நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கி பெய்து வருகிறது. மலையோரம், மற்றும் பிற பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணைக்கான நீர்பிடிப்பு பகுதியான பாலமோரில் 41 மிமீ., மழை பெய்தது. கோழிப்போர்விளையில் 35 மிமீ., தக்கலையில் 32, மாம்பழத்துறையாறு, பேச்சிப்பாறையில் தலா 31, ஆனைகிடங்கில் 30, சுருளோட்டில் 26, சிவலோகத்தில் 24, பூதப்பாண்டியில் 23 மிமீ., மழை பதிவானது.
மழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 2474 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையின் நீர்மட்டம் 45.89 அடியாக உள்ள நிலையில் இன்று மதகு வழியாக 740 கனஅடியும், உபரியாக 2532 கனஅடியும் என மொத்தம் 3200 கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேறி வருகிறது.
பேச்சிப்பாறையில் இருந்து வெளியேறும் தண்ணீரால், கோதையாறு, புத்தனாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்தண்ணீர் திற்பரப்பு ஆறு வழியாக அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் திற்பரப்பு அருவி கடல் போல் காட்சியளித்து கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைப்போல் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணைக்கு 1687 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது.