தமிழகத்தில், ஆளுநருக்கும் திமுக தலைமையிலான மாநில அரசுக்கும் இடையே மோதல் மேகம் சூழ்வதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. தமிழகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி முடித்துவிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அடுத்ததாகத் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை அறியும் கூட்டத்துக்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஆளுநர் ஆய்வைப் பெரும் சர்ச்சையாக்கிய திமுக, இந்த முறை கப்சிப் என இருக்கிறது.
ஆளுநர் Vs திமுக
தமிழகத்தில் மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களின் மனநிலை நீர்த்துப்போகாமல் பார்த்துக்கொண்டதில், திமுகவுக்கு முக்கியப் பங்குண்டு. அது, 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அனுகூலமாகவும் முடிந்தது. மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு பாஜக ஆளாத மாநில அரசுகள் கடந்த காலங்களில் முட்டுக்கட்டைப் போட்டுவந்தன. தற்போது அந்த அரசுகளின் பட்டியலில் திமுகவும் சேர்ந்திருக்கிறது. இதனால், இயல்பாகவே பாஜக - திமுக இடையே துருவ அரசியல் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், திமுக அரசுக்கு எதிராக ஆளுநர் வாள் வீசுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில், மாவட்டங்களுக்கு ஆய்வுக்குச் சென்ற பன்வாரிலால் புரோஹித்தின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தியதில் திமுகவின் கடும் எதிர்ப்பும் ஒரு காரணமாக அமைந்தது. இச்சூழலில் பன்வாரிலால் புரோஹித், திமுக அரசுக்கு என்ன மாதிரியான நெருக்கடிகளை ஏற்படுத்துவார் எனும் கேள்வி எழுந்த வேளையில்தான், ஆளுநர் மாற்றமும் நடந்தேறியது. ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரியில் ஆளுநராக இருந்து ஆட்டிப்படைத்த கிரண் பேடியைப் போலவே ஆர்.என்.ரவியும் ஐபிஎஸ் அதிகாரி என்பதால், ஏதோ ஒரு திட்டத்தோடுதான் மத்திய பாஜக ஆட்சி காய் நகர்த்துகிறது என்றே பேசப்பட்டது.
அதன் வெளிப்பாடாக, அரசின் செயல்பாடுகள் தொடர்பாக துறை செயலாளர்களுடன் ஆளுநரின் ஆலோசனை அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய ஆலோசனையில், புதிய கல்விக் கொள்கையைத் தமிழகப் பல்கலைக்கழகங்களில் அமல்படுத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாயின. ஆனால், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்ற நிலைப்பாட்டைத் திமுக அரசு எடுத்துள்ளது. “தமிழகத்துக்கென புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு வகுக்கும்” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆளுநரின் அழுத்தம், திமுக அரசின் மனநிலைக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
‘முதல்வர்’ மோடி எதிர்கொண்ட அழுத்தம்
மத்திய அரசுக்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுக்கும் மாநில ஆட்சியாளர்களுக்கு செக் வைக்க, ஆளுநர் பதவி பயன்படுத்தப்பட்டு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாகாணங்களைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள்தான் ஆளுநர்கள். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், மாறாமல் இருக்கும் பதவிகளில் ஆளுநர் பதவியும் ஒன்று. மாநில அரசுகளைக் கண்காணிக்கும் ‘மத்திய அரசின் முகவர்’ என்று ஆளுநர் பதவி விமர்சனத்துக்குள்ளாவதும் உண்டு. ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாத பதவி என்பதை விளக்கும் வகையில்தான், “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை” என்று முழங்கினார் அண்ணா.
இன்று பிரதமராக இருக்கும் மோடியும், 7 ஆண்டுகளுக்கு முன்புவரை குஜராத் முதல்வராகத்தான் இருந்தார். அப்போது அவருக்கும் இப்படி செக் வைக்கப்பட்டது. குஜராத் ஆளுநராக இருந்த கமலா பெனிவாலுக்கும் மோடிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. தமிழகத்தில் ஆளுநர் சென்னா ரெட்டி - ஜெயலலிதா இடையே மோதல் வெடித்தபோது, 1995-ல் ஆளுநர் வகிக்கும் வேந்தர் பதவியை முதல்வருக்கு எனச் சட்டத்தை ஜெயலலிதா மாற்றியதைப் போல, மாநில லோக் ஆயுக்தாவை நியமிப்பது தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் முதலமைச்சருக்கு வழங்கும் சட்டத்தை மோடி கொண்டுவந்தார். அப்போது அந்தச் சட்டத் திருத்தத்தைத் தூக்கியெறிந்தார் கமலா பெனிவால். அப்போது குஜராத் பாஜகவினர், “டெல்லி சுல்தான்களைப் போலவே திமிர் பிடித்தவர்” என்று ஆளுநருக்கு எதிராக கோஷத்தை வெளிப்படுத்தும் அளவுக்குச் சென்றனர்.
அன்று மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மாநில ஆளுநரால் தொந்தரவுக்கு உள்ளான மோடி, இன்று பிரதமராக இருக்கும்போது எதிர்க்கட்சி மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநரைப் பயன்படுத்துவதாகப் புகார்கள் தொடர்கின்றன.
ஆளுநர்கள் பல விதம்
இந்த விஷயத்தில், ஆளுநரைப் பயன்படுத்திக்கொள்வதில் காங்கிரஸ் - பாஜக இடையே பெரிய வித்தியாசமும் இல்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம். கடந்த 30 ஆண்டுகால தமிழக அரசியலை எடுத்துக்கொண்டால், சண்டைக் கோழி ஆளுநர்களும் இருந்திருக்கிறார்கள். மாநில ஆட்சியாளர்களோடு கைக்கோத்துக்கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள். சர்ச்சைக்கு ஆளானவர்களும் இருந்திருக்கிறார்கள்.
1991-1993 வரை ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயண் சிங்கின் ‘சகல’மும் கவனித்துக்கொள்ளப்பட்டதால், ஜெயலலிதா அரசோடு இணக்கமாக இருந்து புது இலக்கணத்தையே படைத்துவிட்டுச் சென்றார். ஆனால், அதன்பிறகு வந்த சென்னா ரெட்டியும் ஜெயலலிதாவும் சண்டைக்கோழிகளாக இருந்தனர். பிரதமராக இருந்த நரசிம்மராவ் சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் இருவரும் தனித்தனியாகப் பந்தல் அமைத்து பிரதமரை வரவேற்ற கூத்துகளும் அரங்கேறின. கருணாநிதியால் விரும்பி அழைத்துவரப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான ஃபாத்திமா பீவி, ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று தேர்தலில் நிற்கவே தடைசெய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்துவைத்து, அழியா சர்ச்சையை ஏற்படுத்தினார். கருணாநிதி கைது விவகாரத்தில் எல்லாம் சட்டப்படி நடப்பதாக அறிக்கை அளித்து, வாஜ்பாய் அரசால் ஃபாத்திமா பீவி தூக்கியெறியப்பட்டார்.
2002 - 2004 வரை ஆளுநராக இருந்த ராம் மோகன்ராவைப் பதவியிலிருந்து திமுக அங்கம் வகித்த மத்திய அரசு வேறு இடத்துக்கு மாற்றியபோது, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்தது அதிமுக. இது ஆளுநர் மீதான கரிசனத்துக்காக நடக்கவில்லை. திமுகவுக்கு என்றென்றும் பிடித்த சுர்ஜித் சிங் பர்னாலாவைத் தமிழக ஆளுநராகக் கொண்டுவருவதைத் தடுக்க, அதிமுக இந்த அளவுக்கு இறங்கிச் சென்றது. இன்னொரு சென்னா ரெட்டியைப் போல இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோசய்யா, அதிமுக அரசின் செல்லப்பிள்ளையாக இருந்ததோடு, ‘திறப்பு விழா ஆளுநர்’ என்ற பெயரோடு ஊர்ப் போய் சேர்ந்தார். இதன் பின்னர் வந்த பன்வாரிலால் புரோஹித், ஆய்வு என்ற பெயரில் மாவட்டங்களுக்குச் செல்ல, அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அச்சுப் பிசகாமல் செய்து கொடுத்தது எடப்பாடி பழனிசாமி அரசு. இத்தனைக்கும் பாஜக கூட்டணியில்தான் அதிமுக இருந்தது. என்றாலும் ஆய்வு என்ற பெயரில் மூக்கை நுழைத்தார் பன்வாரிலால் புரோஹித்.
சட்டம் என்ன சொல்கிறது?
தற்போது தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவியும், பன்வாரிலால் புரோஹித் தேர்ந்தெடுத்த பாதையைத்தான் தேர்வு செய்திருக்கிறார். ஏற்கெனவே மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பாஜக அல்லாத ஆட்சிகள் நடைபெறும் மாநிலங்களில் ஆளுநர்கள் முதல்வர்களோடு மோதல் போக்கையும் ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். தற்போது, அதில் தமிழ்நாடும் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாநில சுயாட்சியைத் தீவிரமாகப் பின்பற்றும் கட்சி திமுக. அப்படிப்பட்ட திமுக, ஆளுநர் ரவியின் ஆலோசனைக் கூட்டம் தொடர்பான விஷயத்தில் மயான அமைதியில் இருக்கிறது.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் மோடியோடு இணக்கமாகச் செல்லும் நவீன் பட்நாயக் (ஒடிசா), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா) ஆகியோருக்கு ஆளுநர்களால் எந்தத் தொந்தரவும் ஏற்படவில்லை. பொதுவாக ஆளுநர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிடலாமா கூடாதா என்ற இரு வேறு கருத்துகள் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுப்பட்ட ஆட்சி இருக்கும்போது, நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லை என்பதுதான் மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான கட்சிகளின் நிலைப்பாடு.
இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்படும்போது, இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 162 (1),(2)-ஐ மேற்கோளாகக் காட்டுவது வழக்கம். இந்த ஷரத்துகள், “ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட வேண்டிய விஷயமா அல்லது இல்லையா என்ற கேள்வி எழுந்தால், ஆளுநரின் முடிவுவே இறுதியானது மற்றும் செல்லுபடியாகும். ஆளுநரால் செய்யப்படும் எதுவும் அவர் தனது விருப்பப்படி செயல்பட்டிருக்க வேண்டும் அல்லது செய்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கேள்விக்கு உட்படுத்தப்படக் கூடாது” என்று கூறுகின்றன. ஒருவேளை தமிழகத்தில் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தீவிரமாகத் தலையிட்டால்கூட, இந்தச் சட்டக்கூறைத்தான் துணைக்கு அழைப்பார்கள்.
காத்திருக்கும் காட்சிகள்
அதே வேளையில், ஆளுநர் பதவி பற்றியும் அவருடைய அதிகாரங்கள் பற்றியும் ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் பல பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, “மத்திய அரசின் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரை, மாற்றுக் கட்சியினர் ஆளும் மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கக் கூடாது; ஒரு மாநிலத்தில் ஆளுநரை நியமிக்கும் முன்பு அந்த மாநிலத்தின் முதல்வருடன் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆலோசித்த பிறகு நியமிக்க வேண்டும்; எந்தக் கொள்கைத் திட்டங்களையும் மாநில அரசிடம் வலியுறுத்துவது ஆளுநரின் பணியல்ல எனப் பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. ஆனால், இந்தப் பரிந்துரைகள் எல்லாம் கிடப்பில்தான் கிடக்கின்றன.
மாநில சுயாட்சியைத் தீவிரமாகப் பின்பற்றும் கட்சி திமுக. அப்படிப்பட்ட திமுக, ஆளுநர் ரவியின் ஆலோசனைக் கூட்டம் தொடர்பான விஷயத்தில் மயான அமைதியில் இருக்கிறது. ஆளுநரிடம் திமுக பம்முகிறதா அல்லது பாயக் காத்திருக்கிறதா என்பது, அக்கட்சியின் அடுத்தடுத்த நகர்வுகளில் தெரிந்துவிடும்.