'திரௌபதி’, ’ஜெய் பீம்’ ஒப்பீட்டு ட்விட்டைப் பகிர்ந்த திருமாவளவன்!


அன்புமணி, திருமாவளவன்

'ஜெய் பீம்' படத்தை ஆட்சேபித்து வன்னியர் சங்கமும், பாமகவும் கடுமையாகக் களமாடிக்கொண்டிருக்கின்றன. “எதிர்க்கட்சியான பாமக கையில் எடுத்துப்போராட, தமிழ்நாட்டில் பிரச்சினைகளா இல்லை... ஏன் இப்படி ஒரு சினிமாவை முன்வைத்து வன்முறையையும், வெறுப்புப் பிரச்சாரத்தையும் முன்னெடுக்கிறார்கள்” என்று இன்னொரு தரப்பினர் கூறிவருகின்றனர். கூடவே, மோகன்.ஜி-யின் திரௌபதி படம் குறித்தும் அவர்கள் விமர்சித்தார்கள். இப்படி இரு தரப்பு கருத்துகளும் சமூக வலைதளங்களில் குவிந்துவருகின்றன.

இந்தச் சூழலில், விஜய் என்கிற இளைஞர் ட்விட்டரில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில், ‘திரௌபதி படத்துல ஒரு கேரக்டர அச்சு அசலா, திருமாவளவன் மாதிரிதான் காட்டியிருந்தார் இயக்குநர் மோகன்.ஜி. அதுபற்றி திருமாகிட்ட கேட்டப்ப, அந்தப் படத்தை நான் பார்க்கல. பார்க்க நேரமும் இல்ல. அதுபத்தி கருத்துச் சொல்ல ஒண்ணும் இல்ல என்று சொல்லி முடிச்சிட்டார். விசிககாரங்க அதைப் பெருசு பண்ணியிருந்தாங்கன்னா, பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் சாதிக்கலவரமும் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். திருமா தன் கட்சியினரை அதை எளிதாகக் கடந்துபோகச் சொல்லிட்டார். அதுதான் தலைமைப் பண்பு. அன்புமணி அப்பாவி வன்னியர் இளைஞர்களை அரசியல் சுயலாபத்துக்காக தூண்டிவிடுகிறார். பாவம் அவர்கள்’ என்று கூறியிருந்தார். பல ஆயிரம் பேரால் அந்த ட்விட் பகிரப்பட்டது.

திருமா ட்வீட்...

கடைசியில் அது விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் கண்களிலும் பட்டுவிட்டது. அதை அவரும் பகிர்ந்தார். கூடவே, ஒரு குறிப்பையும் எழுதியிருக்கிறார். ‘இந்த ட்விட்டை செய்துள்ள தம்பி விஜய் யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறனுக்கு எனது மனமார்ந்த நன்றி. இவரைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்லுவதுதான் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது’ என்று கூறியிருந்தார்.

அறியாமை காரணமாக, சாதாரண சினிமாவுக்கு எதிராக ஒரு சாதி இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கியெழுந்தால், அவர்களைத் தடுத்து சாந்தப்படுத்துவதுதான் அந்தச் சாதித் தலைவர்களின் முக்கியமான கடமை. அதைவிட்டுவிட்டு பாமகவும், படித்தவரான அன்புமணியும் இப்படி நடந்து கொள்கிறார்களே என்ற விவாதத்தை, இளைஞர் விஜயின் ட்விட்டர் பதிவு முன்னெடுத்திருக்கிறது.

x