வடகிழக்கு பருவமழையால் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை, தமிழகம் முழுதும் பல சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியதுடன் தரைப்பாலங்கள் அடித்து செல்லபட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பெரும்பாலானோர் வீட்டைவிட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக தேங்கியுள்ள மழை நீரில் சாக்கடை நீரும் கலந்து நோய் தொற்று ஏற்படும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை தமிழகத்தில் 91 பேர் உயிரிழந்திருப்பதாக வருவாய் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சென்னையில், தண்டையார்பேட்டையில் வீட்டில் தேங்கியிருந்த மழைநீரில் வழுக்கி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் பேசின் பிரிட்ஜ் அருகே குட்டையில் விழுந்து ஜெயவேல் என்பவரும், ஓட்டேரி, அடையாறு ஆற்றில் மூழ்கி இருவரும், மாதவரத்தில் மின்சாரம் தாக்கி ஒருவரும், ராயபுரத்தில் வீடு இடிந்து விழுந்து ஒருவரும், பாடியில் மின்னல் தாக்கி ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர் .
சாலைகளை சரியான முறையில் சீரமைக்காமலும், மழைகாலத்துக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் இதுபோன்று நிகழ்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞசாட்டுகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் 10 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வந்துள்ளதனர்.
இந்தக் குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் பழைய கட்டிடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களில் மழையில் சிக்கிய 4,500 பேரை இக்குழுவினர் மீட்டதுடன் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்