”கட்டுக்கதைகளை வரலாறு என்கிறது தேசிய கல்விக் கொள்கை” : வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர்


புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காது, தமிழகத்துக்குள் அனுமதிக்காது; மாநிலத்துக்கான தனி கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், தேசிய கல்விக் கொள்கையானது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலே அமல்படுத்தப்பட்டுவிட்டது. ஏற்கெனவே, தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் மறைமுகமாக நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் கல்வி செயற்பாட்டாளர்களால் சந்தேகிக்கப்படுகிறது.

சாவகாசமாக ஆங்காங்கே தகவல்களை சேகரித்துக்கொண்டு ஒரு கற்பனைக் கதையை அவிழ்த்துவிடுபவர்களுக்கும் வரலாற்றாசிரியருக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நுட்பமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்நாட்களில் கட்டுக்கதைகளை வரலாறென பொது மேடைகளில் பேசுபவர்களை நாம் சரியாக அடையாளம் காண வேண்டும்.

பொதுச் சமூகத்திலோ இக்கொள்கை குறித்த புரிதல் இன்னும் பரவலாகவில்லை. இதை மனத்தில் நிறுத்தி அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி, அனைத்திந்திய கல்வி பாதுகாப்பு மாநாட்டை அக்டோபர் 30, 31 தேதிகளில் சென்னை, கொல்கத்தா மற்றும் புதுடெல்லியில் நடத்தியது. இதில் நாடு முழுவதிலும் இருந்து கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வி செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளர்களாக வரலாற்றாசிரியர் இர்பான் ஹபிப், யூஜிசி முன்னாள் தலைவர் சுகதோ தோரத், மைசூர் ஜேஎஸ்எஸ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், பேராசிரியர் கருணானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினர்களில் ஒருவரவாகப் புகழ்வாய்ந்த வரலாற்றாசிரியரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் கவுரவ பேராசிரியருமான ரொமிலா தாப்பர் அழைக்கப்பட்டிருந்தார். டெல்லியில் இருந்து அவர் ஆற்றிய உரை, சென்னை ஆழ்வார்பேட்டையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மபொசி அரங்கத்தில் நேரலை செய்யப்பட்டது.

சரியான கேள்விகளை எழுப்புங்கள்!

கல்வியே எதிர்காலத்துக்கான அச்சாணி. ஆகவே, எத்தகைய கல்வியை இனிவரும் சந்ததியினருக்கு அளிக்கப்போகிறோம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பு. அப்படிப்பட்ட கல்வியின் முக்கியப் பிரிவான வரலாற்றுப் பாடத்தைத் தேசிய கல்விக்கொள்கை திரித்துவிட்டது என்று தனது வாதத்தை வரலாற்று ரீதியாக முன்வைத்துப் பேசினார் ரொமிலா தாப்பர். அவர் எழுதிய, ‘முற்கால இந்தியா: தொடக்கக்காலத்திலிருந்து கிபி 1300வரை’ உள்ளிட்ட புத்தகங்கள் ஒட்டுமொத்த இந்திய சமூக-பண்பாட்டு-அரசியல் தளத்தில் பேரதிர்வை ஏற்படுத்தியவை. அடிப்படைவாதம் கட்டியெழுப்பும் வெறுப்பரசியலையும் போலி பெருமிதத்தையும் தவிடுபொடியாக்கும் வரலாற்று ஆதாரங்களை அவர் எழுத்து முன்வைத்தது. அதற்காகவே, ஜனநாயக சமயச்சார்பற்றவர்களால் கொண்டாடப்பட்டார்.

அமெரிக்காவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் ‘க்ளஜ் பரிசு’ வழங்கப்பட்டது. உலகின் தலைசிறந்த 6 பல்கலைக்கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டமளித்தன. 2 தசாப்தங்களுக்கும் மேலாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அங்கு வரலாற்று ஆய்வு மையத்தைத் தோற்றுவித்தார். பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் கவுரவப் பேராசிரியராக பணியாற்றும் சிறப்பந்தஸ்து பெற்றார். மறுபுறம் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்க்கொண்டார். 2019-ல் அவருடைய சிறப்பந்தஸ்து மறுபரிசீலனை செய்யபடுவதாக அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதையும் துணிந்து எதிர்த்து நின்றார். தற்போது தன்னுடைய 89 வயதிலும் ஆராய்ச்சி, கற்பித்தல், எழுத்துப்பணி ஆகியவற்றில் தீவிரம் குறையாமல் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கையின் அபாயங்களை முன்வைத்து நடத்தப்பட்ட மாநாட்டில், ரொமிலா தாப்பர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரை இதோ:

கல்வி என்பது பரந்துவிரிந்த புலம் என்பதால், பாடப்புத்தகம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் இங்கே பேச விரும்புகிறேன். பாடப்புத்தகம் என்பதே மிகவும் உதாசீனப்படுத்தப்படுகிறது. ஏனப்படி சொல்கிறேன் என்றால், பாடப்புத்தகத்தின் உண்மையான நோக்கம் இங்குப் புறம் தள்ளப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை பாடப்புத்தக்கத்துக்கு 2 செயல்பாடுகள் உள்ளன. ஒன்று பாடம் தொடர்பான அடிப்படைத் தகவல்களை அளித்தல். 2-வது, மாணவர்களை சரியான கேள்விகளைக் கேட்கத் தூண்டுதல். தான் என்ன படிக்கிறோம், ஏன் அதைப் படிக்கிறோம் என்பதை மாணவர்கள் உணரச் செய்தல். என்னுடைய ஆராய்ச்சிக் களமான, ’முற்கால இந்தியாவின் வரலாறு’ என்பதிலிருந்தே பேசுகிறேன். அதன் அடிப்படையில்தான் நான் 6, 7-ம் வகுப்புக் குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்களை இயற்றினேன்.

சாதியம் வேரூன்றியது எப்படி?

கடந்த காலத்தை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் இருந்துதான், ஒரு வரலாற்றுப் புத்தகம் தொடங்க வேண்டும். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆர்வத்தினால் கடந்த காலத்தை அறிந்துகொள்ளலாம். முற்காலத்தில் நமக்கு என்ன நிகழ்ந்தது என்பதை தெரிந்துகொள்ள கற்கலாம். நாம் எங்கிருந்து வந்தோம், மூதாதையர் யார் என்பதை தெரிந்துகொள்ள விருப்பப்படலாம். அதே நேரத்தில், இந்த தகவல்களை மிகவும் கவனத்துடன் அணுகத் தவறினால் பிரிவினை வாதத்துக்கே இட்டுச்செல்லும். சிலருக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்கத் தூண்டும் மற்றவர்களைத் தாழ்வான நிலைக்குத் தள்ள நிர்பந்திக்கும். இத்தகைய ஏற்றத்தாழ்வைக் கவனமாகக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். சாதிய அமைப்பு இந்தியச் சமூகத்தில் வேரூன்றியதும் இப்படித்தான். முன்காலத்தில், சடங்குகளை செய்தவர்களும் தன்னகத்தே உலகுக்கு அப்பாற்பட்ட சக்தி இருப்பதாகக் காட்டிக் கொண்டவர்களும் மற்றவர்களைக் காட்டிலும், தான் மெத்தப் படித்தவராக பிரகடனம் செய்து கொண்டவர்களும் ஒசத்தியானவர்களாக கருதப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது.

உதாரணத்துக்குப் பிராமணர்கள் இத்தகைய காரணங்களுக்காக உயர்வானவர்களாகக் கருதப்பட்டனர். மற்றவர்களுக்கு வெவ்வேறு விதமான உடலுழைப்புச் சார்ந்த பணிகள் கொடுக்கப்பட்டு, அதற்கேற்ற மாதிரி அவர்களுடைய அந்தஸ்தும் தீர்மானிக்கப்பட்டது.

சாதியத்தை எதிர்த்தவர்கள்!

வேறு சில கேள்விகளும் வரலாற்றாசிரியர்களால் எழுப்பப்படுகிறது. கடந்த காலத்தில் இருந்து இன்றுவரை நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் என்ன என்பது குறித்தும் வரலாறு சிந்திக்கத் தூண்டும். ஏன், சில பழக்கவழக்கங்கள் வழக்கொழிந்து போயின? ஏன், சிலது நீடிக்கின்றன? இந்த அடிப்படையில்தான் பண்பாட்டை வரலாற்றாசிரியர்கள் ஆய்வு செய்யத் தொடங்கினார்கள். பண்பாடு எனும்போது ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைமுறையைக் குறிப்பதாகும். வெறும் தத்துவம், கலைகளை மட்டுமல்ல. வரலாற்றை படித்தல் என்பது உயர் அந்தஸ்தைத் தனதாக்கிக் கொண்ட பிராமணர்கள், சத்திரியர்கள், ராஜ வம்சத்தினர், வைசியர், நிலசுவான்தார் பற்றி மட்டுமே ஆய்வு மேற்கொள்ளுதல் என்ற நிலையிலிருந்து, மேற்கூறியவர்களுக்கு உடல் உழைப்பை நல்கிய சூத்திரர்கள் பற்றிப் பேசுவதாக மாறியது. அதைத் தொடர்ந்து, சாதிய அமைப்பை எதிர்த்து நின்ற ’அவர்ணர்’களைப் பற்றியும் அவர்களில் தீண்டத்தகாதோராக மாற்றப்பட்டவர்களைப் பற்றியும் வரலாறு இன்று பேசத் தொடங்கியுள்ளது. ஆக, இன்று வரலாற்று ஆய்வுகள் மன்னர்கள், அவர்கள் தொடுத்த போர்கள், அரசியல் நிகழ்வுகள் குறித்து மட்டுமே ஆய்வுச் செய்துகொண்டிருப்பதில்லை. சமூகத்தில் உள்ள அத்தனை குழுக்களைப் பற்றியும் வரலாற்றாசிரியர்கள் ஆய்வு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

அதேபோல சமூகம் என்பது அசைவற்று உறைந்துகிடப்பதல்ல; ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல மாறுதல்களை சமூகம் கண்டு வந்திருக்கிறது. இத்தகைய மாற்றங்களால் புதிய வரலாறுகள் படைக்கப்படுகின்றன. இந்நிலையில் எது இத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது என்ற கேள்வியை வரலாற்றாய்வாளர்கள் எழுப்ப வேண்டும்.

மாணவர்கள் வரலாறு பாடத்தைப் படிக்கும்போது, ஏன் சமூகம் மாறி வந்திருக்கிறது என்பதை உற்றுநோக்க வேண்டும். கடந்த காலத்தில் மாறிய வரலாறு எதிர்காலத்திலும் மாறும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இன்று நாம் எதிர்கொள்ளும் அரசியல்- சமூகச்சூழல் மாற்ற முடியாததல்ல. அவற்றை நம்மால் மாற்ற முடியும் என்பதை மாணவச்செல்வங்கள் உணர வேண்டும்.

அதற்கு மாணவர்கள் கேள்விக்கணைகளைத் தொடக்கும் கற்றல் சூழல் உருவக்கப்பட வேண்டும். இந்தப் பின்னணியில்தான் ஆன்லைன் கற்றல் முறை கல்வியின் முழுமையாக நோக்கத்தை அடைய உதவாது என்கிறேன். ஏனெனில் கேள்விகளை எழுப்பி, அதற்கான விடைகளைத் தேடி, கலந்துரையாடலில் ஈடுபடுதல் ஆன்லைன் கற்றல் முறையில் சாத்தியப்படாதது. மறுமுனையில் ஆசிரியர்கள், அறிவும் தகவல்களும் ஊட்டுபவராக மட்டுமல்லாமல் பெற்ற அறிவை எப்படி பயனுள்ள விதமாக மாற்றலாம் என்பது குறித்த பார்வையும் ஊட்டக்கூடியவர்களால் இருத்தல் அவசியம்.

அதிலும் வரலாறு என்பது ஆதாரங்களின் அடிப்படையில் நிகழ்வுகளைக் கோர்ப்பதாகும். கட்டுக்கதைகளை வைத்தோ புராண இதிகாசங்களை வைத்தோ புனைவது அல்ல வரலாறு. புராணங்களும் இதிகாசங்களும் கற்பனையைத் தூண்டும். ஆனால், அதுவல்ல வரலாறு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதுவும் நிரூபிக்கப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்களே வரலாறாகக் கருதப்படுகின்றன.

திராவிட மொழியே மூத்தது!

மொழியியலை வரலாற்று ஆர்வலர்கள் அறிந்து வைத்திருப்பதும் மிகவும் அவியப்படுகிறது. அதிலும் பண்டைய காலத்தையும் மத்திய காலத்தையும் ஆராய்ச்சி செய்வதானால், மொழியியல் அறிவு கட்டாயம் அவசியம். எந்த மொழி மற்றொரு மொழியின் மீது தாக்கம் செலுத்தியது என்பதைப் புரிந்துகொள்ளவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வேத நூல்களில் உள்ள இந்தோ-ஆரிய மொழியில் திராவிட மொழியின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான் பேசிக் கொண்டிருப்பது வெறும் மொழி தொடர்பான சங்கதி அல்ல; இது வரலாற்றைப் புரிந்து கொள்வது. நிகழ்காலத்தை அறிந்து கொள்வது. இதிலிருந்து என்ன தெரிய வருகிறது? இந்தோ-ஆரிய மொழிகளையும் திராவிட மொழிகளையும் பேசியவர்கள் ஒரே இடத்தில் வசித்தார்கள். இரு குழுக்களுக்கும் இடையில் பண்பாட்டுப் பரிமாற்றம் இருந்திருக்கிறது. இது வரலாற்றாசிரியர்கள் அண்மையில் கண்டடைந்த புதிய உண்மை. இதன் நம்பகத்தன்மை மரபணு ஆராய்ச்சி மூலமாகவும் ஆராயப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தோ-ஆரிய மொழி பேசியவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து சிறு சிறு குழுக்களாக வெவ்வேறு காலகட்டங்களில் இடம்பெயர்ந்து வட இந்தியாவில் குடியேறினார்களா அல்லது அவர்களும் இந்த மண்ணில் பூர்வக்குடிகளா என்ற ஆய்வு நோக்கில் புதிய திருப்பங்கள் வரத் தொடங்கி இருக்கிறது.

ஏன் வரலாறு படிக்கிறோம்?

வரலாற்று ஆய்வுமுறையில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப மாறுதல்கள், கடந்த காலத்தை கட்டமைக்கும் போக்கிலும் மாற்றங்களை உண்டாக்கத் தொடங்கி இருக்கிறது. உதாரணத்துக்கு, காலவரிசையைக் கணிக்க கார்பன் காலக்கணிப்பு முறை பயன்படுகிறது. லேசர் தொழில்நுட்பம் பூமிக்கு அடியில் உள்ள படிமங்களை ஆராய உதவுகிறது. மீண்டும் ஆரம்பத்தில் கேட்ட கேள்விகளுக்கே வருகிறேன். ‘ஏன் வரலாறு படிக்கிறோம்?’, ‘கடந்த காலத்தை குறித்த புரிதலை வரலாறு எவ்வாறு ஏற்படுத்துகிறது?’

முதலில், முறையாகப் பயிற்சி பெற்ற வரலாற்றாசிரியர் யாரெனத் தெரிந்துகொள்ளுதல் அவசியம். அறிவியல்பூர்வமாக திரும்பத் திரும்ப சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் தர்க்கரீதியாக கருதுகோளை முன்வைப்பவரே வரலாற்றாசிரியர். சாவகாசமாக ஆங்காங்கே தகவல்களை சேகரித்துக்கொண்டு, ஒரு கற்பனை கதையை அவிழ்த்துவிடுபவர்களுக்கும் வரலாற்றாசிரியருக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நுட்பமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்நாட்களில், கட்டுக்கதைகளை வரலாறென பொது மேடைகளில் பேசுபவர்களை நாம் சரியாக அடையாளம் காண வேண்டும்.

வரலாற்று ஆராய்ச்சி முறையை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆனால், இப்படி முறையாகப் பயிற்சி பெற்ற வரலாற்றாசிரியர்கள் முன்வைத்த கருதுகோளைத் தாங்கி நிற்கவில்லை தேசிய கல்விக் கொள்கை. இதுவரை நான் பேசிய வரலாற்று ஆராய்ச்சி முறை தேசிய கல்விக் கொள்கை கொண்டுவந்திருக்கும் புத்தகங்களில் காணக்கிடைக்கவில்லை.

முறையாகப் பயிற்சி பெற்ற வரலாற்றாசிரியர்களின் கருத்தாக்கத்தைத் தாங்கி நிற்கும் புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டால், அவற்றை திறம்படப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் பெருமக்கள் வாய்த்தால் மட்டுமே அறிவார்ந்த புதிய தலைமுறையை வளர்த்தெடுக்க முடியும். அத்தகைய மாணவர்கள் என்ன படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம் என்ற இரண்டையும் அறிந்துவைத்திருப்பார்கள். அத்தகைய மாணவர்கள்தாம் கல்வி அறிவு மிகுந்த, அர்த்தமுள்ள குடிமக்களாக எழுவார்கள்.

x