பாஜகவின் கலகக்குரலோனாக அவதாரமெடுத்திருக்கும் வருண் காந்தி, இன்று சொந்தக் கட்சியைச் சேர்ந்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக பொதுவெளியில் பொங்கியிருக்கிறார்.
பாஜக மக்களவை எம்பியான வருண் காந்தியின் அண்மைக்கால செயல்பாடுகள், கட்சியிலிருந்து தான் ஓரம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சுப்பிரமணியம் சுவாமிக்கு அடுத்தபடியாக, சொந்தக் கட்சி மீதான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் முன்வைத்து வருகிறார்.
இன்று(நவ.11) ட்விட்டரில் களமாடி இருக்கும் வருண் காந்தி, பாஜக நடிகையான கங்கனா ரணாவத்தின் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, அதையொட்டிய தனது கோபாவேச பதிவை பதிந்திருக்கிறார்.
ஊடக மாநாடு ஒன்றின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுவதாக, கங்கனாவின் அந்த வீடியோ அமைந்திருக்கிறது. அதில் ‘1947-ல் நாம் பெற்றது சுதந்திரமல்ல, அது பிச்சை. நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் 2014-ல் தான் கிடைத்தது’ என்று மோடி ஆட்சிக்கு வந்ததன் அடிப்படையில் பேசியிருந்தார் கங்கனா.
இந்த வீடியோவை ஒட்டிய வருண் காந்தியின் பகிர்வில் , ‘இதுவரை மகாத்மா காந்தியின் தியாகம் மற்றும் தவத்துக்கு அவமரியாதையும், மகாத்மாவைக் கொன்றவருக்கு மரியாதையும் செய்தவர்கள், இப்போது மங்கள் பாண்டே முதல் ராணி லக்ஷ்மிபாய், பகத் சிங், நேதாஜி உள்ளிட்ட லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இப்படி அவமதிக்கவும் செய்கிறார்கள்’ என்று ஆவேசம் காட்டியிருக்கிறார். அதன் முடிவில், ‘இதை பைத்தியக்காரத்தனம் என்பதா அல்லது தேசத்துரோகம் என்பதா?’ என்றும் கங்கனாவை கடுமையாகத் தாக்கி இருக்கிறார்.
பாஜகவின் கண்மூடித்தனமான ஆதரவளராக அவதாரமெடுத்திருக்கும் கங்கனா ரணாவத், மும்பையில் அமர்ந்தபடி மகாராஷ்டிராவின் ஆளும் சிவசேனை கட்சியையே தெறிக்க விடுபவர். அரசியல்வாதிகள் முதல் சக பாலிவுட் நட்சத்திரங்கள் வரை, பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் அவரிடம் எவர் சிக்கினாலும்.. அவ்வளவுதான்! அப்படியான கங்கனா ரணாவத்திடம் வலிய சென்று மோத ஆரம்பித்திருக்கிறார் வருண் காந்தி. இப்படி தனது அதிருப்தியால் கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்க்க முயல்கிறாரா அல்லது கட்சியை விட்டு வெளியேற காரணம் தேடுகிறாரா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.