லஞ்ச ஒழிப்புத் துறையில் நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்த, நல்லம்ம நாயுடு (83) காலமாகிவிட்டார். ஓய்வுபெற்ற பிறகு, எல்லா காவல் துறை அதிகாரிகளின் பெயர்களும் பெரிதாகப் பேசப்படுவது கிடையாது. ஆனால், நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படும் காவல் துறை அதிகாரிகளின் பெயர், அவர்களுடைய மரணத்துக்குப் பிறகும் நிலைத்து நிற்கும். நல்லம்ம நாயுடுவும் அந்த வரிசையில் வரும் அதிகாரிதான்.
1961-ல், காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தவர் நல்லம்ம நாயுடு. பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாறி, அதில் படிப்படியாக எஸ்.பி பதவி வரை உயர்ந்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் என்றாலே, கறைபடியாத கைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும். நல்லம்ம நாயுடு அதுபோன்ற ஓர் அதிகாரியாகத் தொடக்கம் முதல் இறுதிவரை இருந்தார்.
1991-ல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ-க்கு உதவியாக அக்குழுவில் இணைந்து பணியாற்றியவர்தான் நல்லம்ம நாயுடு. ஆனால், அந்த வழக்கைவிட நல்லம்ம நாயுடுவை பொதுவெளியில் அறிய வைத்தது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையையே ஆட்டம்காண வைத்த, சொத்துக்குவிப்பு வழக்கின் ரியல் ஹீரோ அவர்தான். 7 ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், நல்லம்ம நாயுடுவின் விசாரணைக்கு மிக முக்கியப் பங்குண்டு. அவர் திரட்டிய ஆவணங்கள், சாட்சிகள், தடயங்கள் இந்த வழக்கில், ஜெயலலிதாவைக் குற்றவாளியாக நிரூபித்தன.
ஜெயலலிதா மீதான சுப்ரமணியன் சுவாமியின் ஊழல் புகாரில், அவர் மீது நடவடிக்கை எடுக்க 1995-ல் அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்தார். அடுத்த ஆண்டே 1996-ல் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்கை தமிழக அரசு கையில் எடுத்துக்கொண்டது. அந்த வழக்கை விசாரிக்கவும் ஆவணங்கள், சாட்சிகளைத் திரட்டவும் லஞ்ச ஒழிப்புத் துறையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர்தான், நல்லம்ம நாயுடு. சொத்துக்குவிப்பு வழக்கில், 1996 டிசம்பரில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்ல நேர்ந்தது.
ஜெயலலிதாவும் சசிகலாவும் சிறையில் இருந்தபோது, நல்லம்ம நாயுடு தலைமையிலான குழு, போயஸ் கார்டன் வீட்டுக்குள் புகுந்து ரெய்டு நடத்தியது. அன்று தொலைக்காட்சிகளில் ஆயிரக்கணக்கான புடவைகள், கைக்கடிகாரங்கள், காலணிகள், ஆபரணங்களைக் குவித்துக் காட்டியபோது தமிழகமே வாய் பிளந்தது. அதன் தொடர்ச்சியாக, சென்னை மத்திய சிறையில் இருந்த ஜெயலலிதா, சசிகலா இருவரிடமும் சிறைக்கே சென்று விசாரணை நடத்தினார், நல்லம்ம நாயுடு. சிறையில் ஜெயலலிதாவை விசாரித்தபோது, “வேறு எந்தத் தலைவரையாவது இப்படி சிறைக்குள் வந்து விசாரிப்பீர்களா?” என்று நல்லம்ம நாயுடுவிடம் ஜெயலலிதா சீறியது, அன்றைய தலைப்புச் செய்தியானது.
நீதிபதி குன்ஹா வந்த பிறகு வழக்கு கிளைமாக்ஸுக்குச் சென்றது. அந்தக் காலகட்டத்தில், சொத்துக்குவிப்பு வழக்கு குறித்த விவரங்கள் அனைத்தையும் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் பதிவுசெய்தார் நல்லம்ம நாயுடு.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, 1997-ம் ஆண்டிலேயே அவர் பணி ஓய்வுபெற்றார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கைக் கருத்தில்கொண்டு அவருக்கு திமுக அரசு பணி நீட்டிப்புச் செய்தது. சென்னை தனி நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு விரைவாக நடந்துகொண்டிருந்தபோது, 2001-ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, வழக்கில் சாட்சிகள் பல்டியடித்து பிறழ் சாட்சிகளாயினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே, தனது பதவியை ராஜினாமா செய்தார் நல்லம்ம நாயுடு. இடைப்பட்ட காலகட்டத்தில் டிடிவி தினகரனின் சொத்துகள் தொடர்பாக லண்டனுக்கும் சென்று வந்தார். இந்த வழக்கைக் கையில் எடுக்கவே பலரும் தயங்கினர். ஆனால், துணிச்சலாக அந்தப் பணியை ஏற்ற பிறகு, அவர் பல இன்னல்களைச் சந்தித்தார். தொடர் மிரட்டல்கள் அவருக்கு வந்தன. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு இல்ல குடியிருப்பிலிருந்து அனுப்பப்பட்டார். இப்படிப் பல சிக்கல்களைச் சந்தித்தார்.
2001 தொடங்கி சொத்துக்குவிப்பு ஊசலாட்டத்தைச் சந்தித்த நிலையில், திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, அந்த வழக்கு 2003-ல் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கான விருதுப் பட்டியலில் நல்லம்ம நாயுடுவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. விருதை ஜெயலலிதா கையால் பெறவேண்டிய சூழல் நல்லம்ம நாயுடுவுக்கு ஏற்பட்டது. போலீஸ் உயரதிகாரிகள் தடுத்ததன் காரணமாக, ஜெயலலிதா கையால் அவர் விருது பெறமுடியாமல் போனது. மாறாக, அந்த விருது நல்லம்ம நாயுடுவின் வீடு தேடி வந்தது.
இதற்கிடையே 2006-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பான வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு உதவ, நல்லம்ம நாயுடு மீண்டும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பெங்களூருவில் அதிரடித் திருப்பங்களை சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ச்சியாகச் சந்தித்து வந்தது. நீதிபதி குன்ஹா வந்தபிறகு வழக்கு கிளைமாக்ஸுக்குச் சென்றது. அந்தக் காலகட்டத்தில், சொத்துக்குவிப்பு வழக்கு குறித்த விவரங்கள் அனைத்தையும் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் பதிவுசெய்தார் நல்லம்ம நாயுடு.
ஒருவழியாக வழக்கு விசாரணை முடிந்து, 2014 செப்டம்பர் 27 அன்று நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கும் முன்பு, “நீங்கள் குற்றவாளி” என்று, அன்று தமிழக முதல்வராக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜெயலலிதாவைப் பார்த்து குன்ஹா சொல்லி அதிமுகவையும் தமிழக அரசியலையும் கலகலக்கச் செய்தார். அந்தக் கணத்தில் முதல்வர், எம்எல்ஏ பதவிகளை ஜெயலலிதா இழந்தார். இந்தியாவிலேயே ஊழல் வழக்கில் முதல்வர் பதவியை இழந்த முதல் முதல்வர் என்ற அவப்பெயர், ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது.
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, ‘என் கடமை ஊழல் ஒழிக’ என்ற நூலையும் எழுதியுள்ளார் நல்லம்ம நாயுடு. அதில் பல தகவல்களைத் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் 18 ஆண்டுகள் பேசுபொருளாக இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் நாயகனாக இருந்தவர் நல்லம்ம நாயுடு.