’பாஜக தலைவர் ஃபட்நாவிஸின் சுயரூபத்தை வெளிப்படுத்தும் வகையில் நாளை குண்டு ஒன்று வெடிக்க இருக்கிறது’ என்று பூடகமாகச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் நவாப் மாலிக். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனை கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே தொடரும் மோதலில் இன்றைய(நவ.9) கணக்காக, மும்பை நிழலுலகத்தை இழுத்திருக்கிறார்கள்.
அம்பானி வீட்டுக்கான வெடிகுண்டு மிரட்டலில் தொடங்கி ஆர்யன் கான் கைது வரை, ஆளும் சிவசேனைக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையிலான மோதலில் நாளொரு அரசியல் குண்டு வெடித்து வருகிறது. தற்போதைய மோதல், ஆளும் சிவசேனை கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக் மற்றும் பாஜக முன்னாள் முதல்வரான தேவேந்திர ஃபட்நாவிஸ் இடையே நடைபெற்று வருகிறது.
இன்றைய காட்சியாக, ’1993 மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நிழலுலக குற்றவாளிகளிடமிருந்து சல்லிசான விலையில் நவாப் மாலிக் நிலம் வாங்கியிருக்கிறார்’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார் தேவேந்திர ஃபட்நாவிஸ். இதற்கு பதிலளித்த நவாப் மாலிக், ’மேற்படி நில பேரம் சட்டபூர்வமாக நடந்தது’ என்று விளக்கம் தந்ததோடு, ’தேவேந்திர ஃபட்நாவிஸின் நிழலுலகத் தொடர்புகளை அம்பலமாக்கும் வகையில் நாளை ஒரு ஹைட்ரஜன் குண்டு வெடிக்கப்போகிறது’ என்று அடுத்த தாக்குதலுக்கு அச்சாரம் தந்திருக்கிறார்.
ஆளாளுக்கு அடுத்தவர் முகத்திரையை கிழிக்கும் வேகத்தில், ஒட்டுமொத்தமாய் அம்பலப்பட்டு வருகிறார்கள் மராட்டிய அரசியல் பிரபலங்கள்.