’மழை நிவாரணப் பணியில் ஈடுபடுங்கள்’: திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு


சென்னை கனமழை பாதிப்பு பகுதிகளில் முதல்வர் ஆய்வு

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ.7) நேரடியாகப் பார்வையிட்டார்.

புரசைவாக்கம் பகுதியில், நீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருடன், முதல்வர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கான தகவல்களை தனது ட்விட்டர் கணக்கில் பதிந்தார். அதில் ’வட கிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மொத்த அரசு நிர்வாகமும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 2015 பெருவெள்ளம், கரோனா பேரிடர் என தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம், திமுகவினர் ஒருங்கிணைந்து உதவினார்கள். அந்த வகையில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கான உணவு, பாதுகாப்பான உறைவிடம், மருந்துகள் என அடிப்படை மற்றும் அவசரத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், பொதுமக்கள் 1070 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு, தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

x