ஆளுங்கட்சி மீது படரும் ‘அராஜக பிம்பம்’!


மு.க. ஸ்டாலின்

பத்தாண்டுகளுக்கு முந்தைய திமுக ஆட்சியின்போது அக்கட்சியினர் பலரும், நில அபகரிப்பிலும், அராஜகத்திலும் ஈடுபட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதுகுறித்து மக்கள் மத்தியில் எழுந்த மனவோட்டம் காரணமாக, ஏராளமான நல்ல திட்டங்களை கொண்டுவந்திருந்தபோதும் ஆட்சியை இழந்தது கருணாநிதி தலைமையிலான திமுக.

அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, அராஜகத்தில் ஈடுபட்டதாக ஏராளமான திமுகவினர்மீது வழக்குப் பதிந்தது. நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு என்ற ஒன்றைப் புதிதாக உருவாக்கியது. அதில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏராளமான திமுகவினர் மீது அபகரிப்புப் புகார்கள் வந்து குவிந்தன. அதனால் திமுகவுக்கு ஏற்பட்ட கெட்ட பெயர் மக்களிடம் இன்னமும் மறையவில்லை. இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலிலும்கூட, ‘திமுகவினர் அராஜகப் பேர்வழிகள்’ என்பதே அதிமுகவின் பிரச்சாரத்தில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. திமுகவினரின் பிரியாணிக் கடைத் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களின் காணொலிகளை அதிமுகவினர் அதிகமாகப் பரப்பினார்கள். அதையெல்லாம் கடந்துதான் வெற்றி பெற்றது திமுக.

ராஜினாமா கடிதம் கொடுக்கும் செல்லம்மாள்

அதனால் இந்தமுறை ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தார் மு.க.ஸ்டாலின். தானே அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யப்போவதாகவும் அவர் எச்சரித்திருந்தார். எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். அதற்கேற்ப மருத்துவர்கள் பணியிடமாற்றம், செவிலியர்கள் பணி நியமனம் உட்பட பல்வேறு வேலைகள் ஓரளவுக்கு நேர்மையாகவே நடந்துமுடிந்தன.

உயர்மட்டத்தில் இருக்கிற தலைவர்களும் அமைச்சர்களும் முதல்வரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தற்போதுவரை அடக்கி வாசிக்கும் நிலையில், அடுத்தடுத்த நிலைகளில் நிலைமை அப்படி இல்லை என்பதே நிதர்சனம். திமுக வெற்றிபெற்றதும் அம்மா உணவகத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அக்காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தார் ஸ்டாலின். தவறு செய்யும் திமுகவினரை, “முதல்வருக்கு ஃபைல் அனுப்பிவிடுவோம்” என்று அதிகாரிகள் மிரட்டி அடக்கினார்கள். பெரும்பாலான திமுகவினர் அடங்கியேதான் இருந்தார்கள்.

குத்தாலம் மகேந்திரன்

ஆனால், சமீபகாலமாக, திமுகவினர் சிலர் பழையபடி அதிரடிக் காட்சிகளை அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறார்கள். ’பத்தாண்டுகள் கஷ்டப்பட்டிருக்கிறோம், இப்ப எங்க ஆட்சி வந்திருக்கு, இப்பகூட நாங்க சும்மா கிடந்து கஷ்டப்படணுமா?’ என்கிற மனநிலை அவர்களிடம் தலைதூக்கியிருக்கிறது. பல ஊர்களில் மணல் கடத்தல், மதுவிற்பனை போன்றவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஊராட்சி ஒன்றியங்களில் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் மொத்தமாகத் திமுகவினரின் கைகளுக்கே செல்கின்றன. உள்ளாட்சியிலும் தங்கள் அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி மொத்தமாகப் பதவிகளை அள்ளிக்கொண்டிருக்கின்றனர். இவை எல்லாம் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வழக்கமாக நடப்பவைதான் என்றாலும் வெளியில் வந்திருக்கும் சில சம்பவங்கள் திமுகவினர் இன்னும் மாறவில்லையோ என்று மக்களை யோசிக்க வைத்திருக்கிறது.

கடையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் செல்லம்மாள் , அண்மையில் தன் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுத்தார். தலைவர் பதவியில் தொடர வேண்டுமானால், ரூ.ஒரு கோடியே 10 லட்சம் தரவேண்டும் என்று கேட்டு திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் தன்னை மிரட்டுகிறார் என்பது அவரது குற்றச்சாட்டு. இதுகுறித்து, செல்லம்மாளின் மகன் வெளியிட்ட காணொலியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் ஒன்றிய ஆணையராகப் பணியாற்றிய சரவணன், தனக்கு 60 நாள் விடுப்பு கேட்டு மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். விடுப்பு கேட்பதற்கு அவர் சொல்லியிருந்த காரணத்தைப் பார்த்த ஆட்சியர் லலிதா உட்பட அனைவருமே அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஒன்றியத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட ஆளும்கட்சிக்காரர்கள் டெண்டர் உள்ளிட்ட விஷயங்களில் தன்னை மிரட்டுவதாகவும், தன் குடும்பத்தைப் பாதுகாக்க வேறு வழிதெரியாமல் தான் விடுமுறையில் செல்வதாகவும், மீறிப் பணியில் இருந்தால் தனக்கு மரணம்கூட சம்பவிக்கலாம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த 2 சம்பவங்களுக்குப் பின்னாலும் பலமான அரசியல் காரணங்கள் இருப்பதாகச் சம்பந்தப்பட்டவர்களால் உரிய முறையில் விளக்கங்கள் சொல்லப்பட்டாலும், அவை வெளிப்படையாக வெடித்து வீதிக்கு வந்திருப்பதுதான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

இதுதவிர, கடலூர் திமுக எம்பி ரமேஷ், தன்னுடைய முந்திரி ஆலையில் பணிபுரிந்த தொழிலாளியைக் கொலைசெய்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார்.

நெல்லை திமுக எம்பி ஞானதிரவியம், தன்னுடைய நிலத்தை அபகரிக்க முயல்கிறார் என்று அவர் மீது குமாரிபகவதி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். இப்போது ஞானதிரவியம் பாஜக பிரமுகர் பாஸ்கரைத் தாக்கியதாக வழக்கில் சிக்கியிருக்கிறார். இந்தச் சம்பவங்கள் திமுகவினர் இன்னும் மாறவே இல்லை என்ற மனத்தோற்றத்தை மக்கள் மத்தியில் விதைத்திருக்கின்றன.

ரமேஷ்

இதெல்லாம் போதாதென பத்திரிகையாளர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாகவும் திமுகவினர் மீது புகார்கள் எழுந்திருக்கின்றன. திமுக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, காரணமே இல்லாமல் செய்தியாளர்களிடம் கடுகடுத்திருப்பது ஓர் உதாரணம்.

திருவாரூர் ஆட்சியரகத்தில் கடந்த நவம்பர் 1-ம் தேதி நடைபெற்ற விழாவில், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியும், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அப்போது மைக்கை எடுத்த டி.ஆர்.பி.ராஜா, செய்தியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு படபடத்தார். இப்படித்தான் திருவாரூர் திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன், “உங்களையெல்லாம் யார் அழைத்தது?” என்று ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கேட்டார். இப்படி திமுக எம்எல்ஏ-க்கள் தங்களைத் தொடர்ந்து அவமானப்படுத்துவதைக் கண்டித்து, ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

கே.என்.நேரு

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவினர் அராஜங்கங்களில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ’’ஆட்சியில் இருந்தாலும் அராஜகம், ஆட்சியில் இல்லாவிட்டாலும் அராஜகம் என்றால் அது திமுகதான். நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்தினோம். அதனால் ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஆனால், இவர்கள் ஆட்சியில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 85 சதவீதம் ஒன்றிய கவுன்சிலர்களையும், மாவட்ட கவுன்சிலர்கள் 99 சதவீதத்தையும் திமுக கைப்பற்றியுள்ளதை எப்படி எடுத்துக்கொள்வது? நாங்கள் ஒரு சதவீதமா?” என்று கொதிக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

இதுகுறித்து திமுகவின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவிடம் பேசினோம். கடையம், குத்தாலம் சம்பவங்களைப் பற்றிச் சொல்லும்போதே இடைமறித்தவர், ’’அதெல்லாம் எங்க மாவட்டம் இல்லை. அதுபற்றி எனக்குத் தெரியாது” என்றார். “நீங்கள் முதன்மைச் செயலாளர் என்ற முறையில்தான் உங்களிடம் பேசுகிறேன்” என்றதற்கு, ‘’இங்கு என்னைச் சந்திக்க வந்திருக்கும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் உங்களிடம் பிறகு பேசுகிறேன்” என்று இணைப்பைத் துண்டித்தார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடமும் இதுகுறித்து கேட்டதற்கு, ‘’தனது கவனத்துக்கு வரும் எல்லாவற்றிலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்துவருகிறார் முதல்வர். இவையும் முதல்வரின் கவனத்துக்கு போயிருக்கிறது. இதிலும் முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்” என்றார்.

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் சம்பவங்களால், திமுக மீது அராஜகக் கட்சி என்ற பிம்பம் மக்களிடம் மீண்டும் உருவாகிவருவதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்துகொண்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நல்லாட்சி தரவேண்டும் என்ற அவரது லட்சியம் ஈடேறும்.

x