ரூ.9-க்கு 3 வகையான பொருட்கள்: கடை திறப்பு விழாவில் வாடிக்கையாளர்கள் மீது  போலீஸ் தடியடி


கோப்புப்படம்

சென்னை: கொளத்தூரில் 9 ரூபாய்க்கு 3 வகையான துணி அல்லது காலணிகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பால் திரண்ட மக்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தடியடி நடத்தி பொது மக்களை போலீஸார் கலைத்தனர்.

சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் புதிய கடை ஒன்று திறக்கப்பட்டது. அந்த கடையை பிரபலப்படுத்தும் வகையில் முதல் நாளில் 9 ரூபாய்க்கு 3 காலணி ஜோடி அல்லது 3 வகையான துணிகளை பெற்றுக் கொள்ளலாம் என அக்கடை நிர்வாகிகள் விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை 9 மணிக்கு கடை திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலே பொது மக்கள் அந்தகடை முன்பாக நீண்ட வரிசையில் திரள ஆரம்பித்தனர். திட்டமிட்டபடி நேற்று காலை கடை திறக்கப்பட்டது. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் முண்டியடித்து கடைக்குள் நுழைந்தனர். அதிக கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

நெரிசலில் சிக்கி மயக்கம்: தகவல் அறிந்து போலீஸார் அங்கு விரைந்தனர். வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்த முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதற்கிடையில் நெரிசலில் சிக்கிசிலர் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மயங்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், தள்ளுமுள்ளு தொடர்ந்ததால் போலீஸார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். மேலும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கடை திறந்த ஒரு மணி நேரத்திலேயே மூடப்பட்டது