சென்னை காவல் துறைக்கு நடமாடும் ஆளில்லா விமானக் காவல் பிரிவு


இந்தியாவில், காவல் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில், சென்னை காவல் துறை முதன்மையாக உள்ளது. குற்றங்களை குறைப்பதற்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கும் உதவியாக இருக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஆளில்லா விமானக் காவல் பிரிவு அமைப்பதற்கான பரிந்துரைக் கடிதத்தை, சென்னை காவல் துறை ஆணையரகம், அரசுக்கு அனுப்பியிருந்தது.

அதில் முதற்கட்டமாக மெரினா அல்லது பெசன்ட் நகர் கடற்கரை அல்லது பாண்டி பஜார் பகுதிகளில் தற்காலிக ஆளில்லா விமானக் காவல் பிரிவு அலுவலகம் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் ஆளில்லா விமானத்தை வைத்துப் பராமரிப்பதற்குரிய கட்டமைப்புடன் அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 3 வகையான 9 ஆளில்லா விமானங்கள் வேண்டும் என கோரப்பட்டது.

உடனே உதவும்படியான அதிக சக்திவாய்ந்த கேமராக்கள், இருளிலும் காட்சிகளைப் பதிவுசெய்யும் வகையான கேமராக்கள், ஒலிபெருக்கி மற்றும் 2 கி.மீ தூரத்துக்கு 30 நிமிடம் தொடர்ந்து பறக்கும் 6 ஆளில்லா விமானங்களும், நீண்ட தூரத்தை கண்காணிக்கும் வகையில், சுமார் 100 நிமிடங்களுக்கு 30 கி.மீ வரை செல்லும் வகையில் 2 விமானங்களும், அதிக திறன்கொண்ட, அதிக எடை சுமந்தபடி சுமார் 15 நிமிடங்கள் ஒரு கி.மீ தூரம் பறக்கும் வகையான விமானம் ஒன்றுமாக அந்த 9 விமானங்களின் தேவைகள் பற்றி அந்தக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கட்டுப்பாட்டு அறை போன்ற அலுவலகம் அமைக்கவும், ரூ.3 கோடி செலவில் 9 ஆளில்லா விமானங்கள் வாங்க அரசிடம் நிதியும் கோரப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர், ‘சென்னையில் கூட்டமான இடங்களையும் நீண்டதூர சாலைகளையும் கண்காணிப்பதற்காக ரூ.3 கோடியே 60 லட்சம் செலவில் நடமாடும் ஆளில்லா விமானக் காவல் பிரிவு அமைக்கப்படும்’ என அறிவித்திருந்தார்.

தொடர்ந்து, அரசு இதை ஆய்வு செய்து, சென்னை காவல் துறைக்காக நடமாடும் ஆளில்லா விமானக் காவல் பிரிவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த ஆளில்லா விமானக் காவல் பிரிவு அமைப்பது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஆளில்லா விமானப் பிரிவு துறையுடன் இணைந்து செயல்படுமாறு தமிழக டிஜிபிக்கு, அரசு உள்துறைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

x