தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் சிறப்பு அலுவலரான ஷில்பா பிரபாகா் சதீஷ், இனி இப்புதிய துறையின் சிறப்பு அலுவலராகச் செயல்படுவார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சர் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு, முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவை ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையாக ஒற்றை குடைக்குள் வருகின்றன. பொதுமக்கள் தொடர்புகொள்ள ஏதுவாகவும், பணிகளை ஒருங்கிணைக்கவும், ஒற்றை இணையதளமும் பயன்பாட்டில் வருகிறது.
இந்தப் புதிய மாற்றத்தின் மூலமாக, பொதுமக்கள் முதல்வருக்கு அனுப்பும் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண்பதில் ஒருங்கிணைந்தும், விரைந்தும் செயலாற்றிட முடியும். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வுகளுக்கு கிடைத்த பொதுமக்களின் வரவேற்பு மற்றும் நம்பிக்கையை, தமிழகத்தின் முதல்வராக பாத்திரமாக்கிக்கொள்ள விரும்புகிறார். அதன்பொருட்டே புதிய துறைக்கான ஒருங்கிணைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய ஒருங்கிணைப்பு பணிகளின் மூலம், குவிந்து கிடக்கும் பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாகும். இந்த முயற்சிகள் பலிதமானால் தமிழகத்தின் பல்வேறு முன்னோடி திட்டங்களை, இதர மாநிலங்கள் கைக்கொண்டதன் வரிசையில் ’முதல்வரின் முகவரி’, தமிழகத்தின் அடையாள முகவரியாகவும் மாறும்.