்படியொரு வெள்ளம் வந்த ஆறுதான் வைகை ஆறு!

x