குஜராத்தில் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, கைது செய்யப்பட்ட ஒரே மாதத்தில் வழக்கு விசாரணைகளை முடித்து நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அஜய் நிஷாத்(39) என்பவன், தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்று சீரழித்தான். குஜராத்தை கொந்தளிக்கச் செய்த இந்த வழக்கில், அக்டோபர் 13 அன்று அவன் கைது செய்யப்பட்டான்.
பொதுமக்களின் ஆவேச உணர்வுகளை உள்வாங்கியது போல, காவல் துறை மற்றும் நீதித் துறை நடைமுறைகள் விரைந்து சென்றன. சூரத்தில் உள்ள பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நள்ளிரவு வரை நீண்டிருக்கிறது. ஒருவழியாக நேற்று(நவ.11) குற்றவாளிக்கு தீர்ப்பெழுதி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.கலா வழக்கை நிறைவு செய்தார். குற்றவாளிக்கு சாகும்வரை சிறை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குஜராத் நீதித் துறை வரலாற்றில் இதுவே மிக குறுகிய காலத்தில் நிறைவடைந்த வழக்காகும்.