திருச்சி அதிமுகவில் திடீர் நிசப்தம்!


வெல்லமண்டி நடராஜன்

தமிழகத்தின் 2-வது தலைநகரம் என்று கருதப்படும் திருச்சியில் உள்ள அதிமுக முக்கியத் தலைவர்கள் அனைவரும் திடீர் நிசப்தத்தில் ஆழ்ந்துள்ளனர். கட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்ட பரபரப்பான எந்தச் செயல்பாடும் திருச்சியில் தென்படவில்லை. அந்த அளவுக்கு மிகவும் அமைதியாகவே இருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் மோசடி வழக்குகள் தொடரப்படுவதை அடுத்தே, திருச்சி அதிமுகவில் இப்படி திடீர் அமைதி நிலவுவதாகச் சொல்கிறார்கள்.

‘திருப்புமுனை தரும் திருச்சி’ என்பது அரசியல் கட்சிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. மத்திய மண்டலத்தின் தலைநகராக விளங்கும் திருச்சியில் ஆளும்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எப்போதுமே அதிகாரம் மிக்கவர்களாக வலம் வருவது அரசியல் கட்சியினருக்கு வாடிக்கை. திமுகவில் அன்பில் தர்மலிங்கம், செல்வராஜ், கே.என்.நேரு, அதிமுகவில் திருச்சி சௌந்தரராஜன், கே.கே.பாலசுப்ரமணியன் உட்பட அனைவருமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அதிலும் நேருவோ திமுக ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று எதுவாக இருந்தாலும், திமுகவினருக்கும் , பொதுமக்களுக்கும் எப்போதுமே அமைச்சர்தான். அந்த அளவுக்குச் செல்வாக்காக வலம்வருவார்.

வளர்மதி

ஆனால், தற்போது அதிமுகவில் நிலைமை அப்படியில்லை. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி, கு.ப.கிருஷ்ணன், சிவபதி என்று முக்கியத்துவம் வாய்ந்த பலரும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இருக்குமிடம் தெரியாமல் இருக்கிறார்கள் என்கிறார்கள். இவர்களில், கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த வெல்லமண்டியும், வளர்மதியும் அநியாயத்துக்கு அமைதிகாக்கிறார்களாம். திமுக ஆட்சியில் இதுவரையிலும் வருமானவரித் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருக்கும் நபர்களின் பெயர்கள், என்ன காரணத்தாலோ ’வி’ வரிசையில் இருப்பதுதான் வெல்லமண்டி நடராஜனும், வளர்மதியும் நடுங்கிப்போய் அமைதி காக்க காரணம் என்கிறார்கள்.

ரெய்டு வருகிறதோ இல்லையோ, வேறு வகையிலும் இவர்களுக்குக் கிடுக்கிப்பிடியைப் போட்டு அச்சுறுத்தி வைத்திருக்கிறது திமுக அரசு.

ஹரிராம்

அமைச்சர் வளர்மதியின் 2-வது மகன் ஹரிராம், ஆவின் நிறுவன பண்ணையில் பொறியியல் பிரிவில் மேலாளராக வேலை பார்த்தார். அந்த வேலை, கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்ததால் வளர்மதியால் வாங்கித் தரப்பட்டது. தற்போது, திமுக அரசு பதவி ஏற்றதும் பாய்லர் பழுதானதைக் காரணம்காட்டி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பழிவாங்கும் படலத்தின் அடுத்தகட்டமாக, துறை ரீதியான விசாரணைகள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் வளர்மதிக்கு இருக்கிறது.

வெல்லமண்டிக்கோ வேறொரு வில்லங்கம் தலைக்குமேல் கத்தியாகத் தொங்குகிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ், திருச்சி மாநகருக்குச் சற்றேறக்குறைய ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அந்த நிதியின் மூலம் உருப்படியான திட்டங்கள் எதுவும் திருச்சியில் நிறைவேற்றப்படவில்லை என்பது திருச்சி சிவா, நேரு உள்ளிட்ட திமுகவினரின் குற்றச்சாட்டு. மத்திய அரசிடமே இதுகுறித்து திருச்சி சிவா முறையிட்டிருக்கிறார். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட மாநகராட்சிக்குச் சொந்தமான மிகப்பெரிய வணிக வளாகத்தை, வெல்லமண்டியின் சிபாரிசால் முழுவதுமாக ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த விஷயம் விவகாரமாகியிருக்கிறது. தனியார் மருத்துவமனைக்குக் கொடுத்த ஒப்பந்தத்தை நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரான நேரு ரத்து செய்துவிட்டார். இதுகுறித்து, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையும் ரகசிய விசாரணையைத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதால், வெலவெலத்துப் போயிருக்கிறாராம் வெல்லமண்டி.

ஆவின் கார்த்திகேயன்

திருச்சி அதிமுகவில் இன்னொரு முக்கியமான நபர் ஆவின் கார்த்திகேயன். ஆவின் தலைவராக இருக்கும் இந்த கார்த்திகேயன், எடப்பாடியுடன் மிகவும் நெருக்கமான நட்பில் இருப்பவர். வணிகரீதியிலான தொடர்புகளும் உண்டு என்கிறார்கள். இவர், ஆவினில் பலவகையிலும் முறைகேடுகள் செய்திருக்கலாம் என்று திமுக அரசு சந்தேகிக்கிறது. கடந்த ஆண்டுகளில் கார்த்திகேயனின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்திருப்பதை, அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள் திமுகவினர்.

ஆவினின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அபிராமி, திருச்சி ஆவினில் என்னென்ன செலவுகள் செய்யப்பட்டிருக்கின்றன, முறைகேடுகள், ஊழல்கள் நடந்திருக்கின்றனவா என்பதையெல்லாம் தோண்டித் துருவி பட்டியலிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவனைப் போல, ஆவின் தலைவர் கார்த்திகேயனுக்கும் அரசின் கவனிப்பு விரைவில் இருக்கும் என்கிறார்கள்.

கு.ப.கிருஷ்ணன்

‘ஆக்டிவ்’ அரசியலில் இல்லையென்றாலும் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கும் குறிவைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். கடந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணன், ஐஏஎஸ் அதிகாரியான தனது உறவினர் மூலமாகத் திருச்சியின் அரசு அதிகாரிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, சில காரியங்களைச் செய்தார் என்பதால் அவர்மீதும் அரசின் கண் நிலைத்திருக்கிறதாம்.

அடுத்ததாகக் கட்டிட ஒப்பந்தத்தாரர் திருக்குமரன். இவர் அதிமுகவில் இல்லையென்றாலும் இவரது வீடு அதிமுகவினரால் எப்போதும் நிரம்பியிருக்கும். திருச்சி பகுதியின் முக்கிய சாலைகளில், இப்போதும் ரூ.200 கோடிக்கும் மேலான பணிகள் இவர்மூலம் தான் நடைபெற்று வருகின்றன. அனைத்தும் எடப்பாடியுடனான நெருக்கத்தால் கிடைத்தவை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெருமளவு நிதி இவர் மூலமே திருச்சி மாவட்ட அதிமுக வேட்பாளர்களுக்குப் போயிருக்கிறது என்று தங்கள் தலைமைக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள் திமுகவினர். அதனால் முதல்கட்டமாக, திருக்குமரனின் நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவர் மூலமாக நடைபெற்ற பணிகள் குறித்து தீவிரமாக ஆய்வு நடைபெற்று வருகிறது. அதனால் அவரும், அவர் சார்ந்த ஆட்களும் ரொம்பவே அடக்கிவாசிக்கின்றனர்.

சேலம் இளங்கோவனுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு, எடப்பாடியின் தனி உதவியாளர் பூசாரிப்பட்டி மணி மீது மோசடி வழக்கு என தமிழக அரசின் நடவடிக்கைகள் தொடர்வதால், எடப்பாடி ஆதரவாளர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி உள்ளிட்டவர்களும் தங்களுக்கு எதற்கு வம்பு என்று சைலன்ட் மோடுக்குப் போய்விட்டனர்.

ப.குமார்

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒருவித அச்சத்தை ஊட்டி, அவர்களை ஒடுங்கச்செய்திருக்கிறது திமுக அரசு. அதனால் திருச்சி அதிமுக தற்போது அமைதியில் இருக்கிறது.

இதுகுறித்து திருச்சி அதிமுக தரப்பில் கேட்டால், ‘’சட்டமன்றத் தேர்தல், அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் என்று அடுத்தடுத்த தோல்விகளால் கட்சித் தலைமையே சோர்ந்து போய்தான் இருக்கிறது. ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரச்சினையால் எல்லா மாவட்டத்திலுமே கட்சிக்காரர்கள் சுணக்கமாகத்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் திருச்சி அதிமுக மட்டும் அமைதியாகிவிட்டதாக எப்படிச் சொல்ல முடியும்? கட்சி அறிவித்த போராட்டங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆளும் கட்சிக்காரர்கள் ஆண்ட கட்சிக்காரர்கள் மீது எதையாவது குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டால் அரசியல் செய்யவே முடியாது, போவீங்களா” என்கிறார்கள் அலட்சியமாக!

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் பேசினோம். ‘’நாங்கள் எப்போதும் போல்தான் செயல்பட்டு வருகிறோம். யாரும் எங்களை அச்சுறுத்த முடியாது. கட்சியின் வழக்கமான செயல்பாடுகளைக் கவனித்து வருகிறோம். வணிக வளாகம் பிரச்சினை அரசின் செயல்பாடு. அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவ்வளவுதான்” என்று மட்டும் சொல்லி இணைப்பைத் துண்டித்தார்.

களத்தில் கலகலப்பாய் இருந்த கரைவேட்டிக்காரர்கள் திடீரென கப்சிப் ஆனால், கண்டிப்பாக ஏதேனும் வில்லங்கம் இருக்கும். பார்ப்போம்!

x