சென்னையில் பெய்து வரும் கனமழையை அடுத்து, மாநகரின் பிரதான குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதையடுத்து ஏரியின் உபரிநீர் திறந்துவிடப்பட இருப்பதால், பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறை சார்பில், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், இன்று(நவ.7) காலை நிலவரப்படி 2,934 மில்லியன் கன அடிக்கு மேல், நீர் நிரம்பி வருகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில், தற்போதைய நீர் இருப்பு 22 அடியை தொட உள்ளது. விநாடிக்கு 600 கன அடி அளவில் ஏரிக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிரித்து வருவதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீரை திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் 1.30 மணி அளவில் விநாடிக்கு 500 கன அடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படும். ஏரியின் நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு.
எனவே, ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் பகுதிகளில் அமைந்துள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வாழும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையெனில் அங்கிருந்து வெளியேறவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதேபோல பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், அதிலிருந்து மிகை நீர் வெளியேற்றப்பட உள்ளது. அதன்படி கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்கள், ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.