பெருமாள் தெப்பத்தையும் விட்டுவைக்காத மதுரை ஸ்மார்ட் சிட்டி ஊழல்!


வறண்டு கிடக்கும் பெருமாள் தெப்பம்

கொட்டித் தீர்க்கும் மழையால், ஊரெல்லாம் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், மதுரை மாநகரின் மத்தியில் இருக்கும் பெருமாள் தெப்பக்குளம் ஒரு துளி தண்ணீர்கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே இருக்கிறது கூடலழகர் பெருமாள் கோயில். இந்தக் கோயிலுக்குச் சொந்தமான பெருமாள் தெப்பக்குளம் நகரின் மையப் பகுதியான டவுன் ஹால் ரோட்டில் இருக்கிறது. ஒரு காலத்தில் தெப்ப உற்சவம் எல்லாம் நடத்தப்பட்ட இந்தத் தெப்பத்துக்கு, இத்தனை மழை பெய்தும் துளி தண்ணீர்கூட வரவில்லை.

இந்தக் குளத்தின் 4 கரைகளையும் ஆக்கிரமித்து, தனியார் கடைகள் வைத்திருந்தார்கள். பல ஆண்டுகளாக வைத்திருந்த இந்தக் கடைகளை எல்லாம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்தியது. அந்த சமயத்தில் சிலர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றதால், ஆக்கிரமிப்பு அகற்றம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அறநிலையத் துறையின் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்ற விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனாலும் ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் அவகாசம் கேட்டதால், இன்னும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வைத்திருக்கிறது அறநிலையத் துறை.

இதனிடையே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மதுரையை அழகுபடுத்த ரூ.974 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு. இதன் மூலம் பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் புதுப்பொலிவு பெற்றன.

பணிகள் முடிக்கப்பட்ட பெரியார் பேருந்து நிலையம்

அத்துடன், வறண்டு கிடக்கும் பெருமாள் தெப்பத்தை மழைநீரைக் கொண்டுவந்து நிரப்புவதற்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், ஸ்மார்ட் சிட்டி பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், இதுவரை பெய்த பருவமழைக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட பெருமாள் தெப்பத்தை எட்டிப்பார்க்கவில்லை. அதனால் குளம் வறண்டு போய்க் காட்சியளிக்கிறது. அருகிலிருக்கும் வைகையில் மழைநீர் இருகரை தொட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

வைகையில் வளமான தண்ணீர்...

அப்படியானால், இந்தக் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது? ஒதுக்கப்பட்ட நிதியில் முறையாக பணிகள் நடைபெற்றனவா அல்லது பேருக்கு வேலை செய்துவிட்டு பணத்தைச் சுரண்டிவிட்டார்களா அல்லது இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறெதுக்கும் எடுத்து விட்டார்களா என்பது குறித்தெல்லாம், புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசுதான் பொறுப்புடன் விசாரித்து பொதுமக்களுக்குச் சொல்லவேண்டும்.

x