குரூப் 4 தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு @ அரியலூர்


அரியலூர் அடுத்த கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் குரூப்- 4 தேர்வு எழுதும் மையத்தை பார்வையிட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா.

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற குரூப் – IV தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி- IV (குரூப் – IV) தேர்வு நடைபெறும் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விநாயகா கல்வி நிறுவனத்தில் உள்ள தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் -4 தேர்வுகள் (ஜூன் 09) இன்று நடந்தது. அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களிலும் 87 தேர்வு மையங்களில் 24,745 தேர்வாளர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அதில் 19,821 பேர் தேர்வெழுதினர். 4,860 பேர் தேர்வெழுத வரவில்லை.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் இத்தேர்வின் கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 4 பறக்கும் படை அலுவலர்கள், 18 இயங்கும் குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் தேர்வுக் கூட நடைமுறைகளை கண்காணித்திட 87 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

தேர்வு பாதுகாப்புப் பணிக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆட்சியர் ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்த வேல், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.