காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் என மொத்தமே 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க அனுமதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபாவளி அன்று மொத்தமே 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்காமல் இருந்திருப்பார்கள் மக்கள். அந்த அளவுக்கு நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாய் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள்.
பட்டாசு வெடிக்கும் நேரம் மாத்திரமல்ல... 120 டெசிபலுக்கும் கூடுதலான ஒலி மாசை உண்டாக்கக் கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது, சரவெடிகளைக் கொளுத்தக்கூடாது என்றெல்லாம் நீதிமன்றம் விதித்த தடைகளையும் யாருமே பொருட்படுத்தவில்லை. சாலைகளில் குவிந்து கிடக்கும் காகிதக் குவியலே இதற்கெல்லாம் சாட்சி.
போதாக்குறைக்கு, “கடந்த ஆண்டு கரோனா அச்சத்தில் இருந்ததால் பட்டாசு வெடித்துக் கொண்டாட முடியவில்லை. இந்த ஆண்டு அதையும் சேர்த்துவைத்து வெடிப்போட்டுக் கொண்டாடி விட்டோம்” என இல்லத்தரசிகளே பேட்டி கொடுக்கிறார்கள்.
நீதிமன்ற உத்தரவை சரிவர அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் ஆய்வாளர் நீதிமன்றத்துக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வீடு வீடுக்குப் போய் கையைப் பிடித்து நிறுத்தவா முடியும் என்று நினைத்து, காவல் ஆய்வாளர்களும் கம்மென்று இருந்துவிட்டனர். அப்படியே அவர்கள் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்தாலும், எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்க முடியும் என்பதும் நியாயமான கேள்வியாகத்தான் தெரிகிறது.
ஆனாலும் தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,505 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து அதில், 517 பேர் கைது செய்யப்பட்டதாகக் கணக்குச் சொல்லி இருக்கிறது காவல் துறை. இதெல்லாம், நாளைக்கு நீதிமன்றம் கேட்டால், கணக்குக் காட்டத்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. கைது செய்தவர்கள் உடனடியாக ஜாமீனில் விடப்பட்டுவிட்டதால், இன்னமும் வெடிச்சத்தம் காதைப் பிளக்கிறது.
சென்னை போன்ற பெருநகரங்களில், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு புகை மண்டலம். எஞ்சிய பட்டாசுகளைக் கொளுத்த மக்கள் வீதிக்கு வருவார்கள் என்பதால், இன்னும் சற்று நேரத்தில் மீண்டும் புகை மூட்டத்தாலும் வெடிச் சத்தத்தாலும் மக்கள் அவதிப்படப் போகிறார்கள்.
அரசே டாஸ்மாக் கடைகளை திறந்துவைத்துவிட்டு, ‘மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு’ என பிரச்சாரம் செய்கிறது. அதேபோல் ஒலி மாசு மிகுந்த பட்டாசுகளை ரகம் ரகமாக தயாரிக்க அனுமதியும் கொடுத்து, அதைப் பகிரங்கமாக விற்கவும் அனுமதித்துவிட்டு, “பட்டாசு வெடிக்காதே...” என்று சொன்னால் யார் கேட்பார்கள்?