கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக இன்று (திங்கட்கிழமை) தண்ணீர் திறக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால், ஆனைமலை பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும் , புதிய ஆயக்கட்டில் வேட்டைக்காரன் புதூர் கால்வாயில், 11181 ஏக்கர், பொள்ளாச்சி கால்வாயில், 23488 ஏக்கர் மற்றும் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அத்துடன் 200- க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
அணையின் நீர் இருப்பைப் பொறுத்து பழைய, புதிய ஆயக்கட்டுகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த இரண்டு வார காலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிஏபி தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இன்று அணையின் நீர்மட்டம் 79.20 அடியாக உயர்ந்தது.
இந்தாண்டு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து நீர்வளத் துறையினரும் அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தனர். இந்நிலையில் இன்று ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகாரிகள் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
இதனால் காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவிளங்கால், வடக்கலூர், பெரியணை ஆகிய 5 வாய்கால்கள் வழியாக 6400 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி பெறுகிறது. இது குறித்து நீர்வளத்துறையினர் கூறும்போது,‘பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து இன்று ஜூன் 10ம் தேதி முதல், அக்டோபர் 24 ம் தேதி வரை 136 நாட்களுக்கு நீர் இருப்பினை பொறுத்து ஆழியாறு அணையிலிருந்து 1020 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பாசன தேவைக்கேற்ற தண்ணீர் திறந்து விடப்படும்.
இதனால் ஆனைமலை டெல்டா பகுதியில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன பெறும் என்றனர். இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலு, ஆழியாறு அணை உதவி பொறியாளர் கார்த்திக் கோகுல், ஆனைமலை வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.