பறிமுதல் வாகனங்களை விற்று அரசுக்கு வருவாய் ஈட்டும் காவலர்களுக்கு சிறப்பு விருது


தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர், பல்வேறு வழக்குகளில் வாகனங்களை பறிமுதல் செய்வது வழக்கம். இதேபோல், பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களால் மீட்கப்படாமல் இருக்கும் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், லாரி உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் தமிழகம் முழுதும் உள்ள காவல் நிலையங்களில் குவிந்து கிடக்கின்றன.

இவற்றைப் பொது ஏலத்தில் விற்று வருவாயை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என, ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘காவல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் மோட்டார் வாகனங்களை அகற்றி, அதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் காவல் துறை அதிகாரிக்கு, வரும் ஜனவரி 15-ம் தேதி சிறப்பு விருது வழங்கப்படும்’ என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமையகம் வெளியிட்டுள்ள குறிப்பாணையில், காவல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் மோட்டார் வாகனங்களை அதிக அளவில் அகற்றும் மற்றும் அதிக வருவாய் ஈட்டி அரசு கஜானாவில் சேர்க்கும் காவல் துறை அதிகாரிக்கு வரும் ஜனவரி 15-ம் தேதி சிறப்பு விருது வழங்கப்படும் என்றும், அந்தந்த மாவட்ட காவல் நிலைய அதிகாரிகள் தங்கள் நிலையங்களின் இதுகுறித்த விபரங்களை குறிப்பிட்டு, வரும் ஜனவரி 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை காவல் துறை தலைமையகத்துக்கு அனுப்புமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், கூடுதல் டிஜிபி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு விருதுக்குத் தகுதியானவர்களை தேர்வுசெய்து அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x