பசுவின் சாணம் மற்றும் கோமியத்தைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்று, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சௌகான் மாநில மக்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.
மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு, பசுக்களை காப்பதற்கான சரணாலயங்கள் மற்றும் தங்குமிடங்களை உருவாக்கி பராமரித்து வருகிறது. இந்த மையங்களில், பசுக்களிடமிருந்து பெறப்படும் சாணம் மற்றும் கோமியம் கொண்டு லாபகரமான தொழில்கள் உருவாக்கப்பட்டு வருவதாக, மாநில முதல்வர் சிவ்ராஜ் சௌகான் கூறினார்.
மேலும், ”மாநிலத்தின் சுடுகாடுகளில் சாண வறட்டி கொண்டு சடலங்களை எரிப்பதன் மூலம் பெருமளவு மரங்கள் வெட்டப்படுவதை தடுத்துள்ளோம். அந்த வகையில், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மத்தியில் மென்மேலும் லாபம் பெருக்கும் வகையில், பசுவின் சாணம் மற்றும் கோமியத்திலிருந்து உபயோகமான பொருட்களை உருவாக்குவோம். இவற்றால் நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
கரோனா பரவல் உச்சத்திலிருந்தபோது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பசுவின் சாணத்துக்கு உண்டு என்று குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வதந்தி பரவியது. இதையடுத்து, அங்கு சாணம் மற்றும் கோமியத்தை உடலில் பூசிக்கொள்ளும் போக்கு அதிகரித்து சர்ச்சையை உருவாக்கியது. விலங்குகளின் கழிவுகளிலிருந்து பரவும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், மனிதரின் உடல்நலத்துக்கு ஊறு உண்டாகும் என்று மருத்துவர்கள் கண்டித்த பிறகே, அந்தப் போக்கு முடிவுக்கு வந்தது.