குறவர் மக்களை திருடர்களாக அடையாளப்படுத்தும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்


சென்னை, வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில், வீரத் தமிழர் விடுதலை சங்கத்தின் மாநிலத் தலைவர் வெற்றிச்செல்வம் ஓடிடியில் வெளியாகி ஓடிகொண்டிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைத் தடை செய்யக்கோரி புகார் மனு ஒன்றை அளித்தார்.

தனது புகார் குறித்து செய்தியாளர்களிடம் வெற்றிச்செல்வம் கூறியதாவது: ஜெய்பீம் படத்தில் தான் சார்ந்த குறவர் சமுதாய மக்களை திருடர்கள் என அடையாளப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராஜாக்கண்ணு உண்மையில் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரே.

இத்திரைப்படத்தைப் பார்த்த முதல்வர் உட்பட பொதுமக்கள் அனைவரும் இருளர் சமுதாய மக்கள் மீது ஏற்பட்ட பரிதாபத்தால் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்தத் திரைப்படத்தில் காட்டப்படும் சித்ரவதைகள் அனைத்தும் குறவர் சமுதாய மக்களே இன்றுவரை அனுபவித்து வருகிறார்கள். நிவாரண உதவிகளுக்காக இதைக் கூறவில்லை. எங்கள் சமுதாய மக்களின் துன்பங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டி இதைச் சொல்கிறேன் என்றார்.

மேலும், தங்கள் சமுதாய மக்களை திருடன் என்று காட்சிப்படுத்தியும், உண்மைக்குப் புறம்பான கருத்துகளை பரப்பும் வகையில் வெளியாகியுள்ள ஜெய் பீம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென்றும் தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக வெற்றிச்செல்வம் தெரிவித்தார்.

x