சென்னை: திமுகதான் நீட் தேர்வின் தீமைகளை கண்டறிந்து முதன்முதலில் அதை எதிர்த்து பிரச்சாரம் செய்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: திமுகதான் நீட்தேர்வின் தீமைகளை முதன்முதலில் கண்டுணர்ந்து, பெரிய அளவில் அதற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டது. ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்வதால் ஏற்படும் தாக்கங்களை ஆராய, முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்தோம்.
மாணவர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள், மிக விரிவான தரவு பகுப்பாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த குழு வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. ஏழைகள், சமூகநீதிக்கு எதிரானது நீட் தேர்வு என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், பிற மாநில அரசுகளுக்கும் அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் இடம்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஏற்படுத்திய தேவையற்ற தாமதத்தை அடுத்து, தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
நீட் தேர்வில் சமீபத்தில் நடந்த பரவலான குளறுபடிகளால், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த வேளையில், நீட் தேர்வின் பாதகங்களை அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ள ஏதுவாக, நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம், பிற இந்திய மொழிகளில் பகிர்கிறோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பஞ்சாபி, பெங்காலி ஆகிய மொழிகளில் ராஜன் குழு அறிக்கையையும் இந்த பதிவுடன் முதல்வர் இணைத்துள்ளார்.