புதுச்சேரி | போதை பொருள் ஆதாரத்துடன் அதிமுக புகார்: நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி


புதுச்சேரி: போதைப் பொருள் பாக்கெட்டுகளை ஆதாரமாக கொண்டு வந்து முதல்வரிடம் காண்பித்து போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி அதிமுகவினர் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று சந்தித்தார். அப்போது கடைகளில் விற்கும் சில போதைப் பொருள் பாக்கெட்டுகளை முதல்வரிடம் அவர் காண்பித்தார். இது தொடர்பாக முதல்வருக்கு விளக்கம் அளித்த அன்பழகன், “கூல் லிப் என்ற பெயரிலான இந்த பாக்கெட்டுகள் பெட்டிக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கிறது. இது தற்போது மாணவர்கள், இளைஞர்களை அடிமையாக்கி வருகிறது.

பள்ளி, கல்லூரி அருகில் உள்ள சிறிய பெட்டிக்கடைகளில்கூட இது தாராளமாக கிடைக்கிறது. இதுமட்டுமல்லாது ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களும் தாராளமாகக் கிடைக்கிறன. கடைகளில்தான் இதை வாங்கினோம். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்தில் சென்னை துறைமுகத்தில் ரூ.2 கோடிக்கு வந்த போதைப்பொருட்கள் புதுவை முகவரிக்கு வந்துள்ளது. இதையெல்லாம் இரும்புக்கரம் கொண்டு தடுக்காவிட்டால் இளைஞர்களும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

அனைத்தையும் கவனமாக கேட்டுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.