பாலிவுட் நடிகரும் சமூகச் செயற்பாட்டாளருமான சோனு சூட், தனது தங்கை வாயிலாக அரசியலில் குதிக்கிறார். நெருங்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், தங்கை மாளவிகா போட்டியிடப் போவதாக சோனு சூட் அறிவித்திருக்கிறார்.
சினிமாவில் பெரும்பாலும் எதிர்மறை பாத்திரங்களில் தோன்றினாலும், நடைமுறையில் எளிய மக்களுக்கு உதவும் நபராக புகழடைந்தவர் சோனு சூட். குறிப்பாக கரோனா அலைகள் அடுத்தடுத்து மக்களை புரட்டிப்போட்டபோது, ஆக்சிஜன் சிலிண்டர், மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தந்தார். செலவினங்களுக்கும் அவரே பொறுப்பேற்றார்.
பொதுமுடக்கம் திடீரென அறிவிப்பானதில், புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளானபோது அவர்களுக்கு முன்வந்து உதவினார். மத்திய அரசை நெருக்கடிக்கு ஆளாக்குவதாக சோனு சூட் மீது பாஜகவினர் பாய்ந்தனர். சோனுவின் நிறுவனங்கள் ரெய்டு நடவடிக்கைக்கும் ஆளாகின. அப்போதே சோனு சூட் விரைவில் அரசியலில் குதிப்பார் என ஆருடங்கள் வந்தன. தற்போது அதில் பாதி பலித்திருக்கிறது.
அந்த வகையில், சொந்த ஊரான மோகா தொகுதியில் மாளவிகா போட்டியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எந்தக் கட்சி சார்பாக போட்டியிடுவார் என்ற விபரம் இன்னமும் வெளியாகவில்லை. சோனுவின் அரசியல் தொடர்புகள் மற்றும் மோகா தொகுதியில் வலுவாக இருக்கும் கட்சி என்பதன் அடிப்படையில், ஆம் ஆத்மி கட்சி வாயிலாக மாளவிகாவின் தேர்தல் பிரவேசம் அமையும் என அனுமானிக்கப்படுகிறது.
தற்போதைக்கு நேரடி அரசியலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் சோனு சூட், மாளவிகாவுக்கான பிரச்சாரங்களில் ஈடுபடுவேன் என்று உறுதிபடுத்தி உள்ளார்.