என்னுடைய மகள் படிக்கும் அதே பள்ளியில் அதே வகுப்பில்தான் செல்வியும் படிக்கிறாள். இருவரும் சேர்ந்து எங்களுடைய வீட்டில் விளையாடுவதுண்டு. இருவருக்கும் ஒரே வயதுதான் என்றாலும் செல்வி என் மகளைவிடவும் உருவத்தில் சிறியவள்.
வயதுக்கு ஏற்ற உயரமோ, உடல் எடையோ இன்றி குறுகிய தோள்பட்டையோடு காணப்படுவாள். கொஞ்ச நேரம் விளையாடினாலே சோர்வுற்று வீட்டுக்குத் திரும்பிவிடுவாள். ”உனக்கு பிடிச்ச சப்ஜெக்ட் எது?” என்று பாடம் தொடர்பான பேச்சு எடுத்தாலே, ஒருவிதமான பதற்றமான மனநிலைக்குள் சென்றுவிடுவாள்.
செல்வியின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பதால், என்னுடைய மகளையும் செல்வியுடன் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்வார். சில நாட்களுக்கு முன்பு காலை நானும் அவர்களுடன் சேர்ந்து ஆட்டோவில் ஏறினேன். ஒரு தெரு தாண்டியவர், ”ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்கமா” என்று சொல்லி ஆட்டோவை நிறுத்திவிட்டு ஒரு பெட்டிக் கடையை நோக்கி ஓடினார். கையில் இரண்டு சிப்ஸ் பேக்கட்களுடன் திரும்பினார். “செல்வி இன்னும் சாப்பிடல அதனாலதான் சிப்ஸ் பேக்கட் வாங்க போனேன்” என்றார். காலையில் பள்ளிக்கு அனுப்பும் குழந்தைக்குச் சாப்பிட சிற்றுண்டியோ, குடிக்கப் பாலோ எதுவுமே தரவில்லையா எனக் கேட்டேன். சிப்ஸ் போன்ற துரித உணவுப் பண்டங்களை மட்டுமே சாப்பிட்டு அக்குழந்தை பழகிவிட்டதாகச் சொன்னார்.
“நாமதான கொடுத்துப் பழக்குறோம். இதபோல சிப்ஸ்க்கு செலவழிக்கிறதுக்கு 1 டம்பளர் பால், 2 இட்லி, 4 கொய்யாப் பழத்துக்குச் செலவழிக்கலாமே அண்ணா” என்றேன். நான் சொன்னது அவரது சுயமரியாதையை உரசுவதாகத் தவறுதலாகப் புரிந்துகொண்டவர், “என் மகளுக்கு நான் ஆப்பிளே வாங்கித்தருவேன்” என்றார். “இல்லணா ஆப்பிள் விலை அதிகம் தவிர வாழைப் பழத்தைவிடவோ, கொய்யாவைவிடவோ ஒசத்தியெல்லாம் இல்ல. நான் பாப்பாவுக்கு ஆப்பிள் வாங்கித் தரதில்லை கொய்யாதான்” என்றேன். அதற்குள் பள்ளிக்கூடம் வந்துவிட்டது. என் மகள் தன் புத்தகப்பையைத் தோளில் தூக்கி மாட்டிக்கொண்டு நடக்க, செல்வி பையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு மெல்ல நகர்ந்தாள்...
தமிழக அரசு, கடந்த ஆட்சிக்காலத்திலும் கரோனா காலத்திலும் குழந்தைகளின் ஊட்டச்சத்தில் ஏற்பட்ட சரிவு குறித்து உடனடியாக ஆய்வு நடத்தி, அதை மதிப்பீடு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மிகமோசமான நிலையில் 91 சதவீத வளர்ச்சி!
குழந்தைத் திருமணம், குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துதல், கடத்தல், கொத்தடிமை முறை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றிப் பேசப்படும் அளவுக்குக் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு நம் சமூகத்தில் தீவிரமாக விவாதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் ’பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ இந்திய குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை தொடர்பாகத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் அண்மையில் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவுகளின் தொகுப்பின்படி கடந்தாண்டு நவம்பர் முதல் 2021 அக்டோபர் மாதம் வரையிலான நிலைமையைத் தெரிவிக்கும் தரவு இது.
33 லட்சத்து 23 ஆயிரத்து 322 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இதில் தெரியவந்துள்ளது. மிக அதிகமாக மகாராஷ்டிராவில் 6.16 லட்சம், பிஹாரில் 4.75 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 3.20 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு 3வது இடத்தில் உள்ளது. ஆந்திராவில் 2.76 லட்சம், கர்நாடகாவில் 2.49 லட்சம், தமிழகத்தில் 1.78 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 17 லட்சத்து 76 ஆயிரத்து 902 குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின்படி குழந்தையின் வயதுக்கு ஏற்ற உயரம், ஏற்ற எடை இன்றி இருப்பது, குழந்தையின் தோளுக்கும் நெஞ்சு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி 115 மில்லி மீட்டருக்கு குறைவான வளர்ச்சியுடன் இருப்பது ஆகியவை மிகமோசமான ஊட்டச்சத்துக் குறைபாடாக வரையறுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுவரை 9 லட்சத்து 27 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்து 17 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் தமிழகக் குழந்தைகளும் அடங்கும். கரோனா காலத்தில் தமிழகக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது ஏற்கெனவே சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதிலும் ஒரே ஆண்டில் 91 சதவீதமாக அதிகரித்திருப்பது என்பது குழந்தைகள் உடல் வளர்ச்சி சார்ந்ததாக மட்டுமல்லாமல் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
’8-வது படிக்கும் குழந்தைக்கு ஏன் அடிப்படை கணக்குகூட புரியல, எழுத்துக்கூட்டி வாசிக்க தெரியல?’ என்று கேட்கிறோம். கருவிலிருந்து தொடங்கி குழந்தைக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கு இதில் பெரும்பங்குள்ளது என்பது பற்றி பேசுகிறோமா? அதிலும் பெரும்பாலும் பட்டியலின, பழங்குடி குழந்தைகள் கல்வியில் பின்தங்கவும் இதுவே அடிப்படை காரணம்.
நல்உணவு மறுக்கப்படுவது மனித உரிமை மீறல்!
இது குறித்து குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயனிடம் ’காமதேனு’ இணையதளத்துக்காகக் பேசியதிலிருந்து:
“தரமான, சத்தான உணவு குழந்தைகளுக்கு மறுக்கப்படுவதும் துன்புறுத்தலுக்கு இணையான மனித உரிமை மீறலே என்பதை முதலில் நம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் குழந்தைக்கு எதிரான வன்முறை உடனடியாக கண்கூடாகத் தெரிந்துவிடுகிறது. அதுவே அவர்களது அடிப்படை உரிமைகளில் ஒன்றான சரிவிகித உணவு பெறும் உரிமை மறுக்கப்படுதல் இன்று கண்ணுக்குத் தெரியாது. ஆனால், காலம் முழுவதும் அவர்களை பாதிக்கும். இது கருவில் இருக்கும் காலத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. ஆகவேதான் கருவுற்ற 1000 நாட்கள் ‘தங்க நாட்கள்’ என்றழைக்கப்படுகிறது.
அதன் பிறகு குழந்தை பிறந்து வளரத் தொடங்கி முதல் ஆறு வருடங்களில் அதன் மூளை கட்டமைப்பு தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இந்த மூளை வளர்ச்சியில் மரபணுவுக்கு எவ்வளவு பங்குள்ளதோ அதேபோல குழந்தை வளரும் சுற்றுச்சூழல், அதற்கு அளிக்கப்படும் உணவுக்கும் பங்குள்ளது. சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் மூளை வளர்ச்சி மந்தமாவதினால்தான் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு பாடங்களைக் கிரகிக்க முடியாமல் பல குழந்தைகள் இடைநின்று போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.’8-வது படிக்கும் குழந்தைக்கு ஏன் அடிப்படை கணக்குகூட புரியல, எழுத்துக்கூட்டி வாசிக்க தெரியல?’ என்று கேட்கிறோம். கருவிலிருந்து தொடங்கி குழந்தைக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கு இதில் பெரும்பங்குள்ளது என்பது பற்றி பேசுகிறோமா? அதிலும் பெரும்பாலும் பட்டியலின, பழங்குடி குழந்தைகள் கல்வியில் பின்தங்கவும் இதுவே அடிப்படை காரணம். அதிலும் இந்த கரோனா காலத்தில் அங்கன்வாடிகள் இல்லாது போனதால் ஊட்டச்சத்து அற்ற குழந்தைகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்திருப்பது மிகப் பெரிய மனித உரிமை மீறல்” என்றார்.
சிதறிக்கிடக்கும் குழந்தைகள்!
மேலும் அவர் கூறுகையில், ”தமிழகத்தின் பெரும்பலம் இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களும். இவற்றை வருமுன் காப்பதற்காகவும் பயன்படுத்த வேண்டும். அதற்கு, அங்கன்வாடிக்கு வரும் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல்நிலை மட்டுமல்லாமல் அமைப்புக்குள் இதுவரை கொண்டுவர தவறிய குறவர், இருளர், பூம்பூம் மாட்டுக்காரர் உள்ளிட்ட அத்தனை சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து தமிழக அரசு முழுமையாக ஆய்வு நடத்தி, மதிப்பீடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பஞ்சாயத்து, அதுகுட்பட்ட அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையம், கிராம சுகாதார அமைப்புகள், ஆஷா ஊழியர்கள் ஆகிய வெவ்வேறு தரப்பினரை ஒரு புள்ளியில் ஒருங்கிணைத்து இதை முன்னெடுக்க வேண்டும். மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் குழந்தையின் வயதுக்கேற்ற உடல் எடை, உயரம், சுற்றளவு முட்டுமில்லாமல் சுவாசம், இதயத் துடிப்பு, கண்பார்வை, செவித் திறன், மூட்டு வளர்ச்சி, கை, விரல்கள் அசைவு உள்ளிட்ட அத்தனையும் பரிசோதிக்கப்பட வேண்டும்.
தனியார் வேண்டாம்!
அது மட்டுமின்றி அங்கன்வாடியிலும் மதிய உணவுத் திட்டத்திலும் தரமான, சத்தான, ஆரோக்கியமான உணவு நம் குழந்தைகளுக்குச் சென்றடைகிறதா என்பது விவாதத்துக்குரியது. இதற்கு தீர்வு காணத் தனியாருடன் இணைந்து அரசு செயல்படலாம் என்று யோசிப்பதும் ஆபத்தானது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் இத்தகைய தவறான முடிவை அரசு எடுத்தது. பிரிட்டானியா நிறுவனம் நாடு முழுவதுமுள்ள 50 ஆயிரம் அங்கன்வாடிகளுக்குப் பதப்படுத்தப்பட்ட உணவை விநியோகம் செய்வதாக முன்வந்தது. பல்வேறு அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அரசு அந்த முடிவைக் கைவிட்டது. சூடான சுகாதாரமான சத்துக்கள் நிறைந்த உணவை அரசாங்க அமைப்புகளின் வழியாக மட்டுமே வழங்குவதை மேலும் பலப்படுத்த வேண்டும்” என்றார்.
கொஞ்சமேனும் பணம் படைத்துவிட்டாலே நர்சரி பள்ளியில் குழந்தையை மூன்று வயதில் சேர்த்துவிடுவதே கவுரவம் என்று நம்புகிறோம். ஆனால், உண்மையில் அங்கன்வாடியில்தான் குழந்தையின் உயரம், எடை சோதிக்கப்படுகிறது, சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. நோய்த் தடுப்பு ஊசிகள் முறையாகச் செலுத்தப்படுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் எதுவுமே நர்சரி பள்ளிகளில் நடைபெறுவதில்லை.
டிஜிட்டல் ட்ராக்கிங் மூலம் முழு வளர்ச்சி!
அங்கன்வாடி உணவு என்பது வக்கற்ற குழந்தைகளுக்கனதாக அனுசரிக்கப்படுவது மிகவும் தவறான போக்கு. அத்தகைய பார்வை முதலில் மாற வேண்டும் என்று மேற்கொண்டு பேசியவர், ”நெதர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் நமது அங்கன்வாடி போன்ற அமைப்புகள் செயல்பட்டுவருவதை நான் நேரடியாக பார்வையிட்டிருக்கிறேன். மேற்கத்திய நாடுகளில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ, அமைச்சர், தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைவரது குழந்தைகளும் ஒரே மையத்தில் தங்கி, உணவருந்துவது அங்கு சகஜம்.
நாமோ கொஞ்சமேனும் பணம் படைத்துவிட்டாலே நர்சரி பள்ளியில் குழந்தையை மூன்று வயதில் சேர்த்துவிடுவதே கவுரவம் என்று நம்புகிறோம். ஆனால், உண்மையில் அங்கன்வாடியில்தான் குழந்தையின் உயரம், எடை சோதிக்கப்படுகிறது, சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. நோய்த் தடுப்பு ஊசிகள் முறையாகச் செலுத்தப்படுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் எதுவுமே நர்சரி பள்ளிகளில் நடைபெறுவதில்லை. அரசின் இந்த அற்புதமான திட்டத்தை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டுமே தவிர ஒழித்துக்கட்டிவிடக் கூடாது.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த ஆட்சிக்காலத்திலும் கரோனா காலத்திலும் குழந்தைகளின் ஊட்டச்சத்தில் ஏற்பட்ட சரிவு குறித்து உடனடியாக ஆய்வு நடத்தி, அதை மதிப்பீடு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
18 வயது வரையிலான குழந்தைகளின் வளர்ச்சி குறித்த தரவுகளை டிஜிட்டலாக பதிவேற்ற வேண்டும். கர்ப்ப கால பராமரிப்புக்கு வழங்கப்பட்டும் எண் மூலமாகத் தாய், சேயின் ஆரோக்கியத்தை அரசு பின்தொடர வேண்டும். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு கிராமத்தில் குழந்தை பிறந்தால், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட எண் மூலம் அந்த குழந்தைக்கு தடுப்பூசி முறையாக வழங்கப்பட்டதா, சத்துமாவு அளிக்கப்பட்டதா, அங்கன்வாடியில் சேர்க்கப்பட்டதா என்பதாக18 வயதுவரை ட்ராக்கிங் செய்ய வேண்டும். இப்படி செய்தால் பள்ளிப் படிப்பு இடைநின்று போன குழந்தைகளை, கடத்தப்பட்ட குழந்தைகளை, குறிப்பான குழந்தை திருமணத்துக்கு ஆளான பெண் குழந்தைகளை எளிதில் கண்டுபிடித்து காப்பாற்றும் நடவடிக்கைகளை முடுக்கிவிடலாம். அதேபோல டிஜிட்டலாக டிராக் செய்யும்போது, சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் உள்ளிட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை சரியாகச் சென்றடைந்ததா போன்ற குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக நிறைவேற்றலாம்” இவ்வாறு குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கூறினார்.