நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு: பாமக மா.செ பகிரங்கம்


ஜெய் பீம்

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை தொடர்பாக, அத்திரைப்படத்தை தயாரித்து நடித்த சூர்யாவுக்கு எதிரான குரல்கள் விபரீதமாய் ஒலிக்கின்றன.

ஒடுக்கப்பட்ட பழங்குடியினத்துக்கு எதிராக, அதிகார காவல் துறையும் மற்றும் ஆதிக்க சாதியினரும் நடத்திய அத்துமீறல்களை அம்பலப்படுத்திய திரைப்படம் ஜெய்பீம். தமிழகத்தை தாண்டியும் இந்தத் திரைப்படம் வரவேற்பு பெற்று வருகிறது. சர்வதேச அளவில் திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் ஐஎம்டிபி தளத்தின் பயனர்கள் பலரின் ரசனை சார்ந்த பட்டியலில், அதிகப் புள்ளிகளுடன் ஜெய்பீம் முதன்மை இடம் பிடித்திருக்கிறது.

இந்த வரவேற்புகளுக்கு மத்தியில் திரைப்படத்துக்கு எதிரான கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் கச்சை கட்டுகின்றன. அவற்றில் அண்மைய சர்ச்சை, அன்புமணி ராமதாஸ் - சூர்யா இடையே வெடித்தது. திரைப்படத்தில் வன்னியர் அடையாளங்கள் மற்றும் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் பெயரை சித்தரித்தது போன்றவை இந்த சர்ச்சையின் மையமாக இருந்தன. அன்புமணியின் நீண்ட அறிக்கைக்கு நடிகர் சூர்யா சுருக்கமான பதிலைத் தந்தார். ஆனபோதும் பாமகவினர் மத்தியில் ஆறாத ரணமாக, சூர்யா எதிர்ப்பில் மேலும் தீவிரமாக களமாடி வருகிறார்கள்.

சூர்யா திரைப்படம் ஓடும் திரையரங்கு முன்பாக பாமகவினர் ஆர்ப்பாட்டம்

அவற்றில் இன்றைய(நவ.14) நிகழ்வாக, மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளரான சித்தமல்லி பழனிச்சாமி, நடிகர் சூர்யாவை உதைப்பவர்களுக்கு சன்மானம் தரப்படும் என்று அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய இவர், ”வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வந்தால், அவரை எட்டி உதைப்பவருக்கு மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்” என்றார். மேலும் ”மயிலாடுதுறை மட்டுமல்ல தமிழகத்தில் வேறு எங்கும் இனி சூர்யா நடமாட முடியாது” என எச்சரித்தார்.

முன்னதாக இவரது தலைமையிலான பாமகவினர், உள்ளூரில் சூர்யாவின் ‘வேல்’ திரைப்படம் ஓடும் திரையரங்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அடுத்த நாள் வேறு படத்தை திரையிடுவதாக திரையரங்கு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, பாமகவினர் கலைந்து சென்றனர். பின்னர் மயிலாடுதுறை எஸ்பி சுகுணாசிங்கை சந்தித்து, ’வன்னியர் சமுதாயத்துக்கும் பிற சமூகங்களுக்கு இடையே இணக்கத்தை கெடுக்கும் வகையில் திரைப்படம் எடுத்த தயாரிப்பாளர்கள் சூர்யா,ஜோதிகா மற்றும் இயக்கிய த.செ.ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு’ மனு அளித்தனர்.

அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு சன்மானம் தருவதாக, அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது அதே பாணியில் பாமகவினர், நடிகர் சூர்யாவுக்கு எதிராக கிளர்ந்துள்ளனர்.

x