2015-ம் ஆண்டில் சீரழித்த பெருமழைக்கு நிகரான மற்றொரு பேரிடர், சென்னை மாநகரை புரட்டிப்போட்டு வருகிறது. பெய்யும் மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்புகளை மிதக்கச் செய்கிறது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதித்த பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிவருகிறார்கள்.
6 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த பெருமழையிலிருந்து அதிகாரிகளும், அரசு நிர்வாகங்களும் பாடம் கற்கவில்லையா என்பது வெகுஜனத்தின் விசனமாக இருக்கிறது. நகரெங்கும் வடிகால்கள், சீரமைப்பு நடவடிக்கைகள் என கோடிகளை செலவழித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் பலனில்லையா அல்லது அவ்வாறான நடவடிக்கைகள் பெயரளவுக்கு மட்டுமே நடந்ததா.. என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளையும் மக்கள் எழுப்பி வருகின்றனர்.
மக்களின் மனக்குமுறலை பிரதிபலிப்பதுபோல, சென்னை உயர் நீதிமன்றம் இன்றைய(நவ.9) வழக்கு ஒன்றின் விசாரணையை முன்னிட்டு, மாநகராட்சியை விளாசித் தள்ளியது. நகரின் சாலைகளை அகலமாக்குவது, நடைபாதை கடைகளை அகற்றுவது தொடர்பான வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையின் தற்போதைய மழைவெள்ள பாதிப்பு குறித்தும் நீதிபதிகள் தங்கள் கவலையைப் பதிவு செய்தனர்.
’2015 போலவே மீண்டும் சென்னையின் பல்வேறு இடங்கள் தத்தளித்து வருகையில், முந்தைய பாதிப்பிலிருந்து முறையான பாடம் கற்கவில்லையா? தற்போது சென்னையில் மழைநீர் தேங்கியது எப்படி?’ என்பது உள்ளிட்ட சாரமாரியான பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் பதிவு செய்தனர். தொடர்ந்து, 2015 பெருமழைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் சமர்ப்பிக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும் ஒரு வாரத்தில் நிலைமை சரியாகவில்லை எனில், தாமாக முன்வந்து வழக்கு மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.