யமுனை நதியை நச்சு நுரைகளின் பிடியிலிருந்து தூய்மைப்படுத்த, டெல்லி அதிகாரிகள் முன்னெடுக்கும் விசித்திர நடவடிக்கைகளால், டெல்லியின் செல்லூர் ராஜுவாகி இருக்கிறார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
’ஐந்தாண்டுகள் எனக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்; யமுனை நதியைக் கண்கவரும் வகையில் தூய்மையாக்கி, அதில் நீங்கள் நித்தம் குடும்பத்தோடு பிக்னிக் செல்ல வைப்பேன்’; டெல்லியில் தனது தேர்தல் கன்னிப் பிரச்சாரத்தை தொடங்கியபோது, அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த முக்கியமான வாக்குறுதி இது. ஆனால், அதன்பின்னர் ஆண்டுகள் பலவானபோதும், ஆட்சியில் பல்லாயிரம் கோடிகளை கரைத்தும், யமுனை தூய்மை அடையவில்லை. அதன் அசுத்தம் மென்மேலும் கூடியே செல்கிறது.
அதன் உச்சமாய், தற்போது அதிகரித்து வரும் அம்மோனியா கழிவுகளால், துருவப் பகுதியின் பனிப்பாளங்கள் நிறைந்த உறை நதிகளைப் போல நுரை நிரம்பி தோற்றமளிக்கிறது யமுனை. புண்ணிய நதியின் கரையிலிருக்கும் தொழிற்சாலைகள், தங்கள் கழிவுகளை சுத்திகரிக்காது வெளியிடுவதே இதற்குக் காரணம்.
இதற்கிடையே சத் பூஜைக்கான ஏற்பாடுகள் யமுனையின் கரையில் களைகட்ட ஆரம்பித்தன. சத் பூஜையின் பொருட்டு விரதமிருந்து, யமுனையில் குளித்து, கரையில் அடுப்பேற்றி அந்த நீரில் சமைத்து, சூரிய பகவானை நெஞ்சார நினைத்து வழிபடுவார்கள். பல நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த பூஜைக்காக, யமுனையில் குழுமும் மக்களை டெல்லி அரசு தற்போது அப்புறப்படுத்தி வருகிறது.
மக்களின் மத நம்பிக்கைகளோடு அரவிந்த் கேஜ்ரிவால் விளையாடுவதாக பாஜக எதிர்ப்பு தெரிவிக்க, ஆன்மிகத்தில் திளைத்த மக்களும் ஆளும் அரசுக்கு எதிராக உஷ்ணமாகியுள்ளனர். வேறுவழியில்லாது பலவித உத்திகளை பயன்படுத்தி, யமுனையை தூய்மைப்படுத்தும் போராட்டத்தில் டெல்லி அதிகாரிகள் விழுந்து புரண்டு வருகின்றனர்.
டேங்கர் லாரிகளின் நீரை பீச்சியடித்து கரையோர நுரைகளை நதியின் நடுவில் சேர்ப்பது, மீண்டும் அவை கரைக்கு நெருங்காதிருக்க மூங்கில் தடுப்புகளால் மதில்(?) கட்டுவது என களேபரங்களை செய்துகொண்டிருக்கின்றனர். அடுத்த விநாடியில் உடையவும், மறு விநாடியில் உயிர்பெறுவதுமாய் யமுனையின் பொங்கும் நுரைகள் போக்குகாட்டி வருகின்றன. அதிகாரிகள் திட்டங்களின் பின்னிருந்து, செல்லூர் ராஜுவுக்கே டஃப் கொடுக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலின் இந்த விஞ்ஞானி வேடத்தால், அவரை ’சயின்டிஸ்ட் கேஜ்ரிவால்’ என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே தனக்கு எதிரான பாஜக பிரச்சாரத்தை முறியடிக்க, அரவிந்த் கேஜ்ரிவால் வலிய சத் பூஜைகளில் பங்கேற்பதுடன் அவற்றை வலையேற்றி புளகாங்கிதம் அடைந்து வருகிறார்.