சென்னையில் சுய நினைவற்று கிடந்தவரை தோளில் தூக்கிச் சென்று, மருத்துவ சிகிச்சைக்கு வழிசெய்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னைப் பெருமழையின் மத்தியில், கீழ்ப்பாக்கம் கல்லறையில் உதயா என்பவர் சுயநினைவின்றி கிடந்தார். டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளரான ராஜேஸ்வரி, உதயாவை தோளில் தூக்கி சுமந்துவந்து, மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். அதுதொடர்பான ராஜேஸ்வரியின் அர்ப்பணிப்பு மிக்க சேவை, ஊடகங்கள் வாயிலாக பலரையும் சென்றடைந்ததில் காவல் ஆய்வாளருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஆய்வாளர் ராஜேஸ்வரியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து அவரது பணிக்கு வாழ்த்தும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.
முதல்வர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், ‘உயிர்காக்கும் முயற்சியில் துணிவுடன் ஈடுபட்டு, கோல்டன் ஹவர் எனப்படும் அந்தப் பொன்னான நேரத்தைச் சரியாக உணர்ந்து செயல்பட்டமைக்கு’ வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் தடகளப் போட்டிகளில் ராஜேஸ்வரியின் சாதனைகள், 1992-ம் ஆண்டின் கும்பகோணம் மகாமக நெரிசலில் உயிருக்குப் போராடியவர்களை மீட்டது உள்ளிட்ட ஆய்வாளர் ராஜேஸ்வரியின் சிறப்புகளையும் நினைவுகூர்ந்து வாழ்த்தினார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் உடனிருந்தனர்.