தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்ததில் பெண் காவலர் உயிரிழப்பு


மரம் விழுந்ததில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் கவிதா

சென்னை தலைமைச் செயலகத்தில் வேரோடு மரம் சாய்ந்து விழுந்ததில், பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைமைச் செயலகத்தில் சுழற்சி முறையில் போலீஸார் வாகன தணிக்கை, மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இன்றும் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே இருந்த பெரிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து, போக்குவரத்துக் காவலர்கள் மீதும், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் விழுந்தது. இதில் போக்குவரத்துப் பெண் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காவலர் முருகன் உட்பட 2 காவலர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். மரம் விழுந்ததில் 3 கார் மற்றும் 8 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

வேரோடு சாய்ந்து விழுந்த மரம்

உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மற்ற போலீஸார், கோட்டை காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு மீட்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் விழுந்து கிடந்த மரத்தை இயந்திரம் மூலம் வெட்டி அப்புறப்படுத்தி, பெண் காவலரின் உடலை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து கோட்டை போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண் போக்குவரத்து காவலர், தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்துவரும் கவிதா(42) என்பதும், 2005-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தவர் என்றும், தற்போது முத்தியால்பேட்டை போக்குவரத்துக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவந்ததும் தெரியவந்தது.

உயிரிழந்த கவிதாவுக்குத் திருமணமாகி சாய்பாபா என்ற கணவரும் 2 மகன்கள், 1 மகளும் உள்ளனர். அதில் ஒரு மகனும், மகளும், தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். மற்றொரு மகன் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார். இன்று கவிதாவுக்குத் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்புப் பணி ஒதுக்கப்பட்டிருந்ததை அடுத்து, இன்று காலை அவர் பணியில் இருந்தபோது இச்சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தைத் தலைமைச் செயலாளர் இறையன்பு பார்வையிட்டுச் சென்றார். சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்துவருகிறது.

x