பறந்து பறந்து அடிக்கும் அண்ணாமலை!


அண்ணாமலையின் படகுப் பயணம்

ஆள் தனுஷ் மாதிரி இருந்தாலும், ரஜினி மாதிரி பறந்து பறந்து சண்டை போடுகிறார் அண்ணாமலை. ஒருநாள் மதுரை, அடுத்த நாள் தேனி, இன்னொரு நாள் பசும்பொன், கோவை, கரூர், ஈரோடு, திருப்பூர், சென்னிமலை என்று பம்பரமாகச் சுற்றுகிறார் மனிதர். ஆர்ப்பாட்டம், போராட்டம், கல்யாணம், காதுகுத்து, புதுமனை புகுவிழா, பாராட்டு விழா, அஞ்சலிக்கூட்டம் என்று எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும், அவரது பிரதான நோக்கம், போகிற இடமெல்லாம் திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் போட்டுத் தாக்குவது.

அண்ணாமலையின் அதிரடி

"1951-ல் பாரதிய ஜன சங்கமாக தோன்றி, 1980-ல் பாரதிய ஜனதா கட்சியாக மாறிய அக்கட்சி, நேரடியாகவும், தனது பரிவார அமைப்புகளின் மூலமும் பல்வேறு களப்பணிகளைச் செய்ததன் விளைவு, இப்போது பாஜகவின் இலக்கு நோக்கிய பாதையில் இருந்த படுகுழிகளும், தடைகளும், முட்களும் நீங்கியிருக்கின்றன. பாஜகவால் ரதம் அல்ல, கட்டை வண்டிகூட ஓட்ட முடியாமல் இருந்த ஒரு மாநிலத்தில், ஜிப்ஸி ஜீப்பில் ஜிவ்வென பறக்கிறார் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை" என்று 3.10.2021 தேதியிட்ட 'காமதேனு' இதழில் எழுதியிருந்தோம்.

அதனுடைய தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையை வைத்துக்கொள்ளலாம். மனிதர் பறந்து பறந்து சண்டை போடுகிறார் என்பது உண்மைதான். கடைசியில் என்னவாகிறது என்றால், பம்பரக் கண்ணாலே படத்தில் வருகிற வடிவேலு காமெடி போல, அவர் விருட்விருட்டென்று ஜம்ப் பண்ணி அடிக்கப் போகும்போது அவரது இலக்கு ஒரு சாண் விலகிவிட, இவர் மண்டை பிளந்துவிடுகிறது.

"தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்கு, கொளுந்தியா மகள் சடங்கில் கலந்துகொள்ளச் செல்வதே காரணம்" என்று யாரோ சமூக வலைதளத்தில் கேலியாக எழுதியதை உண்மையென நம்பி அதை அப்படியே பேட்டியிலும், அறிக்கையிலும் சொன்னார் அண்ணாமலை. கோபமான பி.டி.ஆர், "எனக்கு கொளுந்தியாளே இல்லை. இல்லாத அவரது மகளுக்கு எப்படி விழா நடக்கும்? பொய் சொல்வதற்குக்கூட குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப்போனவங்களா" என்று கடுமையாக எதிர்வினையாற்றினார்.

ஆனாலும்கூட, அடுத்த ஊர், அடுத்த பஞ்சாயத்து என்று சட்டையை மாற்றியபடி போய்க்கொண்டே இருக்கிறார் அண்ணாமலை. முல்லை பெரியாறு தொடர்பாக மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், "அணையின் நீர்மட்டம் குறையக் குறைய பாசனப் பரப்பு குறைந்துகொண்டே வரும். 2 லட்சத்து 41 ஆயிரம் கோடி பாசனம் இருந்தது, இன்று 71 ஆயிரம் கோடியாக குறைந்துவிட்டது" என்று உளறியவர், "மரம் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்த கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், பினராயி விஜயனோ நான் எங்கே அனுமதி கொடுத்தேன் என்று முகத்தில் அடிப்பதுபோல பதில் எழுதிவிட்டார்" என்றும் பேசினார். ஆனால், அப்படி எந்தக் கடிதமும் கேரளத்தில் இருந்துவரவில்லை என்பது உறுதியானதும், மறுபடியும் வசைகளுக்கு ஆளானார் அண்ணாமலை.

அடுத்து சென்னை வெள்ளப் பகுதிகளை பார்வையிடச் சென்றவர், சில சாப்பாட்டுப் பொட்டலங்களையும், சில கோரைப்பாய், போர்வைகளையும் நிவாரணமாகக் கொண்டுபோனார். அதை வைத்துக்கொண்டு அவர் பண்ணிய அலப்பறை கேலிக்குள்ளானது. முழங்கால் அளவுக்குக்கூட அல்ல, வெறும் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் ஓடுகிற தெருக்களில் படகில் ஏறி, வெள்ளச் சேதத்தைப் பார்வையிடச் சென்றதை நேரடியாக தனது முகநூல் பக்கத்தில் லைவ் செய்தார் அண்ணாமலை. அந்த கணுக்கால் தண்ணீரை, பெரிய வெள்ளக்காடாக காட்டுவதற்காக அவர் நடத்திய போலியான போட்டோ ஷூட்டை தனி வீடியோவாகவே பதிவுசெய்து இணையத்தில் பரப்பிவிட்டது அவருடன் இருந்த 'கருப்பு ஆடு' ஒன்று.

முதல்வரின் தொகுதியான கொளத்தூருக்கே போய், மக்கள் குறைகேட்கப் போனார் அண்ணாமலை. "சி.எம்.மோட தொகுதி எப்டி இருக்குன்னு பார்க்கலாம்னு வந்தேங்கம்மா... ஒவ்வொரு மழைக்கும் இந்த மாதிரி இருந்தா என்னம்மா அர்த்தம்? 2015-லேயும் இதே இது. 2021-லேயும் இதே இது..." என்று அவர் நீட்டி முழக்க, கேட்டுக்கொண்டிருந்த வயதான பெண்மணி, "நீங்க இப்ப என்ன பண்ணப் போறீங்க... அதச் சொல்லுங்க முதல்ல" என்று கேட்டார். ”சாப்பாடு பொட்டலம்” என்று அவர் பதில் சொல்ல, ”அதெல்லாம் ஒண்ணும் வேணாம்” என்று சொல்லிவிட்டார் மூதாட்டி. அந்த இடத்தில் அண்ணாமலையின் மானம் அவருக்கு முன்னால் படகேறிப்போனது. ”பால் வாங்கப் போறவங்களே நடந்து போயிட்டிருக்கோம், படம் எடுக்கிறதுக்கு போட்ல போறாங்களே?” என்று அந்தப் பகுதி பெண்களை மூக்கில் விரல் வைக்க வைத்ததுதான் அண்ணாமலையின் சாதனை.

என்ன செய்திருக்க வேண்டும்?

பள்ளிக்கூடம் போனார்களோ இல்லையோ, பொதுவாகவே வியாபாரிகளுக்கும், வணிகர்களுக்கும் புத்திசாலித்தனம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இல்லையென்றால், அவர்களால் அந்தத் தொழிலில் குப்பை கொட்ட முடியாது. இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஒன்றில் வெற்றிபெற்று, ஐபிஎஸ் அதிகாரியாகப் பணிபுரிந்த ஒருவர் அரசியலுக்கு வரும்போது, இன்னும் சில கூடுதல் தகுதிகளை பொதுஜனம் எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால், அண்ணாமலை பல இடங்களில் சொதப்புகிறார். அவருடன் இருப்பவர்கள் தவறாக வழிநடத்தினாலும்கூட, ”ச்சீ.. ச்சீ... இதெல்லாம் வேணாம்” என்று மறுக்கிற தைரியமாவது அவரிடம் இருக்க வேண்டும். அதெல்லாம் இல்லாததால், செல்லுமிடமெல்லாம் மூக்குடைபடும் சூழல் ஏற்படுகிறது. காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, அண்ணாலையின் இந்த போட்டோ ஷூட் வீடியோவை தனது முகநூல் கணக்கில் பகிர்ந்து, ‘ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடுவது என்ன மாதிரியான மனநிலை?’ என்று பகடி செய்திருந்தார்.

காங்கிரஸ் அலுவலகத்தில்...

காங்கிரஸ் மட்டும் ரொக்கமா? என்று கேட்கலாம். சென்னை வீதிகளில் அண்ணாமலை படமும், படகும் ஓட்டிக்கொண்டிருந்த வேளையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்யமூர்த்தி பவனில், 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதற்காக கல்யாண மண்டபம் போல ராப்பகலாக வேலை நடந்துகொண்டிருந்தது. ஆனால், எந்த விளம்பரமோ, வீடு வீடாகப் போய் ”நாங்க இருக்கோம், நாங்க மட்டும்தான் இருக்கோம்” என்கிற சுய தம்பட்டமோ எந்தக் காங்கிரஸ்காரர்களும் செய்ததாகத் தகவல் இல்லை.

இத்தனைக்கும் காங்கிரஸ்காரர்களில் முக்கால்வாசிப்பேர் போன நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். இளைஞரான அண்ணாமலை இன்னும் எம்ஜிஆர் காலத்து அரசியலைச் செய்வாரானால், இங்கே கேலிப்பொருளாவதைத் தவிர்க்கவே முடியாது. இப்போதெல்லாம் அண்ணாமலை கொஞ்சம் அடாவடியாகப் பேசவும் தொடங்கியிருக்கிறார். அதுவாவது எச்.ராஜா போன்றோரிடம் இருந்து ஒட்டிக்கொண்டிருக்கும் என்று மன்னித்துவிடலாம். ஆனால், இந்த அறியாமை அவருக்கு யாரிடம் இருந்து வந்திருக்கும்?

காங்கிரஸ் அலுவலகத்தில்...

x