'ஜெய் பீம்' விவகாரம்: ரஜினியும் கமலும் வாய் திறப்பார்களா?


'ஜெய் பீம்' திரைப்படம் வன்னியர்களை இழிவுபடுத்துகிறது என்கிற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அப்படத்தில் இடம்பெற்ற அக்னி குண்டம் காலண்டரை மாற்றியது படக்குழு. ஆனாலும், இந்தப் படத்தை எடுத்ததற்காக 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்வோம் என்று வன்னியர் சங்கமும், பாமகவும் படக்குழுவினருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினர். கூடவே, சூர்யாவைத் தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என்று மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் அறிவிப்பும் வெளியிட்டார். இது, இந்தப் பிரச்சினையை சிக்கலுக்குரியதாக மாற்றியிருக்கிறது.

வன்னியர் சங்கத்துக்கு ஆதரவாக வேறுசில சாதிச் சங்கங்களும் களத்தில் குதித்த நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கு ஆதரவாக, சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா களத்தில் குதித்துள்ளார். அவர் அன்புமணி ராமதாஸுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "சினிமாவை விட்டுவிடுங்கள். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். இப்படியே போனால், ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வீட்டு வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது" என்று கூறியிருந்தார். திரைத் துறையில் யாருமே வாய்திறக்காமல் இருந்தநிலையில், பூனைக்கு முதல் ஆளாகத் துணிச்சலாக மணி கட்டியிருக்கிறார் பாரதிராஜா.

இதைத் தொடர்ந்து, அனைத்து திரை நட்சத்திரங்களும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ’ஜெய் பீம்’ பட ஆதரவாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, ’சண்டியர்’ படத் தலைப்புக்காகவும், ’விஸ்வரூபம்’ படக் காட்சிகளுக்காகவும் அரசியல் மற்றும் சாதி, மதத் தலைவர்களின் மிரட்டலுக்கு ஆளான கமல்ஹாசன், ஜெய் பீமுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்று சூர்யா ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேபோல, தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினியும் பாமகவால் ’பாபா’ பட விவகாரத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே, அவரும் சூர்யாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார் என்று சூர்யா ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவரிடம் கேட்டபோது, ”அண்ணாத்த படமும், ஜெய் பீம் படமும் ஒரே தேதியில் வெளியாகியிருக்கிறது. ஆயிரம் இருந்தாலும் போட்டிப்படம். முதல்ல சூர்யா ’அண்ணாத்த’ படத்தைப் பார்த்துவிட்டு, நல்லாயிருக்குன்னு சொல்லட்டும். எங்க தலைவரும் ’ஜெய் பீம்’ படம் சூப்பரா இருக்குது, இதை எதிர்க்காதீர்கள்னு அறிக்கை வெளியிடுவார்” என்றார்.

கொஞ்சம் கஷ்டமான நிபந்தனைதான்!

x