வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து: சமூகநீதியின் அடித்தளத்தில் விழுந்த அடி!


உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டத்தை, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று(நவ.1) ரத்து செய்திருக்கிறது. இந்த இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசு அளித்த தகவல்கள் போதுமானது அல்ல என்றும் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இடஒதுக்கீட்டின் பெயரால் சமூக நீதியை தழைக்க விட்ட மண்ணில், இப்படி நீதிமன்ற குட்டுக்கு ஆளாகியிருப்பது மோசமான முன்னுதாரணம்.

மிகவும் பிற்பட்டோர் வரம்புக்குள் வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, நடப்பாண்டு பிப்ரவரியில் அப்போதைய அதிமுக அரசு சட்டம் இயற்றியது. வன்னியர் சமூகத்தின் சார்பில் நீண்ட காலமாக பாமக இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பாக, அரசு சார்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டம் அறிவிப்பானது. மிகவும் பிற்பட்டோருக்கான 20 சதவீதத்தில் 10.5 சதவீதத்துக்கு உள் இடஒதுக்கீடாக வன்னியர்களுக்கு சேரும். அதாவது வன்னியகுல சத்திரியர் என்ற தொகுப்பின்கீழ், வன்னியர் உட்பட அதையொட்டிய ஒரு சில சாதியினருக்கு இந்த 10.5 சதவீதம் சேரும். மிச்சமுள்ள 9.5 சதவீதத்தில், 7 சதவீதம் எம்பிசி-யின் சீர் மரபினருக்கும், எஞ்சிய 2.5 சதவீதம் இதர சாதியினருக்கும் சென்று சேரும்.

உள் இடஒதுக்கீடு கோரிய பாமக போராட்டம்

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று இந்த இதர சாதியினர், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஆரம்பித்தனர். அவ்வாறான மனுதாரர்களின் வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளி சங்கர் அடங்கிய அமர்வு விசாரித்தது. சாதி வாரி கணக்கெடுப்பு உட்பட முறையான வரையறுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இல்லாது, இதுபோல உள் ஒதுக்கீட்டை வழங்க முடியுமா? உள் ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? சாதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்க முடியுமா? என சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்துள்ளனர். இந்தக் கேள்விகளின் முன்னே வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு முடிவு தகர்ந்திருப்பது போல, இதர இடஒதுக்கீடுகளும் கேள்விக்கு ஆளாகலாம். மேலும் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அரசு தரப்பிலான விளக்கங்கள் போதுமானதாக இல்லை என்பதும் தற்போதைய திமுக அரசை நோக்கி வன்னிய மக்கள் விரல் நீட்டவும் காரணமாகி இருக்கிறது.

இடஒதுக்கீடு-சமூக நீதி என தேசத்துக்கே முன்னோடியாக விளங்கிய தமிழகத்தில், அரசியல் நோக்கங்களால் அவசரத்தில் அள்ளித்தெளித்த கோலமாய் நிறைவேற்றப்பட்ட உள் இடஒதுக்கீடு சட்டம், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பது மோசமான முன்னுதாரணம் ஆகும். உயர் நீதிமன்றக் கிளை வினவியது போல, சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை தீர்மானிப்பது எனில், இதற்கு முந்தைய எந்த இடஒதுக்கீடும் திடமாய் நிற்காது. இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக்கி தமிழக அரசு இதற்கு முன்னர் கொண்டுவந்த இஸ்லாமியர் மற்றும் அருந்ததியர் சமூகங்களுக்கான உள் இடஒதுக்கீட்டையும் கேள்விக்குள்ளாக்கும் ஆபத்து நேர்ந்திருக்கிறது. வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான பெருமை அதிமுகவுக்கு சென்றதுபோல, இதர இடஒதுக்கீடுக்கான பெருமை திமுக வசமுள்ளது.

இபிஎஸ், ஓபிஎஸ் உடன் ராமதாஸ்

இடஒதுக்கீட்டை முன்வைத்த, வன்னியர்களுக்கான பாமகவின் போராட்டம் நாற்பதாண்டு பின்புலம் வாய்ந்தது. சமுதாய மக்கள் மத்தியில் கட்சி பெயர் பெற்றதும், போராட்டங்களில் வளர்ந்ததுமே அதன் வரலாறு. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் நெருக்கடியில், அடிப்படையில் ஒழுங்காக கட்டமைக்கப்படாத சட்டத்துக்கு, பெரும் சாதனை படைத்துவிட்டதாக பாமக பெருமை கொண்டது. ’இந்த வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது’ என்று சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுகவின் ஆ.பி.உதயக்குமார் போன்றவர்கள் வெளிப்படையாகவே பேசினார்கள். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதில், தென் தமிழகத்தில் தங்களுக்கான வாக்குகள் சரிந்ததாகவும், ஆட்சி பறிபோனதில் அதற்கும் பங்கு உண்டென ஆதங்கம் இப்போதும் அதிமுகவை வருத்தி வருகிறது. அடுத்து வந்த திமுகவும் வட தமிழகத்தின் ஓட்டு வங்கியை சதாய்க்க விரும்பாது, வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்துக்கு அரசாணை வழங்கி முழுமையாக்கியது. ஆனால் நீதிமன்ற முன்னெடுப்புகளில், அரசு தரப்பில் போதுமான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் வழக்கு ரத்தாகி இருக்காது என்று பாமகவினர் புலம்புகின்றனர். ஒட்டுமொத்தத்தில் தேர்தல் அரசியலின் முக்கிய 3 கட்சிகளுமாக, ஒரு பின்தங்கிய சமூகத்தின் அடுத்த தலைமுறைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பின் நம்பிக்கைகளை குலைத்திருக்கின்றன.

உள் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றும்போதே அதைத் தாங்கிப் பிடிக்கும் காரணிகளுக்கு வலு சேர்ப்பது, தாங்கள் பாதிக்கப்படுவோம் என்று அஞ்சும் பிற சமூகத்தினரின் அபயக் குரலுக்கு காதுகொடுப்பது, தொலைநோக்கிலான சட்டக் கட்டுமானம் ஆகியவற்றை செய்திருப்பின் இப்போது வன்னியர்கள் வேதனையில் விழுந்திருக்க மாட்டார்கள். ’உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்கள் சமூகநீதிக்கு பாதகமானவை. அவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இப்போது நடைமுறையில் உள்ள அனைத்துப் பிரிவு இடஒதுக்கீடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன’ என்று டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியிருப்பது, 2 திராவிட கட்சிகளுமே உணர வேண்டியவை. இந்த 2 கட்சிகளும் பங்குபோட்டுக்கொள்ளும் பலமான சமூகநீதிக்கு இப்போது பங்கம் நேர்ந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை முன்வைத்து எவரும், இதர இடஒதுக்கீடு/ உள் இடஒதுக்கீட்டை நீதிமன்றங்களில் கேள்விக்குள்ளாக்கும் முன்னர், வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கின் மேல்முறையீட்டில் உருப்படியான விளக்கங்களை தர வேண்டியது தற்போதைய அரசின் கடமை.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது. இட ஒதுக்கீடு என்பதை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என்ற கண்கொண்டே பார்ப்பது அதிகரித்து வரும் போக்குதான் அது. அரசியலமைப்பில் இன்னமும் இட ஒதுக்கீடு தொடர்வதற்கு காரணம், குறிப்பிட்ட சாதியினரின் பொருளாதார மேம்பாட்டு நோக்கங்கள் அல்ல. மக்களை வறுமையிலிருந்து விடுவிக்கவும், கல்வி, பொருளாதாரத்தில் மேம்படுத்தவும் நாட்டில் ஏராளமான சட்டங்கள், திட்டங்கள் உள்ளன. சமூக அடுக்கில் ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு கிடக்கும் மக்களை கைதூக்கி விடவே இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. சுய சாதிப் பெருமையும், இதர சாதிகளை பாகுபடுத்தும் வெறியும் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதால் அதன் உண்மையான நோக்கம் அடிபட்டுப் போகலாம். அது அவர்களை மேம்படுத்தும் என்பதை விட, அவர்களால் ஒடுக்கப்படும் மக்கள் மீதான பாகுபாடுகளை இன்னும் அதிகரிக்கவே செய்யும். இதை இட ஒதுக்கீடு கோரும் எல்லா சாதியினருமே உணர்ந்தாக வேண்டும். ஏனெனில், சாதிய அடுக்கில் எல்லா சாதிகளுக்கும்கீழே இன்னொரு சாதி இங்கே இருக்கவே செய்கிறது. இந்த சாதிய இடைவெளியும், விலக்கமும் அவற்றால் விளையும் சமூகக் கேடுகளும் தொடரும் பட்சத்தில், இந்த இடஒதுக்கீட்டின் ஆதார நோக்கமே அற்றுப்போகும்.

x