பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதில் சொல்வதில் கார்த்தி சிதம்பரம், ’சிலம்பு’ எக்ஸ்பிரஸ். கேள்வியை முடிக்கும் முன் பதிலையே சொல்லி முடித்துவிடுவார். மற்ற தலைவர்களிடம் 15 நிமிடத்தில் எடுக்கும் நேர்காணலுக்கான பதிலை, இவரிடம் 7 நிமிடத்தில் வாங்கிவிடலாம். அப்படி ’காமதேனு’ இதழுக்காக கார்த்தி சிதம்பரம் அலைபேசி வழியே அளித்த பேட்டி...
பெட்ரோல் விலை வெறும் 7 காசு உயர்ந்ததற்கே நாடாளுமன்றத்துக்கு மாட்டு வண்டியில் போனார் வாஜ்பாய். கியாஸ் விலை 10 ரூபாய் உயர்ந்ததற்கே ஆர்ப்பாட்டம் நடத்தினார் ஸ்ருமிதி இரானி. ஆனால், பெட்ரோல், கியாஸ் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்தும் காங்கிரஸ் கட்சி அப்படியான தீவிர போராட்டத்தில் ஈடுபடவில்லையே, ஏன்?
முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க. ரோட்டுக்கு வந்து போராடுவதற்கெல்லாம் இப்போது மக்கள் யாரும் தயாராக இல்லை. போராட்ட அரசியல் எல்லாம் முடிஞ்சு போச்சு. வேலைக்குப் போனோமா, பிள்ளைகளை நல்லாப் படிக்க வெச்சோமா, பொண்ணுக்கு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி வெச்சோமா, சொந்தமா வீடு கட்டுனோமா என்பதில்தான் மக்களின் கவனம் இருக்கிறதே தவிர, புரட்சி, போராட்டத்தில் எல்லாம் நம்பிக்கையில்லை. குறிப்பா, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்க மனநிலைக்கு வந்துட்டாங்க. வீதிக்கு வந்தெல்லாம் போராட மாட்டாங்க. ரெண்டாவது, ரோட்டுக்கு வந்துதான் போராடணும்ங்கிற அவசியமும் கிடையாது. மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றால் தேர்தல் நேரத்தில்தான் தெரிவிப்பார்கள். உண்மையான பிரதிபலனும் அப்போதுதான் கிடைக்கும். மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும், குழப்பமான ஜி.எஸ்.டி நடைமுறையாலும், லாக்டவுண் காலத்தில் ஏழைகளுக்கும், தொழில் முனைவோருக்கும் உரிய ஊக்கத்தொகை கொடுக்கப்படாததாலும் நாட்டின் பொருளாதாரம் அடி பாதாளத்துக்குப் போயிடுச்சு. பொருளாதாரம் மோசமாகப் போனதால, அரசாங்கத்திற்கு வர வேண்டிய வரிப்பணமும் குறைஞ்சிடுச்சு. வியாபாரம் நடந்தால்தானே, லாபம் இருந்தால்தானே வரி கட்டுவார்கள்? அதனால எந்தப் பொருள் மேல் வரி போட்டால் இந்தியாவில் உள்ள அத்தனை கோடிப் பேரையும் வரி கட்ட வைக்க முடியும் என்று திட்டமிட்டேதான் பெட்ரோல், டீசல் மீது வரி போடுறாங்க.
சொந்த வாகனம் இல்லாதவங்களும்கூட, தாங்கள் வாங்குகிற பொருட்கள் வாயிலாக மறைமுகமாக இந்த வரியைச் செலுத்துறாங்க. இப்படி மக்களின் ரத்தத்தை அட்டையைப் போல உறிஞ்சுறதுதான் அவங்களோடத் திட்டம். பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால்தான் இந்த விலையேற்றம். எனவேதான் சொல்கிறேன் இந்த அரசாங்கம், இந்தப் பிரதமர், இந்த நிதியமைச்சர் இருக்கும்வரையில் பெட்ரோல், டீசல் விலை குறையவே குறையாது. மக்கள் தங்கள் எதிர்ப்பை தேர்தல் நேரத்தில்தான் காட்ட முடியும், காட்டுவார்கள்.
2024 மக்களவைத் தேர்தலிலாவது பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரள வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், அப்படி எந்த அணிச் சேர்க்கையும் ஏற்படுவதுபோல் தெரியவில்லையே?
சில நேரங்களில் தானாக அணிச் சேர்க்கை நடக்கும். சில நேரங்களில் யாராவது முயற்சியெடுத்து அணியை உருவாக்குவார்கள். முதலில் அந்த அணி அமையட்டும். நியாயமாகப் பார்த்தால், இந்தியாவிலேயே பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் தலைமையில் அணி அமைவதுதான் நியாயமாகவும், வலுவாகவும் இருக்கும். எல்லோரும் இதுபற்றி பேசி ஒரு முடிவுக்கு வரும்போது தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன்.
ஆனால், காங்கிரஸ் கட்சியால் பாஜகவைத் தோற்கடிக்கவே முடியாது என்கிறாரே மம்தா பானர்ஜி?
இன்று இந்தி பேசும் மாநிலங்களில், தீவிரமான இந்துத்துவா கொள்கையால் பாஜகவுக்குக் கணிசமான வாக்குவங்கி இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அவர்களின் மொத்த வாக்குகள் 35 சதவீதம்தான். மீதி 65 சதவீத வாக்குகள் பாஜகவுக்கு எதிராகத்தான் இருக்கிறது. அந்த வாக்குகளும் சிதறி இருப்பதால்தான் பாஜக திரும்பத் திரும்ப வெற்றிபெறுகிறது. அதற்காக அந்த 65 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி ஒன்று சேர்த்தே ஆக வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. 40 சதவீதத்தை ஒன்று சேர்த்தாலே போதும், பாஜக படுதோல்வியடையும். அதைக் காங்கிரஸ் கட்சி சாதித்துக்காட்டும்.
ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த உத்தர பிரதேசம், இப்போது பாஜகவின் கோட்டையாகியிருக்கிறது. பிரியங்கா காந்தியின் தீவிர அரசியல் செயல்பாடு, அங்கே காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறீர்களா?
உத்தர பிரதேசத்தைப் பற்றி எனக்கு முழுமையாகச் சொல்லத் தெரியவில்லை. காரணம், நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன். இருந்தாலும் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சிக்குப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சி, வேகத்தையும் ஊட்டியிருக்கிறார். 40 சதவீதம் தொகுதிகளில் மகளிருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று அவர் சொல்லியிருப்பது, நிச்சயம் வரவேற்கத்தக்க அறிவிப்பு. அதேநேரத்தில் வெறும் பிரச்சாரத்தால் மட்டுமே வெற்றிபெற்றுவிட முடியாது. கட்சியின் கட்டுமானம் வலுவாக இருந்தால்தான் தேர்தலில் வெற்றி எளிதாக இருக்கும். உத்தர பிரதேசத்தில் அவ்வளவு பலமாகக் காங்கிரஸ் கட்சி இல்லை என்றும் சொல்கிறார்கள். எனவே, அங்கே கூட்டணி அமைத்துக்கொண்டால் காங்கிரஸின் வெற்றிக்குப் பேருதவியாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
2ஜி ஊழல் குற்றச்சாட்டைச் சொன்ன மத்திய தலைமைக் கணக்காயர் சிஏஜி வினோத்ராய், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து?
இந்தியாவிலேயே ஓர் இமாலயப் பொய்யைச் சொன்ன பெருமை இந்த வினோத் ராய்க்கு உண்டு. அவர் எந்தக் காரணத்திற்காக இவ்வளவு பெரிய பொய்யை இவ்வளவு துணிச்சலாகச் சொன்னார் என்பதை, உடனே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சி மீதும், ஆட்சி மீதும் அவதூறைப் பரப்பி அதன் பெயரைக் கெடுத்ததில் இந்தக் குற்றச்சாட்டுக்கு முக்கியமான பங்கு உண்டு. இதுதான் மக்களுக்குக் காங்கிரஸ் கட்சி மீது தவறான அபிப்ராயம் ஏற்பட்டு, மோடி வெற்றிக்கும் காரணமாக இருந்தது. எனவே, வினோத் ராய் செய்தது மன்னிக்கவே முடியாத குற்றம்.
இந்தக் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எவ்வளவு பாதிக்கப்பட்டதோ, அதைவிட அதிகமாக திமுகவும் பாதிக்கப்பட்டதே?
ஆமாம். திமுகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கை பலருக்குப் பாதிக்கப்பட்டது. ஆ.ராசா, கனிமொழி உள்பட பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்தப் பொய்க் குற்றச்சாட்டு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, அவர்கள் எல்லாம் இந்த வினோத் ராய் மீது மான நஷ்டஈடு வழக்குப் போட வேண்டும். கூடவே, அவர் எந்த அடிப்படையில் இந்தப் பொய்யைச் சொன்னார், அப்படிப் பொய் சொல்வதற்கு அவருக்குக் கிடைத்த சன்மானம் என்ன, அவருக்கு என்ன தண்டனை தரலாம் என்று ஆராய்வதற்காகத் தனி ஆணையமே அமைக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாம் ஓரணியில் நிற்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் உரிமையைக் காக்க அவர்களைப் போல இங்கு யாரும் தீவிரம் காட்டுவதில்லையே?
இது ஒரு சிக்கலான பிரச்சினை. அணையின் தண்ணீர் தமிழ்நாட்டிற்குச் சொந்தம், அணை இருப்பது கேரளத்திற்குள், அந்த அணையை கட்டுப்படுத்தும் உரிமை தமிழ்நாட்டிற்கு. நாம் அணை வலுவாக இருக்கிறது, நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்கிறோம். அவர்கள் அணை வலுவிழந்திருக்கிறது, நீர்மட்டத்தை உயர்த்தினால் ஆபத்து என்கிறார்கள். இதைப் பேசித்தான் தீர்க்க முடியும். விடலைத்தனமாக நடந்துகொள்ளாமல், பக்குவமான அணுகுமுறையுடன் 2 மாநிலங்களும் உட்கார்ந்து பேசித்தான் தீர்வு காண முடியும். இப்படி இந்தியாவுக்குள் பல பிரச்சினைகள் இருக்கின்றன, இருக்கத்தான் செய்யும். எல்லாவற்றையும் பேசித்தான் தீர்க்க வேண்டுமே தவிர, வேகம் காட்டுவது எல்லாம் பலனளிக்காது.
கேரள மக்கள் பிரதிநிதிகள் அணையை ஆய்வு செய்கிறார்கள், மக்களின் குரலைப் பிரதிபலிக்கிறார்கள். ஆனால், அணையால் பயன்பெறும் மாவட்டத்தைச் சேர்ந்த மதுரை, சிவகங்கை மக்கள் பிரதிநிதிகளான நீங்கள்கூட நம் விவசாயிகளின் குரலை எதிரொலிப்பது இல்லையே, ஏன்?
எல்லா மக்கள் பிரதிநிதிகளும் அவர்கள் மாநில நலன், மக்கள் சார்ந்துதான் பேசுவார்கள். நாங்களும் அப்படித்தான். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழக அரசாங்கம் எடுக்கிற முடிவுக்கு முழு ஆதரவு தருகிறோம்.
அதிமுகவில் மீண்டும் பெரிய அளவில் குளறுபடிகள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. இது எங்கே போய் முடியும் என்று நினைக்கிறீர்கள்?
இந்தக் கேள்விக்கு நான் தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாகப் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன், இந்தக் கட்சியும், அதன் தலைமைப் பொறுப்பும் முழுமையாக சசிகலாவிடம் போய்விடும் என்று. அந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. இன்றைய பிரச்சினைகளும், போக்குகளும் அதை உறுதி செய்யும் விதமாகத்தான் இருக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி சிறைக்குப் போய்விடுவார் என்று சொல்கிறார்களே..?
அது எனக்குத் தெரியாது சார். அவரெல்லாம் முதல் அமைச்சர் ஆவார் என்று நான் என்றுமே நினைத்ததில்லை, கணித்ததில்லை. சாதாரணமாக இருந்தவர் கோட்டைக்குப் போனது மாதிரி, அடுத்து எங்கே போவார் என்றும் என்னால் கணிக்க முடியவில்லை. பார்க்கலாம்!