அன்புத் தலைவர் சிதம்பரம் யாரையும் அதிர்ந்து பேசமாட்டார் என்பதால், ஆரம்ப நாட்களில் அவரது பேச்சுக்கு யாரும் அப்பீல் பேசமாட்டார்கள். தலைவர் சொல்லிவிட்டால், சிவகங்கை காங்கிரஸ்காரர்களுக்கு அதுதான் வேதவாக்கு என்று இருந்த காலமும் ஒன்று இருந்தது. அப்படிப்பட்ட சிதம்பரத்தையே, நேருக்கு நேராய் நின்று அதட்டிக் கேள்விகேட்ட காங்கிரஸ் போராளி அண்ணன் எம்.ஏ.டி.அரசு.
1992-ல் சிவகங்கை ராஜேஸ்வரி மஹாலில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம். என்ன காரணமோ தெரியவில்லை... அந்தக் கூட்டத்துக்கு மாவட்டத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலருக்கு அழைப்புப் போகவில்லை. தொகுதி எம்பி-யான ப.சிதம்பரமும் அந்தக் கூட்டத்துக்கு வருகிறார். அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் லிஸ்டில் அண்ணன் அரசுவும் இருக்கிறார். அதற்காக அவர் சும்மா இருக்கவில்லை. “அதெப்படி அழைப்பு அனுப்பாம இருக்கலாம்... அழைப்பு அனுப்பாட்டா கூட்டத்துக்குப் போகாம இருந்துருவோமா?” என்று சீறிக் கிளம்பினார் அரசு. “விடப்பா... பேசிக்கலாம்” என்று எத்தனையோ பேர் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. அன்றைய கூட்டத்தில் தன்னை நோக்கி அரசு வீசிய கேள்விக் கணைகளை, இந்த நிமிடம் வரை தலைவர் சிதம்பரம் எதிர்க்கொண்டிருப்பாரா என்பது சந்தேகம்தான்.
அர்ப்பணிப்பு, சேவை, போராட்டம், சிறைவாசம் எனப் பல நிலைகளை கடந்தவர்கள் கட்சிப் பதவிகளை தாண்டி வரமுடிவதில்லை என்பதற்கு அண்ணன் அரசு இன்னுமோர் உதாரணம்.
தூய கதராடை, மிடுக்கான கண்ணாடி, நெற்றியில் விபூதிக் கீற்று, கையில் எப்போதும் மடித்து வைக்கப்பட்ட காங்கிரஸ் துண்டு, ஒரு சின்ன லெதர் கைப்பை... இதுதான் அண்ணன் அரசுவின் அடையாளம். அப்பா முத்து சேர்வை. அம்மா அழகு. இவர் பெயர் திருநாவுக்கரசு. அதன் சுருக்கம் எம்.ஏ.டி.அரசு. அரசு என்றால், அந்தக் காலத்து காங்கிரஸ் பேரியக்கத்தில் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.
மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள புதுக்குளம் தான் அரசுவின் பூர்விகம். பிறப்பிலேயே காங்கிரஸ் குடும்பம். அப்பா முத்து சேர்வை தீவிர காங்கிரஸ்காரர். மானாமதுரை ஒன்றியப் பெருந்தலைவராக இருந்தவர். 1970 உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சங்கரலிங்கம் சேர்வையும் திமுகவின் தா.கிருட்டிணனும் மானாமதுரை ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு மோதுகிறார்கள். அப்போது திமுக ஆளும் கட்சி என்பதால், தாகியாருக்கு ஆதரவாக காங்கிரஸ் ஊராட்சி மன்றத் தலைவர்கள் (அப்போது ஊராட்சி மன்றத் தலைவர்கள்தான் ஒன்றியத் தலைவரை தேர்வு செய்வார்கள்) சிலரை திமுக தரப்பில் பாதுகாத்து வைத்திருந்தார்கள். அப்படிப் பந்தோபஸ்து போட்டு வைத்திருந்தும், வாகனத்தில் ஓட்டுப்போட அழைத்து வரும்போது, சுந்தரநடப்பு அருகே வாகனத்தை மறித்து காங்கிரஸ் தலைகளை அதிரடியாக மீட்டுக்கொண்டு போனவர் அரசு.
இதைப் பெருத்த அவமானமாகக் கருதிய திமுக தரப்பு, தாலுகா காங்கிரஸ் தலைவர் பொன்னுச்சாமி பிள்ளை, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள் முத்து சேர்வை, சங்கரலிங்கம் சேர்வை மூவரையும் சங்கிலியால் கட்டி தெருவில் தரத்தரவென இழுத்துச் சென்றதை மானாமதுரை இன்றைக்கும் மறக்காது. இந்த சம்பவத்துக்குப் பின்னால், கோவையில் 9 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார் அரசு. அதற்குப் பிறகும் திமுக ஆட்சியில் வழக்கு மேல் வழக்காக போடப்பட்டு, முத்து சேர்வை குடும்பமே ஒட்டுமொத்தமாக திணறடிக்கப்பட்டது.
அதற்காக அண்ணன் அரசு தனது கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை. காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது பெரும் ஈடுபாட்டுடன் இருந்தார். இளைஞர் காங்கிரஸ், சிவாஜி மன்றம் என காங்கிரஸ் அரசியலின் எல்லா பரிணாமங்களிலும் மிளிர்ந்தார் அரசு. 1996-ல் தமாகா உதயமான போது, காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் மாவட்டத் தலைவர் தேர்வு நடந்தது. சிவகங்கை பயணியர் விடுதியில் இதற்கான கூட்டம்.
மாவட்ட தலைவர் தேர்வுக்காக மேலிடப் பார்வையாளராக அண்ணன் சி.ஆர்.சுந்தரராஜனை அனுப்பி இருந்தார், மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு. இந்தப் பக்கம் அண்ணன் அரசு. அந்தப் பக்கம் அப்போதைய மாவட்ட தலைவர் அரணையூர் பழனிச்சாமி. இருவருமே மாவட்ட தலைவர் பதவிக்காக மோதுகிறார்கள். நடுவராக சி.ஆர்.எஸ். வெகுநேரம் இழுத்தது பேச்சுவார்த்தை. அந்த இடத்தில் இளைஞனான நானும் நின்று அத்தனை நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டிருந்தேன்.
கடைசியில் ஒரே வரியில் சொல்லிவிட்டு எழுந்தார் அரசு. “பழனிச்சாமியே மாவட்ட தலைவரா தொடரட்டும். ஏன்னா... ப.சிதம்பரத்தால் மாவட்டத் தலைவராக கொண்டுவரப்பட்ட மனுஷன் சிதம்பரம் பின்னால் தமாகாவுக்குப் போயிருந்தா எம்எல்ஏ கூட ஆகிருக்கலாம். தமாகாவுக்கும் மாவட்ட தலைவராக இருந்திருக்கலாம். அப்படிப் போகாம காங்கிரஸ் கட்சிதான் பெருசுன்னு நினைச்சவரை நாம் மதிக்கக் கத்துக்கணும். அதனால் அவரே மாவட்டத் தலைவரா தொடரட்டும்.” என்று சொல்லிவிட்டார் அரசு.
அதுதான் அண்ணன் அரசு. காங்கிரஸ் மட்டுமே அவர் சிந்தனை. மற்றதெல்லாம் அப்புறம்தான். தனது கைக்குப் பக்கத்தில் இருந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை போகிற போக்கில் இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்த அண்ணன் அரசு எங்கே? ஓவர் நைட்டில் ஒபாமா ஆகத் துடிக்கும் இன்றைய பிள்ளைகள் எங்கே?
இன்றைக்கு சிலர், கைக்காசை எடுத்தால் கரைந்துவிடுமென்று கான்ட்ராக்ட்காரர்கள் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். ஆனால் அண்ணன் அரசு, கட்சிக் கூட்டம், நிகழ்ச்சிகளை நடத்த அஞ்சியதே இல்லை. செலவுக்குப் பணமில்லை என்றால் வீட்டுக்கு போவார். குறிப்பறிந்து நகைகளைக் கழற்றிக் கொடுத்து விடுவார் அண்ணனுக்கு வாக்கப்பட்ட அந்த மகராசி. மனைவியின் நகைகளை விற்றோ, வைத்தோ கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி விடுவார். இப்படியே அந்த மாதரசியின் 101 பவுன் தங்கத்தையும் கட்சிக்காக அழித்தவர் அண்ணன் அரசு என்பார்கள்.
1984 மக்களவைத் தேர்தலில் சிவாஜி மன்றத்துக்கு சில இடங்கள் ஒதுக்கப்படும் சூழல் வந்தபோது, ராமநாதபுரம் தொகுதிக்கு கேட்பு மனுதாக்கல் செய்ய நடிகர் திலகமே அழைத்துச் சொன்னார். அதை அன்போடு மறுத்துவிட்டார் அரசு. ஆனாலும் சிவகங்கை தொகுதிக்கு எம்எல்ஏ ஆகவேண்டும், பச்சை மையால் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார் அரசு. கடைசிவரை அவரின் அந்த ஆசை நிறைவேறாமல் போனது.
2001-ல் மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அப்போதும் சாமானியராக பஸ்ஸில்தான் பயணிப்பார். தேர்தல் அரசியலில் படுசமர்த்தர். யாரையும் எளிதாகச் சமாளித்துவிடும் எவர் க்ரீன் சமர்த்தர். ஆனால், அடுத்தவர்களுக்கு களப்பணி செய்தே அவரது ஆயுள் முடிந்துவிட்டது.
கட்சியினரைச் சந்திக்கச் செல்லும் இடங்களில், “அண்ணே சாப்பிட்டுப் போலாமே” என்று கட்சியினர் சொன்னால், “அதெல்லாம் வேண்டாம்பா... நல்லா ஒரு டீ மட்டும் சொல்லு” என்பார் அரசு. இதுகுறித்து யாராவது கேட்டால், “திமுக, அதிமுகவா... இதுல போட்டு அதுல எடுக்கிறதுக்கு. அவன் காங்கிரஸ்காரன்பா. செலவுக்கு எங்க போவான்? அவனுக்கு என்ன சூழ்நிலையோ எப்படி இருக்கானோ. அவன நம்மளும் ஏன் சிரமப்படுத்தணும்” என்பாராம் அரசு.
டெல்லியில் மத்திய அமைச்சரின் உதவித் தனிச் செயலராக பணியாற்றிட எனக்கு வாய்ப்பு கிட்டிய சமயம், அண்ணன் அரசு தொலைபேசியில் என்னை அழைத்தார். “தம்பி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார். “ஏன்ணே அப்படிச் சொல்றீங்க” என்று கேட்டேன். ஒரு நல்ல காங்கிரஸ்காரனான உனக்கு இப்படியான வாய்ப்புக் கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்பா” என்று திரும்பச் சொன்னார். அந்த தருணத்தில்கூட என்னைக் காட்டிலும் எனக்குள்ளே இருக்கும் காங்கிரஸை மட்டுமே நேசித்தார்.
தன்னுடைய கடைசி நாட்களை ஆன்மிகத்தின் பக்கம் திருப்பிய அரசு அண்ணன், சிவகங்கையில் ஒரு ஆலயத்தின் தர்மகர்த்தாவாகவும் இருந்தார். பல்வேறு அரசியல் தளங்களில், அரசுப் பதவிகளில் அமர்ந்திருக்க வேண்டியவர் அரசு. அதற்குரிய ஆளுமையும் தகுதியும் திறமையும் அவரிடம் இருந்தது. ஆனால், கடைசிவரை அவருக்கு வாய்ப்புக் கிட்டவே இல்லை.
அந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்து கவுரவிக்க மறந்தவர்களும், அடிபட்டு மிதிபட்டு கட்சி வளர்த்த அந்த மனிதர் காலமானபோது, துக்கம் விசாரிக்கக்கூட போக மனமில்லாத பெரிய மனிதர்களும் சிவகங்கை காங்கிரஸில் இன்னமும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில்தான் நாங்களும் காங்கிரஸ் பேரியக்கத்தை கண்ணியத்துடன் தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்கிறோம்!
(கட்சி என்று இருந்தால் யார் வேண்டுமானாலும் வாய்ப்புக் கேட்கத்தான் செய்வார்கள். அதுதானே உட்கட்சி ஜனநாயகம். அப்படித்தான் ஒருவர் மக்களவைத் தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். அத்திப்பூத்தார் போல் அவரது பெயரும் வேட்பாளர் பட்டியலில் பிரதானமாகப் பேசப்பட்டது. சிவகங்கைக்காரர்கள் சொந்த வேலையாக டெல்லி பக்கம் போனாலே, சுர்ரென்று பார்ப்பவர்கள் சும்மா இருப்பார்களா..? அவருக்கு என்ன ஆனதென்று அடுத்து பார்ப்போம்.)
முந்தைய அத்தியாயத்தை படிக்க:
சிவகங்கையும் சிதம்பரமும் - 17