முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கக் கோரி, அதிமுக 5 மாவட்ட விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தத் தயாராகி வருகிறது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடியைத் தேக்கிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 3 முறை 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு தமிழகத்துக்கான உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது முல்லை பெரியாறு அணையின் 136 அடியாக இருக்கும் போதே, அணையின் 2 ஷட்டர்கள் திறக்கப்பட்டு வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இடுக்கி அணையையே கேரள அரசு திறந்துவிட்டிருக்கும் நிலையில், முல்லை பெரியாறு அணையின் உபரிநீர் மட்டுமே திறக்கப்படுவதாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இது தொடர்பாக மதுரை அண்ணாநகரில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை சற்றுமுன்னர் நடத்தினார். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், முல்லை பெரியாறு அணையின் போராடிப் பெற்ற நமக்கான உரிமையை திமுக குடும்பத்தின் சுயலாபத்துக்காக விட்டுக்கொடுக்க முடியாது என நிர்வாகிகள் பலரும் காரசாரமான கருத்துகளை எடுத்துவைத்ததாகச் சொல்லப்படுகிறது. கேரளத்தில் அண்ணாத்த படம் ரிலீஸுக்கு எந்தச் சிக்கலும் வரக்கூடாது என்பதற்காகவும் திமுக தரப்பில் இப்படி நடந்து கொள்வதாகவும் நிர்வாகிகள் சிலர் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காமதேனுவிடம் பேசிய அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர், “முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாட்டைக் கண்டித்தும் அணையில் 142 அடி தண்ணீரை தேக்க வலியுறுத்தியும் நவம்பர் 7-ம் தேதி 5 மாவட்ட விவசாயிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து நாளை முறைப்படி அதிமுக தலைமைக் கழகம் அறிவிக்கும்” என்றார்.