அண்ணா, கருணாநிதி காலத்து அரசியல் தலைவர் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம். பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதுவதுடன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கட்சிப் பணிகளையும் கவனித்துவரும் பொன்.முத்துராமலிங்கம், 'காமதேனு'வுக்காக அளித்த பேட்டி இது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் பற்றி, மூத்த நிர்வாகியான உங்கள் கருத்தென்ன?
சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் அல்லது இதுவரையில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்கள் போன்ற பிரிவினர்களைக் கூடுதல் கவனம் எடுத்துப் பார்க்கிறார் முதல்வர். அவர்களுக்கே முக்கியத்துவமும் முதலிடமும் தருகிறார். சமூகநீதியின் அடித்தளமே அதுதானே! எல்லாத் தரப்பினருக்கும் ஜனநாயக ஆட்சியில் நியாயமும், நீதியும், உரிமையும் கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறார். இதை இந்த ஆட்சியின் பாராட்டத்தக்க விஷயம் என்று பார்க்கிறேன்.
“பாகிஸ்தான் பிரதமர்கூட தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்கிறார். முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துச் சொல்லவில்லையே ஏன்?” என்று பாஜக கேட்கிறதே?
இந்தக் கேள்வியைத் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டால்தானே பொருத்தமாக இருக்கும்? நான் வாழ்த்துச் சொன்னேனா, இல்லையா, ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என்று கேட்டீர்கள் என்றால், நானே பதில் சொல்லிவிடுவேன். தலைவர் ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என்பதை நீங்கள் அங்கேதான் கேட்க வேண்டும்.
தேவர் ஜெயந்திக்கு இந்த ஆண்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் பசும்பொன் வராதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த முறை சசிகலா வந்திருக்காங்கல்ல, அதனால இவங்க வரல. அந்தம்மா வரலைன்னா, இவங்க வந்திருப்பாங்க. ஏன்னா போன தடவை அந்தம்மா வரல, இவங்க வந்தாங்க. அதிமுகவின் பொதுச் செயலாளர் என்கிற முறையில் சசிகலா வந்திட்டாங்களே என்று இவர்கள் வரவில்லையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று அதிமுககாரர்களுக்குத்தான் தெரியும்.
மத்திய அரசு, திடீரென பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கிறதே?
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது வெறுமனே வாகனம் வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்கிற விஷயம் கிடையாது, கடைசியாக அது சாதாரண நுகர்வோரைத்தான் கடுமையாகப் பாதிக்கும். எனவே, விலையைக் குறைக்க வேண்டும் என்று திமுக, நம் முதல்வர், நிதி அமைச்சர் எல்லோரும் வலியுறுத்தினோம். நியாயத்தை உணர்ந்து இதைச் செய்திருப்பார்களேயானால், முன்பே இதைச் செய்திருக்க வேண்டும். நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில், மரண அடி வாங்கியிருக்கிறது பாஜக. அடுத்து உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பொதுத் தேர்தல் வேறு வருகிறது. எனவேதான் பயந்துபோய் விலையைக் குறைத்திருக்கிறார்கள்.
அதுவும்கூட திமுக அரசு மாநில வரியைக் குறைத்து 3 ரூபாய் விலையைக் குறைத்துக்காட்டிய பிறகு, அதைப் பார்த்துச் செய்திருக்கிறார்கள். மத்தியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்தபோது, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி முறையே 9.48 ரூபாய், 3.56 ரூபாய் என இருந்தது. பாஜக பொறுப்பேற்ற பிறகு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அதன்பலன் மக்களுக்குக் கிடைத்துவிடாமல் தடுப்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக கலால் வரியை உயர்த்திக்கொண்டே போய், இன்று பெட்ரோலுக்கு 32.90, டீசலுக்கு 31.80 ரூபாய் என்று கொண்டுபோய்விட்டார்கள். அதிலிருந்து வெறும் 5, 10 ரூபாயைக் குறைத்துவிட்டு தீபாவளி பரிசு அது இது என்று அடித்து விடுகிறார்கள்.
தமிழ்நாடு நாளாக ஜூலை 18-ம் தேதியை முதல்வர் அறிவித்திருப்பதை, “குழந்தை பிறந்தநாளைக் கொண்டாடாமல், பெயர் சூட்டிய நாளையா கொண்டாடுவது?” என்று விமர்சிக்கிறார்களே?
மொழிவாரி மாநிலங்கள் 1956-ம் ஆண்டு சட்டப்படி பிரிக்கப்பட்டது. அன்றைய சென்னை மகாணத்தில் இருந்த கர்நாடக, ஆந்திரப் பகுதிகள் எல்லாம் பிரிக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் உருவான நாள்தான் நவம்பர் 1-ம் தேதி. அது மாநிலங்கள் பிரிக்கப்பட்ட, இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடு தன் நிலப்பகுதியில் சிலவற்றை இழந்த நாள்தானே ஒழிய, அது தமிழ்நாடு பிறந்தநாள் அல்ல. கேரளம், கர்நாடகம் எல்லாம் உருவான பிறகும்கூட, நம்முடைய மாநிலம் சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டது. இந்த நிலத்துக்கு, தமிழ்நாடு என்று அறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாளான ஜூலை 18 தான் உண்மையான தமிழ்நாடு நாள். எனவே, வரலாற்றுபூர்வமாகப் பார்த்தாலும், அறிவுபூர்வமாகப் பார்த்தாலும் இந்த நாள்தான் சாலப்பொருத்தமானது.
அண்டை மாநிலமான கர்நாடகத்தில், தேசியக்கொடி போல மாநிலக் கொடியையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தமிழகத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்திய மாநிலக் கொடியைக்கூட பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறதே? மீறி யாராவது மாநிலக் கொடியைப் பயன்படுத்தினால், காவல் துறை வழக்குப் போடுகிறதே?
இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டியது முதலமைச்சரிடம்தான். அதற்குரிய பதிலை அவர் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
‘அடிமை அதிமுக’ என்று முழங்கிய திமுக, இன்று முல்லை பெரியாறு விஷயத்தில் மாநில உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?
இன்றைக்கு நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், நம்முடைய பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் முல்லை பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்கள். உண்மையான கள நிலவரம் என்ன என்பதை அவர்கள் சொல்வார்கள். கடந்த 9 ஆண்டுகளாகப் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர்களான பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் என்றைக்காவது அந்த அணையை நேரில் போய்ப் பார்த்திருக்கிறார்களா? எனவே, அவர்களுடன் திமுக அமைச்சர்களை ஒப்பிடுவது சரியானதல்ல. மாநில உரிமையைத் திமுக அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுக உருவானபோது, அதில் அங்கம் வகித்தவர்களில் ஒருவர் நீங்கள். இன்று அந்த வைகோவே தன்னுடைய மகனைப் பொறுப்புக்குக் கொண்டுவந்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மிஸ்டர் வைகோவிடம்தான் கேட்க வேண்டும். வாரிசுகள் அரசியலில் திணிக்கப்படக் கூடாது, இயற்கையாக வர வேண்டும் என்று அவரே சொல்லியிருக்கிறார். இதற்குமேல் இன்னொரு கட்சி பற்றி நான் பேசுவது நன்றாக இருக்காது.
நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கரடு முரடாகப் பேசுகிறார், கனத்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டுகள் வருகிறதே... முன்னாள் அமைச்சராக இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நாட்டு மக்களின் தேவை ஒரு அமைச்சர், அந்தத் துறையில் எப்படிப் பணியாற்றுகிறார் என்பதுதான். அப்படிப் பார்த்தால், நம் நிதியமைச்சர் அவருடைய துறையில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார். தமிழ்நாடு அரசுக்கென ஒரு வங்கி தொடங்குவதுபோன்ற தொலைநோக்கான திட்டங்களையும் தீட்டுகிறார். அந்தச் செயல்பாடுதான் முக்கியம்.
வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்குத் தென்மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவும் அதை அப்படியே நடைமுறைப்படுத்த முயல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கிவிட்டது. அந்தச் சட்டம் ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து திமுக அரசும் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. அதிமுக போல திமுக எந்தப் பிரச்சினையையும் அவசரகதியில் அணுகாது. பிரச்சினை நீதிமன்றத்தில் இருப்பதால், இதுபற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை.