இடைத்தேர்தலில் அடி; எதிர்வரும் 5 மாநிலத் தேர்தலுக்கு நெருக்கடி!


பாஜக தலைவர்கள் மோடி, நட்டா, அமித் ஷா

பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் சறுக்கலை அடுத்து, அவற்றை விவாதிப்பதற்காக பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நாளை(நவ.7) கூடுகிறது. நெருங்கும் 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நெருக்கடி குறித்தும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இடைத்தேர்தல்களின் வீழ்ச்சி, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் எதிரொலிக்குமோ என்ற கவலை பாஜகவுக்கு எழுந்துள்ளது. அது தொடர்பான விவாதங்கள், மக்கள் அதிருப்தியை தணிக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கலந்தாலோசிக்க உள்ளது.

கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையிலான இந்தக் கூட்டத்தில், பாஜக ஆட்சி புரியும் மாநில முதல்வர்கள், கட்சியின் முக்கியத் தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள், பிரதான நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தின் நிறைவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள தேர்தல்களுக்கான வியூகங்கள் குறித்து, பிரதானமாக விவாதிக்கப்பட உள்ளன.

கூட்டத்தின் இறுதியில், பணவீக்கம் மற்றும் பொருளாதார சுணக்கத்திலிருந்து விடுபடும் வகையில், பல்வேறு நாடு தழுவிய அறிவிப்புகள் குறித்தும் முடிவுகள் எட்டப்பட உள்ளன. பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பின் வழியில், பொதுமக்களின் எதிர்பார்ப்புக்குரிய அறிவிப்புகளாக அவை இருக்கும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

x